Pages

Jun 5, 2012

சூரிய ஒளித் தட்டில் கருப்பாகத் தெரியும் வெள்ளி

பெயருக்கு ஏற்ப வெள்ளி கிரகம் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில், அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில், வைர மூக்குப் பொட்டு போல ஜொலிக்கும். மாலையில் இருட்டிய பிறகு மேற்கு வானில் தெரிந்தால் அதன் பெயர் அந்தி வெள்ளி, அதி காலையில் கிழக்கு வானில் தெரிந்தால் விடி வெள்ளி என்று அழைக்கின்றனர். இரண்டுமே ஒன்று தான். வெள்ளி (Venus) கிரகத்தைக் காணாதவர்கள் இருக்க முடியாது. பிரகாசமான ஒளியை வீசுவதால் அது இயல்பாக உங்களைக் கவரும்.

மேற்கு வானில் சந்திரன் அருகே
ஒளிப்புள்ளியாகத் தெரிவதே வெள்ளி கிரகம்
ஆனால் ஜூன் 6 ஆம் தேதி காலையில் சூரியனின் ஒளித் தட்டில் வெள்ளி கிரகத்தை நீங்கள் கருப்புப் பொட்டு வடிவில் காணலாம். இது ஒரு வகையில் கிரகணம் போன்றதே. ஆனாலும் இதை கிரகணம் என்று வர்ணிப்பதில்லை.

சூரிய கிரகணம் பற்றி நமக்குத் தெரியும். சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நேர் குறுக்காக வந்து நிற்கும் போது அது சூரிய ஒளித் தட்டை முற்றிலுமாக அல்லது ஓரளவில் மறைக்கும். எல்லா அமாவாசைகளிலும் சந்திரன் இப்படி சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைந்திருக்கும் என்றாலும் நேர் குறுக்கே வராது. சந்திரனின் சுற்றுப்பாதை பெரும்பாலான சமயங்களில் சாய்வாக அமைவதே அதற்குக் காரணம்.  அபூர்வமாக சூரியன்,- சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அந்த வரிசையில் அமையும் போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ்கிறது.

வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை
 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ளது
சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் உள்ளது. புதன் முதல் வட்டத்தில் உள்ளது என்றால், வெள்ளி கிரகம் இரண்டாவது வட்டத்திலும் பூமி மூன்றாவது வட்டத்திலும் அமைந்துள்ளன. வேறு விதமாக்ச் சொல்வதானால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே புதன், வெள்ளி ஆகியவை அமைந்துள்ளன. (இந்திய ஜோசிய சாஸ்திரத்தில் வெள்ளி கிரகத்துக்கு சுக்கிரன் என்று பெயர்)

வெள்ளி கிரகமானது 583  நாட்களுக்கு ஒரு முறை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகிறது. அதாவது சூரியன், வெள்ளி, பூமி ஆகியவை ஒரே வரிசையில் இருக்கும். ஆனால் வெள்ளியின் சுற்றுப்பாதை சற்றே சாய்வாக இருப்பதால் அது சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே வந்து நிற்காது. அதாவது அது சூரியனை மறைத்துக் கொண்டு நிற்பதில்லை.ஆனால் 105 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன், வெள்ளி, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. ஆனால் நடுவே அமைந்த வெள்ளி கிரகம் சூரியனை முழுதாக மறைப்பதில்லை. இதற்குக் காரணம் உண்டு.

சூரியன், வெள்ளி (சுக்கிரன்) பூமி ஆகிய மூன்றும்
ஒரே நேர்கோட்டில் இருந்தால் மட்டுமே வெள்ளி கடப்பு நிகழும்
சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி கிரகமோ 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நீங்கள் டிவி பார்க்கும் போது ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண் முன்னே புருவத்தைத் தொடுகிற அளவுக்கு உங்கள் கட்டை விரலை வைத்துக் கொண்டால் டிவி திரை முற்றிலுமாக மறைக்கப்படும். ஆனால் நீங்கள் அடுத்து கையை நன்கு நீட்டி வைத்துக் கொண்டால் அதே கட்டை விரல் டிவி திரையை மறைக்காது. டிவி திரையின் பின்னணியில் கட்டை விரல் கருப்பாகத் தெரியும்.

வெள்ளி கிரகம் சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே வந்து நிற்கும் போது அது சூரிய ஒளித் தட்டில் வெறும் கருப்புப் பொட்டு போலத் தெரிவதற்கு அதுவே காரணம். இதைத் தான் வெள்ளி கடப்பு (Transit of Venus) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வை தமிழகத்தில் உள்ளவர்கள் ஜூன் 6 ஆம் தேதி காலை காணலாம். சூரியன் உதிக்கும் போதே அதன் இடது புறத்தின் மேல் மூலையில் வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டாகத் தெரியும். இது இந்திய நேரப்படி காலை 10-20 வரை தெரியும். பின்னர் வெள்ளி கிரகம் சூரிய ஒளித் தட்டிலிருந்து விலகி விடும்.

சூரிய ஒளித் தட்டில் வெள்ளி  இவ்விதமாகக்
கரும் புள்ளியாகத் தெரியும்
சூரிய ஒளித் தட்டில் வெள்ளி கிரகம் கரும் பொட்டாகத் தெரிகின்ற வேளையில் வெள்ளி கிரகத்துக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் சுமார் 11 கோடி கிலோ மீட்டராக இருக்கும். வெள்ளி கடப்பின் போது அதை உலகின் பல பகுதிகளிலும் இருந்து விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்.

வெள்ளி கடப்பு ஒரு தடவை நிகழ்ந்தால் அடுத்து எட்டு ஆண்டுகளில் அதே போல இன்னொரு வெள்ளி கடப்பு நிகழும். இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டில் இது போன்ற வெள்ளி கடப்பு நிகழ்ந்தது. இதற்கு முன்னர் வெள்ளி கடப்பு 1874 ஆம் ஆண்டிலும் 1882 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தது. அடுத்து 2117 ஆம் ஆண்டிலும் 2125 ஆம் ஆண்டிலும் நிகழும். ஆனால் அவை தமிழகத்தில் தெரியாது. 2255 ஆம் ஆண்டில் நிகழும் வெள்ளி கடப்பு தமிழகத்தில் தெரியும்.

சூரிய ஒளித் தட்டில் வெள்ளி எவ்விதமாக நகரும்
என்பதை இந்த வரை படம் காட்டுகிறது
முன்பு 1761 ஆம் ஆண்டிலும் பின்னர் 1769 ஆம் ஆண்டிலும் நடந்த வெள்ளி கடப்பு வரலாற்று ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் முக்கியமானது. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பது அறியப்படாத காலம் அது. வெள்ளி கடப்பின் போது வெள்ளி கிரகம் சூரிய ஒளித் தட்டை எப்போது தொடுகிறது, எப்போது விலகுகிறது என்பதை மிகத் துல்லியமாக அறிந்து கொண்டால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட்டு விட முடியும் என்று அப்போது இங்கிலாந்தின் மற்றும் ரஷியாவின் விஞ்ஞானிகள் கருதினர். ஆகவே சூரிய கடப்பு நிகழும் போது உலகின் பல பகுதிகளுக்கும் விஞ்ஞானிகளை அனுப்பி இத்தகவல்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஏற்பாட்டின்படி 1761 ஆம் ஆண்டில் பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் சைபீரியாவுக்குச் சென்று வெள்ளி கடப்பு தகவலகளைப் பதிவு செய்தார். அதே விஞ்ஞானி பின்னர்1769 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவுக்கும் சென்று வெள்ளி கடப்பு நிகழ்வை ஆராய்ந்தார். அங்கு அவர் டைபாய்ட் ஜூரத்தால் பாதிக்கப்பட்டு கடைசியில் இறந்தே போனார். 1769 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்வதற்காக இங்கிலாந்திலிருந்து பிரபல கேப்டன் குக் தென் பசிபிக் கடலில் உள்ள தாகிதி தீவுக்கு அனுப்பப்பட்டார். அப்போதெல்லாம் பாய்மரக் கப்பலில் தான் கடற்பயணம் மேற்கொள்ள முடியும். கேப்டன் குக் எட்டு மாத கால கடற்பயணத்துக்குப் பிறகு தாகிதி தீவுக்கு போய்ச் சேர்ந்து அங்கிருந்தபடி வெள்ளி கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்தார்.

தாகிதி தீவுக்கு அனுப்பப்பட்ட
கேப்டன் குக்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கில்லாமே டி ஜெண்டில் என்ற விஞ்ஞானியின் அனுபவம் துயரம் வாய்ந்தது. அவர் 1760 ஆண்டு பாண்டிச்சேரி நோக்கிக் கப்பலில் கிளம்பினார். இந்தியாவில் காலூன்ற அப்போது இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடும் போட்டா போட்டி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் இடையிலான போரில் பாண்டிச்சேரி அடிக்கடி கைமாறியது.

ஜெண்டில் கிளம்பிய சமயம் பாண்டிச்சேரி பிரான்ஸ் வசம் இருந்தது. ஆனால் அவர் பாண்டிச்சேரி வந்து சேருவதற்குள் அது பிரிட்டிஷார் வசமாகிவிட்டிருந்தது. ஆகவே பாண்டிச்சேரியில் வந்து இறங்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் நடுக்கடலில் கப்பலில் இருந்தபடியே அவர் 1761 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பை ஆராய்ந்தார்.

அடுத்த வெள்ளி கடப்புக்கு மேலும் எட்டு வருடங்கள் இருந்தாலும் அவர் நாடு திரும்ப விரும்பவில்லை. எப்படியும் குறிக்கோளை அடைய விரும்பிய அவர்  ஆப்பிரிக்காவில் இருந்த பிரெஞ்சுப் பகுதிகளில் காலத்தைக் கழித்து விட்டு 1768 மார்ச் வாக்கில் மறுபடி பாண்டிச்சேரிக்குத் திரும்பினார். அது மீண்டும் பிரான்ஸ் வசம் வந்துவிட்டதால் அவருக்குப் பிரச்சினை ஏற்படவில்லை. பாண்டிச்சேரியில் சிறிய வான் ஆராய்வுக்கூடத்தை நிறுவி 1769 ஜூன் 4 ஆம் தேதி நிகழவிருந்த வெள்ளி கடப்பை ஆராய்வதற்கு ஆயத்தமானார். அந்தத் தேதியும் வந்தது.

ஆனால் அவரது துரதிருஷ்டம், வான்ம் மேகங்களால் சூழப்பட்டதாகக் காட்சி அளித்தது..பைத்தியம் பிடிக்காத குறை. மனமொடிந்தவராக தாயகம் நோக்கிக் கிளம்பினார். கப்பலில் செல்கையில் அவருக்கு வயிற்றுக் கடுப்பு. ஏதோ தீவில் அவரை இறக்கிவிட்டுச் சென்றனர். பிறகு ஒரு வழியாக பிரான்ஸ் வந்து சேர்ந்தார். 11 ஆண்டுகளாக ஆளைக் காணாததால் அவர் செத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

பிரெஞ்சு ராயல் அகாடமியில் அவர் வகித்து வந்த பதவியில் வேறு ஒருவர் அமர்ந்திருந்தார். அது கூடப் பரவாயில்லை. தமது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டதை அறிந்தார். ஜெண்டிலின் சொத்துக்களை அவரது சொந்தக்காரர்கள் பிரித்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

ஜெண்டில் வழக்குப் போட்டார். மன்னரிடம் முறையிட்டார். மீண்டும் பதவி கிடைத்தது. சொத்துக்களும் அவரது கைக்கு வந்தன. அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கினார். எவ்வளவோ இன்னல்கள் ஏற்பட்டாலும் அறிவியலுக்காக அவற்றைத் தாங்கிக் கொண்ட விஞ்ஞானிகளில் ஜெண்டிலும் ஒருவர்.

1769 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பின் போது உலகில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் பல நாடுகளின் விஞ்ஞானிகளும் சேகரித்த தகவல்களை வைத்து கணக்கிட்டதில் பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் 93 மில்லியன் மைல்களாக இருக்கலாம் என்று உத்தேசமாகத் தோன்றியது. அதுவரையில் சூரியனுக்கு உள்ள தூரம் 55 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டு வந்தது. 1960 களில் நவீன முறைகளைப் பின்பற்றிக் கணக்கிட்டதில் சூரியனுக்கு உள்ள சராசரி தூரம் 149 மிலியன் கிலோ மீட்டர் என்பது தெரிய வந்தது.

 இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, ஜூன் 6 ஆம் தேதி காலை சூரியன் உதித்த பின்னர் சூரிய ஒளித் தட்டில் வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டாகத் தெரியுமா என்பது உங்கள் ஊரில் வானிலை நிலவரம் எப்படி என்பதைப் பொருத்தது.

4 comments:

  1. நல்ல தகவல் நன்றி ஐயா இங்கு பஹ்ரைன் தினசரியிலும் இது பற்றி செய்தி வந்துள்ளது.

    ReplyDelete
  2. உங்கள் பதிவு பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.
    நேரமிருப்பின் பார்த்து கருத்தளிக்கவும்
    http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
  3. Story of Mr.Jentile is very Pathetic. But his perseverence should be honoured

    ReplyDelete