Aug 4, 2012

சூரியனைச் சுற்றி வளையம்: கோவை வானில் அதிசயம்

Share Subscribe
கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில்ஆகஸ்ட் மூன்றாம் தேதி வெள்ளியன்று நடுப்பகல் வாக்கில் வானில் அதிசயக் காட்சி ஒன்று தென்பட்டது. சூரியனைச் சுற்றி ஒரு வளையம் காணப்பட்டது. பலருக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

முதலாவதாக ஒன்றைத் தெளிவு படுத்தியாக வேண்டும். சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் வளையமோ சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த பஞ்சு மேகங்களால் உண்டாவதாகும்.. ஆகவே  இது சூரியனுக்கு அருகில் ஏற்படுகின்ற வளையம் அல்ல்.

உலகில் எந்த இடமானாலும் தலைக்கு மேலே மேகங்கள் தென்படும். இந்த மேகங்கள் பலவகைப்பட்டவை.வெவ்வேறு மேகங்கள் வெவ்வேறு உயரங்களில் அமைந்திருக்கும். அதாவது எல்லா மேகங்களும் ஒரே உயரத்தில் அமைந்தவை அல்ல. அந்த வகையில் பஞ்சு(Cirrus)  மேகங்கள் வெப்ப மண்டல நாடுகளில் சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும்.
சூரியனைச் சுற்றி வளையம்
பஞ்சு மேகங்களிலேயே பல வகை உண்டு. இந்த பஞ்சு மேகங்களில் மிக மிக நுண்ணிய ஐஸ் துணுக்குகள் இருக்கும். இந்த ஐஸ் துணுக்குகள் தூசை விடச் சிறியவை சில சமயங்களில் இந்த பஞ்சு மேகம் நம் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு மெல்லிய படலமாகவும் அமைந்திருக்கலாம்.

சதுரம் என்பது நான்கு பக்கங்களைக் கொண்டது என்று நமக்குத் தெரியும். இந்த ஐஸ் துணுக்குகள் ஆறு பக்கங்களைக் கொண்டவை. பல லட்சம் ஐஸ் துணுக்குகள் ஒவ்வொன்றும் சூரிய் ஒளிக் கற்றைகளை 22 டிகிரி அளவுக்குத் திருப்புகின்றன. இதன் விளைவாகக் கீழே இருக்கின்ற நமக்கு சூரியனைச் சுற்றி  வானில் வளையம் அமைந்துள்ளது போன்ற காட்சி தென்படுகிறது.  இது மழைத் தூறல் இருக்கும் போது வானில் சூரியனுக்கு எதிர் திசையில் வானவில் தோன்றுவதைப் போன்றதே.

வானில் சூரியனைச் சுற்றி வளையம் தென்படுகின்ற நேரத்தில் பஞ்சு மேகங்களுக்கு மேலாகப் பறக்கின்ற ஒரு விமானத்தில் இருக்கும் பயணிகள் கீழ் நோக்கிப் பார்த்தால் அவர்களுக்கு சூரிய வளையம் எதுவும் தெரியாது. தவிர, இந்த பஞ்சு மேகங்களுக்கு மேலாக இருந்தபடி சூரியனைப் பார்த்தால் சூரியனைச் சுற்றி வளையம் எதுவும் தென்படாது.

இதல்லாமல் ஓரிடத்தில் சூரிய வளையம் தென்பட்டால்  அந்த வளையம் ஆப்பிரிக்காவில், ஆஸ்திரேலியாவில் தில்லியில், மும்பையில், கொல்கத்தாவில் உள்ளவர்களுக்கும் தென்படாது.  குறிப்பிட்ட வட்டாரத்துக்கு மேலே இருக்கின்ற ப்ஞ்சு மேகங்களால் இந்த வளையம் தோற்றுவிக்கப்படுகிறது. ஆகவே அந்த வட்டாரத்தில் மட்டுமே சூரிய வளையம் தெரியும்.  இதர இடங்களில் இந்த வான் காட்சி தென்படாது.
சந்திரனைச் சுற்றி வளையம். 
சுருங்கச் சொன்னால் சூரியனைச் சுற்றி அமைந்தது போலத் தோன்றும் சூரிய வளையம் காற்று மண்டல நிலைமைகளால் குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே ஏற்படுவதாகும்.உலகில் எவ்வளவோ இடங்களில் கடந்த காலங்களில அபூர்வமாக இப்படி சூரிய வளையம் தென்பட்டது உண்டு.

இரவு வேளைகளில் பௌர்ணமி நிலவைச் சுற்றியும் இப்படி வளையம் காணப்படலாம். ஒரு வித்தியாசம். சந்திரனைச் சுற்றிய வளையம் மங்கலாக இருக்கும்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விளக்கம் சார்... அறிந்து கொண்டேன்... நன்றி...

poornam said...

சூரியனைச் சுற்றி வளையம் பார்த்ததில்லை. ஆனால் சந்திரனைச் சுற்றி வளையம் பார்த்திருக்கிறேன். சந்திரனைச் சுற்றி வளையம் இருந்தால் மழை வரும் என்று கூறுவார்கள். சில முறை அம்மாதிரி மழை பெய்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இது அறிவியல் ரீதியாக உண்மையா, விளக்கம் கூற இயலுமா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

சூரியனைச் சுற்றி வளையம் தெரிந்தாலும் மழை பெய்யும் என்று சொல்வார்கள்.ஆனால் இந்த மழை சமாச்சாரம் மட்டும் இன்னும் பிடிப்டாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

நல்லூரான் said...

வணக்கம் அய்யா ,
வெவ்வேறு orientation களில் இருக்கும் கோடிக்கணக்கான ஐஸ் கிறிஸ்டல்களில் , ஒரு குறிப்பிட்ட radius ல் இருக்கும் கிறிஸ்டல் மட்டும் ஒளியை 22 டிகிரிக்கு திருப்புவது ஏன் ?

அந்த radius க்கு உள்ளே உள்ள கிறிஸ்டல்கள் ஏன் ஒளியை திருப்புவது/சிதறடிப்பது இல்லை ?

Post a Comment