Pages

Jul 17, 2012

தூக்கியெறியப்பட்ட கிரகத்துக்கு இன்னொரு சந்திரன்

சில ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பாடப் புத்தகத்தைப் புரட்டினால் சூரிய மண்டலத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் உள்ளன என்று காணப்படும். ஆனால் இந்த ஒன்பது கிரகங்களில் ஒன்றான புளூட்டோ ( Pluto) என்ற கிரகத்தை ’ அது கிரகமே அல்ல’ என்று கூறி வானவியல் விஞ்ஞானிகள் கடந்த 2006 ஆம் ஆண்டில் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஆனால் அமெரிக்காவில் இல்லினாய் மாகாண அரசு புளூட்டோவை இன்னமும் ஒரு கிரகமாகக் கருதுகிறது. அந்த மானிலம் ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதியை புளூட்டோ தினமாகக் கொண்டாடுகிறது. காரணம் புளூட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போ அந்த மானிலத்தைச் சேர்ந்தவர். புளூட்டோ 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல நியூ மெக்சிகோ மாகாணமும் புளூட்டோ தொடர்ந்து ஒரு கிரகமாக இருந்து வருவதாகக் கருதுகிறது.ஏனெனில் புளூட்டோவைக் கண்டுபிடிப்பதற்கு டாம்போவுக்கு உதவிய வான் ஆராய்ச்சிக்கூடம் அந்த மாகாணத்தில் தான் உள்ளது. ஆகவே நியூ மெக்சிகோ மாகாண சட்டமன்றம் 2007 ஆம் ஆண்டில் புளூட்டோ ஒரு . கிரகம் தான் என்று அறிவித்து சட்டம் நிறைவேற்றியது. இதெல்லாம் பழங்கதை.

இப்போது புளூட்டோ பற்றிய புதிய செய்தி உண்டு.  புளூட்டோ கிரகத்துக்கு ஐந்தாவது சந்திரன் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கே ஒரு சந்திரன் தான் உள்ளது. நமது சந்திரனை விடச் சிறியதான் புளூட்டோ ஐந்து சந்திரன்களைப் பெற்றுள்ளது என்பது வியக்கத் தக்க ஒன்றாகும்.
புளூட்டோ ம்ற்றும் அதன் சந்திரன்கள்
புளூட்டோவின் ஐந்து சந்திரன்களில் சாரோன்,1978 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நிக்ஸ், ஹைட்ரா ஆகியவை 2005 ஆம் ஆண்டிலும் P4 எனப்படும் சந்திரன் 2011 ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் பெயர் P 5 ஆகும். சாரோன் தவிர, மற்ற நான்கும் வானில் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹப்புள் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் குறுக்களவு சுமார் 24 கிலோ மீட்டராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதலில் புளூட்டோ எங்கே இருக்கிறது என்று பார்ப்போம். புளூட்டோவுக்கு அப்பால் கிரகம் கிடையாது என்று சொல்கின்ற அளவுக்கு அது சூரிய மண்டல எல்லையில் உள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ குறைந்தது 430 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புளூட்டோ அவ்வளவு தொலைவில் உள்ளதால் அது சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.
 நியூஹொரைசன்ஸ் விண்கலம் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதைக் காட்டும் வரைபடம். புளூட்டோ சூரிய மண்டல எல்லையில் இருப்பதைக் கவனிக்கவும்.
சூரிய மண்டலத்தில் புளூட்டோ நீங்கலாக எல்லா கிரகங்களுக்கும் ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டு அவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே தான் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா புளூட்டோவை நெருங்கி ஆராய்ந்து படங்களைப் பிடிப்பதற்காக நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) என்ற ஆளில்லா விண்கலத்தை 2006 ஜனவரில் செலுத்தியது.

அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட அந்த விண்கலம்.  இதுவரை பாதிக்கும் அதிகமான தூரத்தைத் கடந்துள்ளது.. நியூ ஹொரைசன்ஸ் 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் தான் புளூட்டோவை நெருங்கும். ஆனால் அது புளூட்டோவில் தரை இறங்காது.
புளூட்டோ. ஹப்புள் டெலஸ்கோப் எடுத்த ப்டம்
நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை வேகமாகக் கடந்து செல்லும். அப்போது விண்கலத்தில் உள்ள நுட்பமான கருவிகள் புளூட்டோவை ஆராய்ந்து தகவலகளை பூமிக்கு அனுப்பும். விண்கலத்தில் உள்ள் படப்பிடிப்புக் கருவிகள். துல்லியமான படங்களைப் பிடித்து அனுப்பும். இதன் மூலம் புளூட்டோ பற்றி விஞ்ஞானிகள் மேலும் பல தகவலகளை அறிய இயலும்.

புளூட்டோவின் ஐந்தாவது சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திரன்களில் எந்த ஒன்றின் மீதும் நியூஹொரைசன்ஸ் மோதாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.அந்த விண்கலம் புளூட்டோவை நெருங்கும் நேரத்தில் மணிக்கு 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாக இருக்கும்.

பொதுவில் எந்த விண்கலத்தையும் பிரேக் போட்டு நிறுத்த முடியாது. திடீரென அதன் பாதையை மாற்ற இயலாது. வேகத்தையும் திடீரென குறைக்க இயலாது. அந்த அளவில் விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐந்தாவது சந்திரனையும் கணக்கில் கொண்டு முன்கூட்டியே நியூஹொரைசன் விண்கலத்தின் பாதையைத் தகுந்தபடி நிர்ணயிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் நெல்லிக்காய் அளவு உள்ள சிறிய பொருள் மோதினாலும் போதும். விண்கலத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டு விடும்.

நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஆராய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பாக மேலும் அதிக தொலைவிலிருந்து ஆராயும் வகையில் அதன் பாதை மாற்றப்படலாம்.

சரி, புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று சர்வதேச வானவியல் சங்கம் ஏன் தீர்ப்பளித்தது ஒரு கிரகம் என்றால் அது சில தகுதிகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்பது அச்சங்கத்தின் கருத்து.. முதலாவதாக ஒரு கிரகம் என்றால் அது சூரியனைத் தனிப்பாதையில் சுற்றி வர வேண்டும். இரண்டாவதாக அது உருண்டையாக இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் புளூட்டோ பூர்த்தி செய்கிறது.
புளூட்டோ எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் படம்
மூன்றாவது தகுதி ஒரு கிரகம் தனது வட்டாரத்தில்,-- சுற்றுப்பாதையில் இருக்கக்கூடிய துண்டு துக்கடாக்களை தன் பால் ஈர்த்து அவற்றை கபளீகரம் செய்திருக்க வேண்டும். இந்த மூன்றாவது தகுதி புளூட்டோவுக்கு இல்லை என்பது சர்வதேச வானவியல் சங்கத்தின் கருத்து.

நீண்டகாலம் மக்களால் கிரகம் என்று கருதப்பட்ட புளூட்டோவை இப்படி திடீரென தகுதி நீக்கம் செய்வது சரியல்ல என்பது பலரின் கருத்து. தவிர, சர்வதேச வானவியல் சங்க கூட்டத்தில் புளூட்டோ பற்றி முடிவு எடுக்கப்பட்ட போது மொத்த உறுப்பினர்களில் 40ல் ஒரு பங்கு உறுப்பினர்களே இருந்ததால் அது முறையாக எடுக்கப்பட்ட முடிவு ஆகாது என்றும் வாதாடப்படுகிறது.   புளூட்டோ ஆதரவாளர்களின் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.


8 comments:

  1. புளூட்டோவை நெருங்கும் விண்கலம் 9 ஆண்டுகள் பயணிக்கும் அளவிற்கு அதனை அவ்வாறு வடிவமைத்தார்கள் ? எரி பொருள் தேவை எப்படி சமாளிக்கப்படுகிறது?

    ReplyDelete
  2. விரிவான தகவல்கள் சார் ! சுவாரஸ்யமாக உள்ளது...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  3. நாகராஜன்
    நியூ ஹொரைசன்ஸ் போன்று பல ஆண்டு விண்வெளிப் பயணம் செய்கின்ற ஆளில்லா விண்கலத்துக்கு எவ்வளவு தொலைவு செல்வதாக இருந்தாலும் எரிபொருள் தேவையில்லை. ஒரு படகை ஆற்றில் தள்ளி விட்டால் அது நீரோட்டத்துடன் மிதந்தபடி போய்க் கொண்டே இருக்கும்.விண்கலமும் அப்படித் தான். உயரே கொண்டு சென்று அதி வேகத்தில் வீசுவதற்கு மட்டுமே எரிபொருள் தேவை. அதன் பின்னர் தேவைப்படும் போது பயணப் பாதையை மாற்றுவதற்கு சிறு அளவிலான எரிபொருள் இருந்தால் போதும். அதுவும் சில வினாடி செயல்படுவதற்குத் தான் அந்த எரிபொருள்.இது சில கிலோ அளவுக்கு இருந்தால் போதும்.
    விண்கலத்தில் உள்ள கருவிகள் தகவலகளை பூமிக்கு அனுப்புவதற்கு மின்சாரம் தேவை. மிக் நீண்ட தொலைவு செல்கின்ற விண்கலங்களில் அணுசக்தி எரிபொருளை வைக்கின்றனர்.
    நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில் 11 கிலோ அளவுக்கு புளூட்டோனியம்-238 என்ற அணுசக்திப் பொருள் வைக்கப்பட்டுள்ளது.இது RTG பாட்டரி எனப்படும். இது விண்கலத்தில் உள்ள கருவிகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை அளித்து வரும்.
    நீண்ட தொலைவு செல்கின்ற ஆளில்லா விண்கலங்களில் இவ்வித்ம் அணுசக்தி பாட்டரிகளை வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    ReplyDelete
  4. நல்ல தெளிவான பதிவு.

    அய்யா, நீங்கள் தற்போதைய Mars Curiosity பற்றி ஒரு விரிவான பதிவு இட விரும்புகிறேன்.

    நன்றி,
    மாணிக்கராஜ்.

    ReplyDelete
  5. Astronauts found another satellite to Pluto recently. What are the impacts that this Horizon space craft can meet on its defined path?
    How all obstacles in its path has been forethought by Astronauts?

    நன்றி,
    மாணிக்கராஜ்,

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/Tamil-Science.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  7. மாணிக்கராஜ்
    புளூட்டோவுக்கு இன்னொரு சந்திரன் உள்ளது என்ப்தை ஹப்புள் டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் Astronauts பங்கு எதுவும் இல்லை. ஏனேனில் புளூட்டோவை ஆராய்வதற்காகச் செல்லும் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் ஆளில்லா விண்கலமாகும். புளூட்டோ அருகே வேறு சிறிய சந்திரன் இருந்தால் அதையும் ஹ்ப்புள் மூலம் கண்டுபிடித்து விட முடியும். ஆகவே நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்துக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு எதுவும் இராது என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  8. தற்கால பாடப்புத்தகம் ஒன்றில் ப்ளூட்டோவின் பெயர் விடுபட்டிருப்பது அறிந்ததும் ஆச்சர்யமாக இருந்தது. காரணம் நீங்கள் எழுதியதும் தான் புரிந்தது. பாவம், ப்ளூட்டோ, ஐந்து சந்திரன்கள் இருந்தும் கிரக பதவி பறி போனதற்குக் காரணம் அதன் கிரக நிலைமை(?!) சரியில்லையோ?

    ReplyDelete