சந்திரனை இப்போது சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க விண்கலம் வானிலிருந்து எடுத்த படங்கள் இதைக் காட்டுகின்றன. நம்மூரில் பறக்கவிடப்படுகின்ற தேசியக் கொடியாகட்டும் அல்லது கட்சிக் கொடியாகட்டும் இப்படி 40 ஆண்டுகள் தாங்குமா என்பது சந்தேகமே.
அமெரிக்கா 2009 ஆம் ஆண்டில் LRO எனப்படும் (Lunar Reconnaissance Orbiter) ஆளில்லா விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரனின் நிலப் பரப்பை விரிவாக அத்துடன் மேலும் துல்லியமாகப் படம் எடுப்பது இந்த விண்கலத்தின் நோக்கமாகும்.சந்திரனுக்கு மறுபடி அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவதென்றால் அதற்கான உகந்த இடங்களைத் தேர்வு செய்வதும் இந்த விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியதன் நோக்கமாகும்.
சந்திரனில் அமெரிக்கக் கொடியை நாட்டிய் பின் கொடிக்கு வணக்கம் செலுத்தும் விண்வெளி வீரர் ஜான் யங் |
இந்த இருவரும் சந்திரனில் பணியை முடித்துக் கொண்டு உயரே கிளம்புகையில் அவர்கள் அமர்ந்திருந்த விண்கலம் நெருப்பைப் பீச்சிட்ட போது அந்த வேகத்தில் கொடி சாய்ந்து விட்டது என்று அப்போதே ஆல்ட்ரின் கூறியிருந்தார். ஆகவே தான் அதன் நிழல் LRO எடுத்த படங்களில் காணப்படவில்லை.
அமெரிக்காவின் LRO விண்கலத்தில் இடம் பெற்றுள்ள கேமராவுக்குப் பொறுப்பான தலமை விஞ்ஞானி டாக்டர் மார்க் ராபின்சன் கூறுகையில் இந்த விண்கலம் எடுத்த படங்கள் அப்போலோ 11 விண்வெளி வீரர்கள் நாட்டிய கொடி நீங்கலாக மற்ற ஐந்து குழுவினரும் நாட்டிய கொடிகள் நிலையாக நிற்கின்றன என்பதைக் காட்டுகின்றன என்றார்.
சந்திரனுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் எடுத்துச் சென்ற கொடிகளில் விசேஷ ஏற்பாடு பின்பற்றப்பட்டது. சந்திரனில் காற்று கிடையாது என்பதால் அது அசைந்தாடி ‘பட்டொளி’ வீச வழியில்லை. எனவே கொடியின் மேற்புறத்தில் நீள வாட்டில் ஒரு கம்பி பொருத்தப்ப்ட்டது. கொடியின் கீழ்ப்புறத்திலும் அதே போல கம்பி கொடுக்கப்பட்டது.கொடி தொங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு பின்பற்றப்பட்டது.
சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கும் LRO விண்கலம் |
ஏற்கெனவே குறிப்பிட்டபடி சந்திரனில் காற்று கிடையாது. மழை கிடையாது. நுண்ணுயிர்களும் கிடையாது. பூமியிலோ ஒரு குப்பை மேட்டில் சாக்கு வீசி எறியப்பட்டால் சில மாதங்களில் அது நைந்து போய் விடும். நுண்ணுயிர்கள் அதை சிதைத்து துண்டு துண்டாக்கி விடும். பின்னர் பார்த்தால் சாக்கு மண்ணோடு மணணாகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
பூமியுடன் ஒப்பிட்டால் சூரியனிலிருந்து வரும் ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் சந்திரனைக் கடுமையாகத் தாக்குகின்றன. பூமியின் காற்று மண்டலம் சூரியனின் ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் த்ரைக்கு வந்து சேராதபடி தடுத்து விடுகின்றன.
ஆகவே விண்வெளி வீரர்கள் நட்ட கொடிகள் எவ்விதம் புற ஊதாக் கதிர்களைத் தாங்கி நிற்கின்றன என்பதும் சந்திரனில் வீசும் கடும் வெயிலையும் தாங்கி நிற்கின்றன என்பது புதிராக உள்ளது என்று மார்க் ராபின்சன் கூறியுள்ளார்.
சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்த ஆம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் அங்கு அமெரிக்க தேசியக் கொடியை நாட்டியதில் ஒரு சுவையான விஷயம் உள்ளது. இவர்கள் எடுத்துச் செல்வதற்காக நாஸா அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு இக்கொடியை வடிவமைத்து தயார் செயதது. இதற்குப் பொறுப்பான டாம் மோசரிடம் இந்த விஷயம் வெளியே தெரியாதபடி பார்த்துக்கொள்ளும்படி கூறப்பட்டது.
காரணம் இது தான். சந்திரன் மீது எந்த நாடும் உரிமை கோரக்கூடாது என்று சர்வதேச சட்டம் ஒன்று உள்ளது. ஆகவே சந்திரனுக்குச் செல்லும் குழுவினர் அமெரிக்க தேசியக் கொடியை எடுத்துச் செல்லும் விஷயம் வெளியே தெரிந்தால் சந்திரனில் அமெரிக்க தேசியக் கொடியை நாட்டக்கூடாது என உலகில் பல நாடுகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக சந்திரனுக்கு ஆறு தடவை சென்ற குழுவினர் ஒவ்வொரு தடவையும் அமெரிக்கக் கொடியை சந்திரனில் நாட்டியதற்கு பெரிதாக் எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை.
மனித குலத்தின் சார்பாகவே இவ்விதம் அமெரிக்கக் கொடி நடப்பட்டதாகப் பின்னர் அமெரிக்கா விளக்கம் கூறியது. அப்படியானால் மனித குலத்தின் அடையாளமாக ஐ. நா கொடியை அல்லவா சந்திரனில் நாட்டியிருக்க வேண்டும் என்று பின்னர் ஒரு சமயம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அக்கேள்விக்கு அமெரிக்கத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
14 comments:
அறியாத தகவல்... மிக்க நன்றி ஐயா !
அவுக நெசம்மாவே சந்திரனுக்குத்தான் போய் கொடிய நட்டாகளா... எனக்கென்னமோ ஒரே சம்சயமாதான் இருக்கு...
விஜயன்
அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கியது உண்மையே. இதில் சந்தேகத்துக்கே இடமில்லை. இப்போது LRO விண்கலம் எடுத்துள்ள படங்கள் இதற்கு சாட்சி. தவிர, அமெரிக்கா முன்னர் பொய்யாக ஏதாவது செய்திருந்தால் ரஷிய விண்வெளி அமைப்பு, சீன விண்வெளி அமைப்பு,ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை அமெரிக்காவை கிழி கிழி என்று கிழித்திருக்கும்.
சந்திரனுக்குப் போகாமலே நாஸா எல்லாவற்றையும் ஜோடித்து விட்டதாக அமெரிக்காவில் சில தனிப்பட்ட நபர்கள் அவ்வப்போது புரளி கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இது சகஜம்.
இப்படியாகப் புரளி கிளப்புவர்களால் தான் உங்களைப் போன்றவர்களுக்கும் சிறிது சந்தேகம் இருக்கிறது.சரி, சந்திரனுக்கு இந்தியா சந்திரயான் அனுப்பியது நிஜம் என்று நம்புகிறீர்களா, அல்லது அதிலும் சந்தேகம் இருக்கிறதா?
They are lying i think....Where is the man's shadow in that picture...
அந்த படத்தில் மனிதனின் நிழல் கிழே விழவில்லை ஏன் ?
Srinivasan
படத்தில் இறங்கு கலத்தின் நிழல் தெரிகிறது. விண்வெளி வீரருக்கு முன்பாக ஏதோ குவியல் தெரிவதைக் கவனிக்கவும். அக் குவியல் விண்வெளி வீரரின் நிழலை மறைக்கிறது. கொடி மரத்தின் நிழல் ஒரே கோடாகத் தெரிவதில்லை என்பதைக் கவனிக்கவும். நிலத்தில் உள்ள குழிவு காரணமாக கொடி மர நிழம் முழுமையாக இல்லை.
எல்லாம் ஜோடனையாக இருந்தால் கொடி மர நிழல் ஒரே கோடாகத் தெரியும்படி செய்திருப்பார்கள்.
இப்படம் சந்திரனில் இயற்கையான சூழலில் எடுக்கப்பட்ட படம் என்று சந்தேகிக்க இடமில்லை
ஒரு 'புதிய தலைமுறை' இதழில், சந்திரனில் முதன் முதலில் காலடி பதித்தவர் அவருடன் சென்ற ஆல்ட்ரின் என்றும், ஆம்ஸ்ட்ராங் இரண்டாவதாகத்தான் காலடி வைத்தார் என்றும் படித்தேன் (ஆம்ஸ்ட்ராங் முதலில் இறங்க பயப்பட்டதாக கூறி இருந்தனர்). இது பற்றி தங்கள் கருத்து?
Suresh Kumar
சந்திரனில் முதலில் காலடி பதித்தவர் ஆம்ஸ்டிராங். ஆல்டிரின் இரண்டாவதாக இறங்கினார். அது தான் உண்மை. அது தான் வரலாறு.
மிக்க நன்றி
Sir, correct me if am wrong. Considering there is no air in the moon, the flag should look downward and sag. How in that first picture its floating. It seems as if it is moving with the wind? - Sreenivasan
sreenivasan
கொடியில் நீள வாட்டில் மேற்புற ஓரத்திலும் கீழ்ப்புற ஓரத்திலும் மடித்துத் தைத்து அவற்றின் உள்ளே கம்பி கொடுத்துள்ளனர. ஆகவே தான் கொடி தொய்யாமல் பறப்பது போல நீண்டு நிற்கிற்து.
மேலே உள்ள பதிவிலும் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
sir.. thank you and sorry for not reading it fully.
Artskingson
தங்களது கேள்வி தவறுதலாக விலக்கப்பட்டு விட்டது. அந்த நிழல் சூரிய ஒளியால் ஏற்பட்டதே. பூமியின் வானத்தில் சூரியன் தெரிவது போலவே சந்திரனின் வானில் சூரியன் தொடர்ந்து 14 நாட்களுக்குத் தெரியும். அதாவது சந்திரனில் பகல் என்பது 14 நாட்கள்
Post a Comment