Aug 15, 2012

ஆகாயத்தில் தெரிந்த அதிசய மேகம்

Share Subscribe
வானை நோக்கினால் மேகங்கள் தென்படுகின்றன. இவற்றில் பல வகைகள் உண்டு என்று சொல்லத் தேவையில்லை. பார்த்தாலே தெரிகிறது. சில வகை மேகங்கள் மிக உயரத்தில் உள்ளன அந்த வகை மேகங்களை நம்மால் அடையாளம் காண முடியும். இதற்கெல்லாம் நிபுணத்துவம் தேவையில்லை.

வானில் சுமார் 12 கிலோ மீட்டர் ( சுமார் 40,000 அடி) உயரம் சென்றுவிட்டால்  மேகங்கள் கிடையாது. அதற்கும் மேலே சென்றால் மேகங்கள் நமது  காலுக்கு அடியில் தெரிய ஆரம்பிக்கும். விமானத்தில் பயணம் செய்தவர்கள் இதை அறிவர். விமான ஜன்னல் வழியே பார்த்தால் கீழே பஞ்சு மூட்டைகளைக் கொட்டியது  போல ஒரே வெண்மையான மேகங்களாகத் தென்படும்.

மின்னல், மழைத் தொல்லை கிடையாது. தவிர, அவ்வளவு உய்ரத்தில் பறக்கும் போது எரிபொருள் செலவு குறைவு.  இப்படியான காரணங்களால் நாடுகள் இடையே, நகரங்கள் இடையே பறக்கின்ற விமானங்கள் பெரும்பாலும் சுமார் 11 கிலோ மீட்டர் உய்ரத்தில் பறக்கின்றன.
இரவு ஒளிர் மேகங்கள்.
ஆனால் 76 முதல் 85 கிலோ மீட்டர் உய்ரத்தில் அபூர்வமாக மேகங்கள் தோன்றுவது உண்டு. குறிப்பாக துருவப் பகுதிகளில் இந்த வகையான அபூர்வ மேகங்களைக் காணலாம். அண்மையில் வட துருவப் பகுதியில் இவ்வித மேகம் காட்சி அளித்தது. இந்த வகை மேகங்களுக்கு Noctilucent cloud என்று பெயர்.’ இரவு ஒளிர் மேகம்’ என்பது இதன் பொருள்.

பெயருக்கு ஏற்றபடி இந்த மேகங்கள் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் அல்லது சூரிய உத்யத்துக்கு முன்னர் தான் தென்படும். சூரியன் அடிவானத்துக்குக் கீழே சுமார் 6 முதல்16 டிகிரியில் இருக்க வேண்டும் வானில் அந்த உயரத்தில் குளிர் மைனஸ் 120 டிகிரி அளவுக்கு இருக்கின்ற நிலையில் இந்த மேகங்கள் உருவாகின்றன. பொதுவில் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கேயும் தெற்கேயும் 50 முதல் 60 டிகிரி வரையிலான அட்சரேகைகளில் அமைந்த இடங்களில் தான் இந்த மேகங்களைக் காண இயலும்.

இந்த வகை மேகங்களை வெப்ப நாடுகளில் காண முடியாது
இரவு ஒளிர் மேகங்கள்  நீல நிறத்தில் இருக்கும்.  மெல்லிய மேகங்களாகக் காணப்படும இவை மிக மிக நுண்ணிய ஐஸ் துணுக்குகளால் ஆனவை.சூரிய ஒளி படுவதால் இவை ஒளிர்வது போலத் தோன்றுகிறது.

.பொதுவில்  மேகம்  உண்டாக மிக மிக நுண்ணிய தூசுகள் தேவை. இந்த தூசுகள் மீது நுண்ணிய நீர்த் துணுக்குகள் அல்லது ஐஸ் துணுக்குகள் ஒட்டிக் கொள்கின்றன  பொதுவில் இத் தான் மேகம். மேகம் உருவாக உதவும் நுண்ணிய தூசு மற்றும் இதர துணுக்குகள்  அனைத்தும் பூமியின் மேற்பரப்பிலிருந்து மேலே சென்றவை தான்.
சூரிய ஒளி பட்டு இந்த மேகங்கள் ஒளிருகின்றன
ஆனால் இரவு ஒளிர் மேகங்கள் விண்வெளித் தூசு மூலம் தோன்றுபவை. பூமியை ஓயாது விண்கற்கள் தாக்கிய வண்ணம் உள்ளன.இவை காற்று மண்டலத்தில் நுழைந்ததும் சூடேறித் தீப்பற்றி பொடிப் பொடியாக உதிர்ந்து விடும். (இந்த விண்கற்கள் தீப்பற்றி ஒளிக் கீற்றாகக் கீழே இறங்குவதைத் தான் பலரும் ‘” நட்சத்திரம் விழுகிறது” என்று தவறாக வருணிக்கிறார்கள்.)

விண்கற்களால் ஏற்படும் தூசு மீது ஐஸ் துணுக்குகள் ஒட்டிக் கொள்வதன் மூலமே இரவு ஒளிர் மேகங்கள் உண்டாகின்றன.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலப் பல அறியாத விசயங்களை, உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது ஐயா...

நன்றி... வாழ்த்துக்கள்...

Salahudeen said...

சில நாட்களாக இணயத்தில் வரமுடியவில்லை அதற்குள் நான்கு பதிவுகள் தொடர்ந்து பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.ஐயா எனக்கு ஒரு சந்தேகம் வங்காள விரிகுடாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை அட்க்கடி தோன்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களினால் நாம் நல்ல மழை பெறுகிறோம் அது போல் ஏன் ஜூன் முதல் செப்டம்பர் மாத காலங்களில் அரபி கடலில் தோன்றுவதில்லை நன்றி.

என்.ராமதுரை / N.Ramadurai said...

salahudeen
அரபுக் கடலிலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டல்ங்களும் தோன்றுவது உண்டு. அவை வங்கக் கடலில் ஏற்படுவது போன்றே அக்டோபர் நவம்பர் மாதங்களில் தோன்றுகின்றன. இவ்விதம் அரபுக் கடலில் தோன்றும் புயல்கள் இந்தியாவின் மேற்குக் கரையைத் தாக்கலாம்.அல்லது வட மேற்கு நோக்கி நகர்ந்து வளைகுடாப் பகுதிகளைத் தாக்கலாம்

Rathnavel Natarajan said...

அரிய தகவல்கள்.
நன்றி ஐயா.

Post a Comment