நட்சத்திரங்களின் வரலாறு பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டும்.. நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளம் பருவம், முதுமை என எல்லாம் உண்டு. சில வகை நட்சத்திரங்கள் வயதாகி விட்ட நிலையில் வடிவில் பூதாகாரமாகப் பெருக்க ஆரம்பிக்கும், அப்படிப் பெருக்கும் போது அது சிவந்த நிறத்தைப் பெறும். அக்கட்டத்தில் அந்த நட்சத்திரத்துக்கு செம்பூதம (Red Giant ) என்று பெயர்.( செம்பூத நட்சத்திரம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை கீழே உள்ள படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். )
செம்பூத நட்சத்திரம் வடிவில் பெருக்கும் போது தனக்கு அருகே உள்ள கிரகங்களை ஒவ்வொன்றாக விழுங்க ஆரம்பிக்கும். இது ஒரு பெரு நகரம் மேலும் மேலும் விரிவடையும் போது அதன் அருகில் உள்ள கிராமங்களை விழுங்குவதைப் போன்றதே.
சூரியனை எடுத்துக் கொண்டால் அது ஒரு நட்சத்திரமே. அதுவும் மேலே குறிப்பிட்டபடி 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு செம்பூத நட்சத்திரமாக வடிவெடுக்கும். அப்போது அது அருகில் உள்ள கிரகங்களை விழுங்க ஆரம்பிக்கும்.
படத்தில் இடது புறம் உள்ள்து திருவாதிரை ( Betelgeuse) நட்சத்திரம்..வலது புறம் கேட்டை (Antares). நட்சத்திரம். கீழே அம்புக் குறிக்கு எதிரே உள்ள சிறிய புள்ளி சூரியன். |
வானவியல் நிபுணர்கள் செம்பூத நட்சத்திரங்கள் பற்றிக் கூறி வந்துள்ளதெல்லாம் இதுவரை வெறும் ஏட்டளவில் தான் இருந்து வந்துள்ளது. இப்போதோ நிஜமாகவே ஒரு நட்சத்திரம் ஒரு கிரகத்தை விழுங்கியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நட்சத்திரத்துக்கு BD + 48 740 என்று பெயர். ( நட்சத்திரங்களுக்கு எண்களைப் பெயர்களாக வைப்பது உண்டு) இந்த நட்சத்திரம் பெர்சியஸ் ராசி மண்டலத்தில் உள்ளது. இது ரிஷப ராசிக்கு அருகில் உள்ளதாகும்.
மேற்படி நட்சத்திரம் தனக்கு அருகே உள்ள கிரகத்தை விழுங்கியது என்பதை எப்படிக் கண்டு பிடித்தார்கள்? கொலைக் கேஸ்களில் சந்தர்ப்ப சாட்சியம் என உண்டு. அது மாதிரியில் தான் ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு நட்சத்திரத்தில் என்னென்ன அடங்கியுள்ளது என்ப்தை அதன் ஒளியை வைத்து கண்டுபிடித்து விட முடியும். அப்படித்தான் கண்டுபிடித்துள்ளார்கள்.
முதல் சாட்சி: பொதுவில் வயதான நட்சத்திரங்களில் லிதியம் என்ற மூலகம்-- ஓர் உலோகம்-- இருப்பது கிடையாது. ஆனால் அந்த ‘ கொலைகார’ நட்சத்திரத்தின் ‘வயிற்றில்’ மிக நிறைய லிதியம் காணப்படுகிறது. அந்த நட்சத்திரம் ஒரு கிரகத்தை விழுங்கியிருந்தால் மட்டுமே அவ்வளவு லிதியம் இருக்க முடியும்.
இரண்டாவது சாட்சி: அந்த நட்சத்திரத்தை சுற்றி வந்த மற்றொரு கிரகம் இப்போது தாறுமாறான சுற்றுப்பாதையில் சுற்ற ஆரம்பித்துள்ளது. ஒரு நட்சத்திரத்தை கிரகங்கள் சுற்றுகின்றன என்றால் அவற்றின் இடையே பரஸ்பர ஈர்ப்பு இருக்கும். அவை ஒன்றை ஒன்று இழுத்துப் பிடித்துக் கொண்டு நிறபதாகவும் கூறலாம். அருகே உள்ள கிரகத்தை நட்சத்திரம் விழுங்கி விட்ட பிறகு இரண்டாவது கிரகம் நிலை குலைந்து விட்டதாகவும் ஆகவே அது தாறுமாறான பாதையில் சுற்ற ஆரம்பித்தது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இவை எல்லாம் The Astrophysical Journal Letters என்னும் இதழில் வெளியாகியுள்ளது.அமெரிக்கா, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.இக்குழுவின் தலைவரும் அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக் கழகப் பேராசிரியருமான அலெக்ஸ் வோல்ஸ்கான் இது பற்றிய விவரங்களைத் தெரிவித்தார்.இந்த நிபுணர்கள் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு டெலஸ்கோப்பை தங்களது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினர்.
சூரியன் செம்பூத நட்சத்திரம் என்ற கட்டத்தை எட்டும் போது பூமியானது ஒரு வேளை தனது பாதையை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்று ஏற்கெனவே சில நிபுணர்கள் கூறி வந்துள்ளனர். அவர்கள் கூறுவது சரியாக இருக்கலாம் .ஏனெனில் முதல் கிரகம் விழுங்கப்பட்ட பின்னர் இரண்டாவது கிரகம் தனது இடத்தில் இல்லாமல் வேறு பாதையில் தாறுமாறான சுற்ற ஆரம்பித்துள்ள்து. அது போல பூமியும் சூரியனிடமிருந்து தப்பி வேறு பாதையில் சுற்ற ஆரம்பிக்கலாம்.
இல்லாவிட்டாலும் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்குள்ளாக மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான வாய்ப்புக்ள் உள்ளன. அந்த வகையில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இப்போது பணத்தை செலவிடுவதில் தப்பு இல்லை என்றே கூறலாம்.
சரி, வானில் செம்பூத நட்சத்திரங்கள் உள்ளனவா? அவற்றை நம்மால் காண முடியுமா? திருவாதிரை(Betelgeuse) நட்சத்திரம் ஒரு செம்பூத நட்சத்திரமே. குறுக்களவில் அது சூரியனை விட 700 மடங்கு பெரியது. ஏப்ரல் மாதத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் திருவாதிரை நட்சத்திரத்தைக் காணலாம். பெயருக்கு ஏற்ற்படி அது சிவந்த நிறத்தில் காணப்படும்.கேட்டை (Antares) நட்சத்திரமும் ஒரு செம்பூத நட்சத்திரமே. அதுவும் சிவந்த நிறத்தில் காணப்படும்.
வியப்பாக இருக்கிறது... மிக்க நன்றி ஐயா...
ReplyDelete"மேலே குறிப்பிட்டபடி 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு செம்பூத நட்சத்திரமாக வடிவெடுக்கும். அப்போது அது அருகில் உள்ள நட்சத்திரங்களை விழுங்க ஆரம்பிக்கும்"
ReplyDeleteஅருகில் உள்ள கிரகங்களை என்று இருக்க வேண்டும்
anonymous
ReplyDeleteமிக்க நன்றி. சரி செய்யப்பட்டு விட்டது.
ReplyDeleteராசி மண்டலங்கள் என்றால் என்ன? அவை எங்கெங்கு இருக்கின்றன? இந்திய ஜோதிடத்தில் சொல்லும் ராசி மண்டலங்களும் அறிவியல் ரீதியான நட்சத்திர தொகுதியும் ஒன்றுதானா?
நன்றி
S.சுதாகர்
Sir..,What will happen after the planet is absorbed/swallowed. Will it be like fruit lying in the stomach..get digested and then become one..Or will stay as such inside the blown up star?..
ReplyDeleteபெரிய CONCEPT-ஐ எளிய மொழியில் விளக்கியுள்ளீர்கள்! மிக்க நன்றி..
ReplyDelete/இரண்டாவது சாட்சி: அந்த நட்சத்திரத்தை சுற்றி வந்த மற்றொரு நட்சத்திரம் இப்போது தாறுமாறான சுற்றுப்பாதையில் சுற்ற ஆரம்பித்துள்ளது/
மற்றொரு நட்சத்திரம் OR கிரகம்?
சுபத்ரா
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டது சரி. அது நட்சத்திரம் அல்ல. கிரகம் தான். பிசகு சரி செய்யப்பட்டு விட்டது. தங்களுக்கு மிக்க நன்றி
Anonymous
ReplyDeleteஒரு செம்பூதம் நட்சத்திரத்தினால் விழுங்கப்பட்ட ஒரு கிரகம் பஸ்மமாகி விடும். செம்பூத நட்சத்திரத்தின் உள்புறத்தில் வெப்பம் சில லட்சம் டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு இருக்கலாம்.
எளிமையாக விளக்கியுள்ளீர்கள் SIR.
ReplyDeleteசில வினாக்கள்..
//இல்லாவிட்டாலும் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்குள்ளாக மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான வாய்ப்புக்ள் உள்ளன//
SIR,
இன்னும் 500 கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்வானா?
அப்படியே வாழ்ந்தாலும் பூமி அழியும்போது செவ்வாயின் சமனிலையும் பாதிக்கபடும் தானே?
திருவாதிரை(Betelgeuse) நட்சத்திரம் ஒரு செம்பூத நட்சத்திரம் எனில் அது இப்போது அழியும் நிலை நட்சத்திரமா? ஆம் எனில் இன்னும் எத்தனை ஆண்டு காலம் அதன் ஆயுள் உள்ளது என்று கண்க்கிட்டு உள்ளனரா?
Nagarajan tamilselvan
ReplyDeleteதாங்கள் கூறுவது சரிதான்.இந்த மாதிரி விஷயங்களில் எதையும் திட்டவட்டமாகக் கூற முடியாது.
சென்பூத நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் தனது இறுதிக் கட்டத்தில் வெடிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அது எப்போது வெடிக்கும் என்று தீர்மானமாக அவர்களால் கூற இயலவில்லை.
திருவாதிரை நட்சத்திரம் சுமார் 640 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது.அது வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் இப்போதைய தலைமுறையை எதிர்ப்படுவதானால் அது ஏற்கெனவே வெடித்திருக்க வேண்டும். இனிமேல் தான் வெடிக்கும் என்றால் அது வெடித்து 640 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அது பற்றித் தெரிய வரும்.
திருவாதிரை நட்சத்திரம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.
VERY THANKING YOU SIR
ReplyDeleteNIBIRU வைப் பற்றி உங்கள் கருத்தை விளக்கமுடியுமா
ReplyDeleteவிஜயன்
ReplyDeleteNIBRU சமாச்சாரம் எல்லாம் வெறும் கற்பனை. அதற்கு அறிவியல் பூரவமான ஆதாரம் கிடையாது.எனினும் அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.பூமி அழியப் போகிறது என்று மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேதி குறிப்பிட்டு புரளி கிளப்புவது மேல் நாட்டில் உள்ள சில கும்பல்களின் வழக்கமாகும். ஆங்கிலத்தில் இருப்பதாலும் மேல் நாடுகளிலிருந்து வருகிறது என்பதாலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ளவர்களில் பலர் இதை நம்ப முற்படுகிறார்கள்.இந்தியாவில் நாம் பேய், பிசாசு, அரக்கன், ராட்சஸன் என்றெல்லாம் ஏதோ ஒரு காலத்தில் கதைகளை எழுதினோம். அத்தோடு சரி, மேலை நாடுகளில் இன்றும் அப்படி கதை எழுதி வருகிறார்கள். ஒரு வித்தியாசம். இப்படியான கதைகளுக்கு அவர்கள் அறிவியல் சாயம் பூசுகிறார்கள். இந்த சாயம் விரைவில் வெளுத்துப் போகிற சாயம்.2012 டிசம்பரில் பூமி அழியும் என்கிற புரளியின் சாயம் வெளுப்பதை டிசம்பர் கடைசி வரை பொருத்திருந்து பாருங்கள்.
சுதாகர் சண்முகம்
ReplyDeleteதங்களது கேள்விக்கு பதில் அளிப்பது எப்படியோ விட்டுப் போய் விட்டது.
வானத்தில் சந்திரனும் சூரியனும் செல்கின்ற ( செல்வதாக நாம் வைத்துக்கொண்டுள்ள ) பாதையை நாம் 12 ராசிகளாக நமது வசதிக்காக்ப் பிரித்து வைத்துக் கொண்டுள்ளோம்.( தாலுகா, மாவட்டம் மாதிரி).இந்திய சாஸ்திரப்படியான ராசிகளும் வானவியல் ( Astronomy) படியான் ராசிகளும் ஒன்றே.
சந்திரனும் சூரியனும் செல்கின்ற பாதைக்கு இரு புறங்களிலும் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. ஜோசிய சாஸ்திரத்தில் ஈடுபட்டவர்களும் அந்தக் காலத்து வானவியல் விற்பன்னர்களும் அவற்றுக்கெல்லாம் பெயர் வைத்தார்களே (சப்த ரிஷி மண்டலம் அவற்றில் ஒன்று. அது 12 ராசிகளில் வருவது இல்லை) தவிர, வானில் அந்தப் பகுதிகளை ராசி மண்டலங்களாகப் பிரிக்கவில்லை. நவீன வானவியலின்படி வானம் முழுவதும் 88 ராசி மண்டலங்களாக ( Constellations)பிரிக்கப்பட்டுள்ளது.
இல்லாவிட்டாலும் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்குள்ளாக மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான வாய்ப்புக்ள் உள்ளன. அந்த வகையில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இப்போது பணத்தை செலவிடுவதில் தப்பு இல்லை என்றே கூறலாம்.
ReplyDeleteOru santhegam Sooriyana illatha poluthu sevvai mattum epdi nilaikkum sevvayil manithan kudiyerinalum sevvai sutruvatharku sooriyan irukathey
Giritechnologies
ReplyDeleteசூரியன் செம்பூதமாக மாறிய பின்னரும் சூரியன் இருக்கும். ஆனால் வடிவில் பிரும்மாண்டமானதாக இருக்கும். ஆகவே சூரியன் அப்போது இராது என்று சொல்ல முடியாது.
AYYA THANGALAI PATRIYUM THANGAL BOOKS PATRIYUM ARIYA AVALAGA VULLEN
ReplyDeleteAnonymous
ReplyDeleteஎன்னைப் பற்றியும் என் நூல்கள் பற்றியுமான தகவல்கள் என் இணைய தளத்திலேயே தலைப்புப் பகுதியில் உள்ளன.அங்கு சென்று பார்க்கவும்.