Aug 31, 2012

ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கை ‘புயல்’

Share Subscribe

புயல்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைக் கண்டறிய முடிந்துள்ளது.புயல் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கூற முடிகிறது. அது நகரும் பாதையை ஓரளவுக்குக் கணித்துக் கூற முடிகிறது. ஆனால் புயல் பற்றி நம்மால் இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியவில்லை. புயல்களின் கடுமையை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய முடிவதில்லை. 2011 டிசம்பர் கடைசி வாக்கில் புதுவை மற்றும் கடலூர் பகுதியைத் தாக்கிய தாணே புயல் விஷய்த்தில் அப்படித்தான் ஏற்பட்டது
2011 டிசம்பரில் புதுவையைத் தாக்கிய தாணே புயல்
புயல் நடுக்கடலில் இருக்கும் போதே அதை  பிசுபிசுத்துப் போகும்படி நம்மால் செய்ய முடியாது. புயலை திசை திருப்பி விட முடியாது. குறைந்த பட்சம் புயலின் கடுமையை நடுக் கடலிலேயே குறைக்க முடியுமா என்றால் அதுவும் சாத்தியமில்லை.  .

ஆகவே தான் அமெரிக்காவில் புளாரிடா மாகாணத்தில் நிபுணர்கள் ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கையாகப் ‘புயலை’ உண்டாக்கி அதை ஆராயும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நிஜப் புயலை தோற்றுவிக்க இயலாது என்பதால் சிறு அளவில் புயல் நிலைமைகளை உண்டாக்கி ஆராயப் போகிறார்கள். புயல்கள் தொடர்பாக் இப்படியான ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்படுவது உலகில் இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.
ஆகஸ்டில் அமெரிக்காவில் நான்கு மாகாணங்களில் பாதிப்பை உண்டாக்கிய ஐசாக் புயல் 
ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக் கடலில் தோன்றும் புயல்கள் தமிழகம், ஆந்திரம், ஒரிசா மானிலங்களைத் தாக்குகின்றன என்பதை நாம் அறிவோம். அமெரிக்காவிலும் இதே போல தென் கிழக்கு, கிழக்கு கரை மாகாணங்களைப் புயல்கள் தாக்குகின்றன. இப்போது அதாவது கடந்த 29 ஆம் தேதியன்று ஐசாக் என்று பெயரிடப்பட்ட  புயல் அமெரிக்காவின் தென் கிழக்குக் கரையைத் தாக்கி சேதம் விளைவித்தது.

உலகில் ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளையும் அவ்வப்போது புயல்கள் தாக்குகின்றன. அமெரிக்காவைத் தாக்கும் புயல்கள் Hurricane, என்றும் ஜப்பானைத் தாக்குகின்ற புயல்கள் Typhoon என்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் Cyclone என்றும் அழைக்கப்படுகின்றன. பெயர் தான் வித்தியாசமே தவிர இவை அனைத்தும் ஒரே மாதிரியான சூழ்நிலைகளில் தான் தோன்றுகின்றன. (காண்க எல்லாப் புயல்களும் ஒரே மாதிரி சுழலுமா/)

செயற்கைப் புயலை உண்டாக்குவதற்கான ஆராய்ச்சிக் கூடத்தை புளோரிடாவில் உள்ள மியாமி பல்கலைக் கழகம் நிறுவுகிறது.இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் தொடங்கின. எல்லாப் புறங்களிலும் மூடப்பட்ட பெரிய  நீர் தொட்டி இதன் முக்கிய அம்சமாகும். ஒரு நீச்சல் குளம் அளவுக்கு இது 6 மீட்டர் அகலமும் 20 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும்.

இந்த நீர்த் தொட்டிக்கு ஒரு நிமிஷத்துக்கு சுமார் 3700 லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருப்பதற்கான ஏற்பாடு உண்டு. புயல்கள் கடலில் தோன்றுகின்றன என்பதால் இத்தொட்டிக்கு வருவது கடல் நீராகவே இருக்கும். புயல் என்றாலே காற்று தான். ஆகவே மணிக்கு அதிகபட்சம்  240 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்படி செய்வதற்கு ராட்சத மின் விசிறி உண்டு.

புயலின் போது  அலைகள் உண்டாகும். ஆகவே அவ்விதம் அலைகளை ஏற்படுத்த 12 வித துடுப்புகள் இருக்கும். நீர்த் தொட்டியைச் சுற்றிலும் கண்ணாடி மாதிரியில் ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் தடுப்புகள் இருக்கும். இது 8 செண்டி மீட்டர் குறுக்களவு கொண்டது.

ஆகவே நீர்த் தொட்டிக்குள் குட்டி  செயற்கைப் புயலை உண்டாக்கினால் வெளியிலிருந்து அதைக் காண முடியும். தகவல்களைப் பதிவு செய்ய உணர் கருவிகளும் இருக்கும். செயற்கைப் புயலை உண்டாக்கி சோதனைகளை நடத்தும் போது அடுக்கு மாடிக் கட்டடங்கள், பாலங்கள், கடலோர தடுப்புச் சுவர்கள் ஆகியவற்றின் மாடல்களும் பயன்படுத்தப்படும். ப்ல்வேறான கட்டுமானங்கள் மீது கடும் புயல் உண்டாக்கும் விளைவுகளை அறிவது இதன் நோக்கமாகும் இதே மாதிரியில் இன்னொரு ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவுவதற்கும் திட்டம் உள்ளது.

மியாமி பல்கலைக்கழகத்தின் Applied Marine Physics பிரிவின் தலைவர் பிரியன் ஹவுஸ் செயற்கைப் புயல் ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தலைவராக இருப்பார். அவருக்குப் புயல்கள் பற்றி நன்றாகவே தெரியும். புயல் வீசுகின்ற இடங்களுக்குச் சென்று ஆராய்ந்தவர்.

கடலில் தோன்றும் புயல்கள்க் கரையை நோக்கி  வழக்கமாகச் செல்கின்ற பாதைகளில்  நுண்கருவிகளைக் கொண்ட மிதவைகளைப் போட்டு வைப்பது, பின்னர் அக்கருவிகளில்  பதிவாகும் தகவல்களை சேகரித்து ஆராய்வது ஆகியன அவர் பின்பற்றி வந்துள்ள முறையாகும்.  ஒரு சமயம் புயல் பலவீனமடந்து விட்டது போலத் தோன்றிய சமயத்தில் பிரியன் ஹவுஸ் குழுவினர் நுண்கருவிகளை எடுத்துவரக் கிளம்பினர். ஆனால் அதே புயல் மறுபடி தீவிரமாகிய போது பிரியன் ஹவுஸ் குழுவினர் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகினர்.

அமெரிக்காவில் நிறுவப்படும் புயல் ஆராய்ச்சிக்கூடத்தில் தெரிய வரும் தகவல்கள் உலகில் புயல்களால் பாதிக்கப்படுகின்ற இந்தியா போன்ற நாடுகளுக்கும் பலனளிப்பதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7 comments:

NAGARAJAN said...

இந்த செயற்கைப் புயலில், நீரின் வேகம், காற்றின் வேகம் மற்றும் பிற அனைத்தும் மனிதர்களால் நிர்மாணிக்கப்படுகின்றன. எனவே ஆராய்ச்சியின் போது, ஏதாவது ஏடாகூடமாக நிகழ்வது போல் தோன்றினால், எல்லாவற்றையும் நிறுத்தி விட முடியும். எனவே இந்த ஆராய்ச்சி எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றி விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

Unknown said...

Thanking you sir,
ஆனாலும் அமெரிக்காவில் ஏற்படும் Hurricane போல
Typhoon மற்றும் Cyclone புயல்கள் பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை தானே sir?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Nagarajan
எல்லாவித ஏடாகூடமான நிலைமைகளும் ஏற்பட வேண்டும். அவற்றை ஆராய வேண்டும் என்பதற்காகத்தான் ஆராய்ச்சிக்கூடமே நிறுவப்பட்டுள்ளது. ஆகவே எல்லாவற்றையும் நிறுத்த வேண்டிய அவசியமே இராது. எவ்வித விபரீத நிலைமைகள் ஏற்பட்டாலும் அவை பிளாஸ்டிக் சுவர்களுக்குள்ளாகத் தான் நிகழும்.ஆகவே இந்த ஆராய்ச்சியால் பலன்கள் ஏற்பட நிறையவெஅஎ வாய்ப்பு உள்ளது

என்.ராமதுரை / N.Ramadurai said...

Mailam Tamilselvan
அமெரிகக் கரை ஓரமாக்த் தோன்றும் Hurricane புயல்களை விட கடுமையான புயல்கள் வங்கக் கடலில் தோன்றியது உண்டு.
ஒரு முக்கிய வித்தியாசம் அமெரிக ஹரிக்கேன் புயல்களால் ஏற்படுகின்ற பொருட் சேதம் அதிகம். அவற்றுடன் ஒப்பிட்டால் வங்கக் கடல் புயல்களால் கடந்த காலத்தில் பயங்கரமான அளவுக்கு உயிர்ச் சேதம் ஏற்ப்ட்டிருக்கின்றன.
1970 ஆம் ஆண்டில் வங்கக் கடலில் உருவாகி கிழக்குப் பாகிஸ்தானை (இப்போதைய வங்கதேசம்) தாக்கிய கடும் புயலின் விளைவாக சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் தகவல் போக்குவரத்து செம்மையாக இருப்பதாலும் மக்கள் த்த்தம் வாகனங்களில் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செலல வசதி இருப்பதாலும் அமெரிக்கப் புயல்களால் உயிர்ச் சேதம் அதிகம் இருப்பது கிடையாது.
அமெரிக்கப் புயல்க்ள் நிறைய விளம்பரம் பெறுகின்றன என்ப்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.

Unknown said...

Dear Sir,

//அமெரிக்கப் புயல்க்ள் நிறைய விளம்பரம் பெறுகின்றன என்ப்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.//

இது சரிதான் sir.

திண்டுக்கல் தனபாலன் said...

பயனளித்தால் மிகவும் நல்லது... நன்றி சார்...

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி ஐயா.

Post a Comment