Pages

Aug 14, 2012

வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்த் இந்திய மாண்வர்

தில்லியைச் சேர்ந்த 16 வயது மாணவர் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார். அந்த வால் நட்சத்திரத்தின் பெயர் SOHO 2333 என்பதாகும். பிரபுல் சர்மா என்னும் அந்த மாண்வர் தில்லியில் உள்ள ஒருபள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பிரிட்டிஷ் வானவியல் அசோசியேஷன் பிரபுல் சர்மாவின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்திய்ள்ளதுடன், அவரது கண்டுபிடிப்பை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
சோஹோ செயற்கைக்கோள்
பொதுவில் வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. ஆனால் அமெரிக்க நாஸா அமைப்பும், ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் சேர்ந்து செலுத்திய செயற்கைக்கோள் எடுக்கும் படங்கள்  சூரியனுக்கு அருகாமையில் தென்படக்கூடிய வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கியுள்ளன.

இந்த இரு விண்வெளி அமைப்புகளும் சேர்ந்து 1995 ஆம் ஆண்டில் SOHO ( Solar Heliospheric Observatory) எனப்படும் செயற்கைக்கோளை வானில் செலுத்தின. இந்த செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி அமைப்பு உருவாக்கியது.இரு அமைப்புகளும் உருவாக்கிய 12 கருவிகள் இதில் இடம் பெற்றன. நாஸா இதை உயரே செலுத்தியது.

சோஹோ பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் அமைந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனை 24 மணி நேரமும் ஆண்டில் 365 நாட்களும் தொடர்ந்து ஆராய்ந்து வருவதே இந்த செயற்கைக்கோளின் நோக்கம். அந்த வகையில் அது சூரியனைத் தொடர்ந்து படம் பிடித்து அனுப்பி வருகிறது. குறிப்பாக சூரியனிலிருந்து வெளிப்படும் சீற்றங்கள், ஆற்றல் மிக்க துகள் கூட்டங்கள் ஆகியவை படம் பிடிக்கப்படுகின்றன.
சோஹோவில் உள்ள் ஒரு கருவியால் சூரிய ஒளித் தட்டு மறைக்கப்பட்டு ள்ளதைக் கவனிக்கவும்
சூரிய ஒளித் தட்டை மறைத்தால் தான் சூரியனிலிருந்து வெளிப்படும் சீற்றங்களைப் படமாக்க முடியும்.அதாவது ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கின் அருகே அகல் விளக்கை வைத்தால் அகல் விளக்கு இருக்கிற இடமே தெரியாது.ஆனால் ஒரு பலகையால் பெட்ரோமாக்ஸ் விளக்கை மறைத்தால் அகல் விளக்கு இருப்பது தெரியும்.அது போல சூரியனை மறைத்தால் தான் சூரியனிலிருந்து வெளிப்படுகின்ற சீற்றம் தெரியும்.

தவிர, விண்வெளியிலிருந்து பார்த்தால் வானம் கரிய நிறத்தில் காணப்படும். சூரியன் மட்டுமன்றி நட்சத்திரங்களும் தெரியும். ஆகவே தான் சூரிய ஒளித் தட்டை மறைத்தால் வால் நட்சத்திரங்கள் நன்கு தென்படுகின்றன.

ஆகவே சோஹோ செயற்கைக்கோளில் சூரியனை மட்டும் மறைக்க வட்ட வடிவிலான கருவி உள்ளது.   சூரிய ஒளித் தட்டு மறைக்கப்படும் போது சூரியனிலிருந்து வெளிப்படுகின்ற அனைத்தையும் காண முடிகிறது. அதே நேரத்தில் சூரியனுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய வால் நட்சத்திரங்களையும் சோஹோ எடுக்கும் படங்களில் காண முடிகிறது.
சோஹோ எடுத்த ஒரு ப்டத்தில் நீண்ட வால் நட்சத்திரம் 
சோஹோ தொடர்ந்து படங்களை அனுப்புகிறது. இவற்றை யார் வேண்டுமானாலும் பெற முடியும்.வானவியலில் ஆர்வம் கொண்ட  பிரபுல் சர்மா போன்ற மாணவர்களும், அமெச்சூர் வானவியல் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து இப்படங்களை ஆராய்ந்து சூரியனின் அருகே புதிதாக வால் நட்சத்திரங்கள் தெரிகின்றனவா என்று கவனிப்பார்கள்.
பல வால் நட்சத்திரங்களைக் காட்டும் சோஹோ படம் 
வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் இருந்து வருபவை. அவை நீள் வட்டப் பாதையைப் பின்பற்றி சூரியனை நோக்கிக் கிளம்பும். சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே திரும்பி விடும். எண்ணற்ற வால நட்சத்திரங்கள் இவ்விதம் சூரியனைச் சுற்றிவிட்டுத் திரும்புகின்றன.

ஆகவே சோஹோ எடுக்கும் படங்களில் புதிது புதிதாக வால் நட்சத்திரங்கள் தெரிந்து கொண்டே இருக்கும். இவற்றில் ஏற்கெனவே அறியப்பட்டவை எவை புதிதாகத் தலை காட்டியுள்ள வால் நட்சத்திரங்கள் எவை என்று கண்டுபிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பிரபுல் சர்மா கண்டுபிடித்த சிறிய வால் நட்சத்திரம் மக்கோல்ட்ஸ் எனப்படும் ஒரு பெரிய வால் நட்சத்திரம் உடைந்த போது தோன்றிய துண்டு என்று கருதப்படுகிறது.

 சோஹோ  செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதிலிருந்து இதுவரை 2300 க்கும் மேற்பட்ட  வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.எனினும் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம் வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது அல்ல.
சூரியனிலிருந்து வெளிப்படும் சீற்றத்தைக் கவனிக்கவும்
சூரியனில் ஏற்படும் சீற்றம் போன்றவை பூமியைச் சுற்றுகின்ற எண்ணற்ற செயற்கைக்கோள்களைப் பாதிக்கலாம். பூமியில் பல்வேறு நாடுகளின் மின்சார இணைப்புத் தொகுப்பைப் பாதிக்கலாம். தகவல் தொட்ர்பு வசதிகளைப் பாதிக்கலாம். அந்த அளவில் சூரியனை ஆராய்வது தான் சோஹோவின் பிரதான நோக்கமாகும்.

சோஹோ படங்கள் மூலம் சூரியனுக்கு அருகே தென்படும் வால் நட்சத்திரங்களை மட்டுமே காண முடியும். சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற -- சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கின்ற  வால் நட்சத்திரங்கள் சோஹோவின் படங்களில் தெரியாது. அவ்வித வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்க சக்தி மிக்க டெலஸ்கோப் தேவை..

3 comments:

  1. பெருமைப் பட வேண்டிய தகவல் ஐயா...

    பிரபுல் சர்மா அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி..

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.வாழ்த்துக்கள்
    சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/03/blog-post_7.html?showComment=1394170736456&m=1#c2285551787432289175
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete