Pages

Apr 23, 2012

அண்டார்டிகாவில் ஒரு சென்சஸ்

சென்சஸ் என்றால் அது மனிதர்களை எண்ணுவதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பறவைகளின் கணக்கெடுப்பும் சென்சஸ் தான். அண்டார்டிகா பனிக் கண்டத்தில் பெங்குவின் பறவைகள் எவ்வளவு உள்ளன என்று அறியும் பொருட்டு சென்சஸ் நடத்தினர்.அங்கு மொத்தம் 6 லட்சம் பெங்குவின்கள் உள்ளன என்பது தெரிய வந்தது.

அண்டார்டிகாவில் பெங்குவின் கூட்டம்
இவை எம்பரர் பெங்குவின்(Emperor) எனப்படும் வகையைச் சேர்ந்தவை. பெங்குவின் எண்ணிக்கை நிபுணர்கள் நினைத்ததை விட இரண்டு மடங்கு உள்ளதாம். சிட்டுக்குருவிகள் மறைந்து வரும் நிலையில் இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான். மனித நடமாட்டமில்லாத இடம் என்பதால் பெங்குவின்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சொல்லலாம்.

எம்பரர் பெங்குவின்களை எப்படிக் கணக்கெடுத்தார்கள் - செயற்கைக்கோள் உதவியுடன் தான். இப்படி பல விஷயங்களுக்கும் செயற்கைக்கோள் கைகொடுக்கிறது. விண்வெளியிலிருந்து பார்த்தால் அண்டார்டிகா கண்டம் மொத்தமும் சலவை செய்த வெள்ளைத் துணியை விரித்தது போல இருக்கும். காடு, மரம், செடி, கொடி என எதுவும் கிடையாது.

சுற்றிலும் உறைபனியாக உள்ளதைக் கவனிக்கவும்
பெங்குவின் பறவை தான் என்றாலும் பறக்க முடியாது. எவ்வளவு பறவைகள் உள்ளன என்று கணக்கெடுப்பதற்கு இது சௌகரியமாக இருந்தது. தவிர பெங்குவின்களைப் பார்த்தால் கால் வரை வெள்ளை நிற அங்கி அணிந்து கருப்பு நிறக் கோட்டு போட்டு நிற்பது போல இருக்கும். பெங்குவின்களை அடையாளம் காண இது நன்கு உதவியது.

அண்டார்டிகா கண்டத்தில் எம்பரர் பெங்குவின் போன்ற சைஸில் வேறு விலங்குகள் கிடையாது. அதுவும் கணக்கெடுப்புக்கு உதவும் அம்சமாக இருந்தது.

பெங்குவின்கள் கூட்டம் கூட்டமாகத் தான் இருக்கும். ஒரு கூட்டத்தில் பல நூறு பெங்குவின்கள் இருக்கலாம்.முதலில் எவ்வள்வு கூட்டங்கள் உள்ளன என்று கணக்கெடுத்தனர். அடுத்து ஒரு கூட்டத்தில் எவ்வளவு என்று கணக்கிட்டனர்.

எம்பரர பென்குவின்கள் விலங்குகள்தான். ஆனால் குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கும் சம பொறுப்பு உண்டு என்பதை அவை உலகுக்குப் பறை சாற்றுபவையாக உள்ளன.

தெருக்கோடியில் உள்ள கடையில் போய் அரிசியும் காய்கறியும் வாங்கிக் கொண்டு சீக்கிரம் வருகிறேன். அதுவரை குழந்தையை பாத்துக்குங்க என்று சொல்லிக் கிளம்பும் மனைவியிடம், ”இதோ பாரு,குழந்தையைப் பார்த்துகறது என் வேலையில்ல” என்று சொல்கின்ற கணவன்மார்கள் எம்பரர் பெங்குவின்கள் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

தந்தையின் மடியில் பெங்குவின் குஞ்சுகள்
அண்டார்டிகாவில் 6 மாதம் பகல். 6 மாதம் இரவு. எப்போதுமே பெண் பெங்குவின்கள் மார்ச் மாதம் வாக்கில் - இரவுக் காலம் தொடங்கும் போது தான் - முட்டையிடும். அக்காலகட்டத்தில் அண்டார்டிகாவில் குளிர் மைனஸ் 40 டிகிரி அளவுக்கு இருக்கும். அக்கடும் குளிரில் முட்டை தரையில் விழுந்தால் கெட்டுவிடும். குஞ்சு பொரியாது.

ஆகவே பெண் பெங்குவின் மிக ஜாக்கிரதையாக முட்டையை மிக அருகே நிற்கின்ற ஆண் பெங்குவினின், அதாவது தனது கணவனி,ன் பாதங்களுக்கு மாற்றும். உடனே பெண் பெங்குவின் உணவு சேகரித்து வருவதற்காகக் கடலை நோக்கிக் கிளம்பிவிடும். தன் பாதங்களில் வைக்கப்பட்ட முட்டையை ஆண் பெங்குவின் தனது வயிற்றுப் பகுதியில் உள்ள தோலினால் போர்த்தும். இந்த ஏற்பாடு முட்டைக்கு நல்ல கதகதப்பை அளிக்கும். அப்போதிலிருந்து ஆண் பெங்குவின் அந்த முட்டையை அடைகாக்கத் தொடங்கும்.

பெண் பெங்குவின்களின் கடலை நோக்கிய பயணம் எளிதானது அல்ல. சுமார் 100 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். பெங்குவின்கள் எல்லாமே இரண்டு கால்களால் விசித்திரமாக நடை போடும். கடல் பகுதிக்குப் போய்ச் சேர பல வாரங்கள் பிடிக்கும்.

எல்லா பெண் பெங்குவின்களும் கூட்டமாகக் கடலை நோக்கிக் கிளம்பிய பின்னர் அந்த இருளில் கடும் குளிரில் ஆண் பெங்குவின்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்ட நிலையில் கூட்டமாக அன்ன ஆகாரம் இன்றி முட்டைகளை அடைகாத்தபடி அப்படியே நிற்கும். சுமார் ஒன்பது வார காலம் இவ்விதம் நிற்ப்தால் அவை பாதியாக இளைத்து விடும். ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி நிற்பதால் பரஸ்பர உடல் சூடு காரணமாக அனைத்துக்கும் சற்றே கதகதப்பு கிடைக்கும். கூட்டத்தின் நடுப் பகுதியில் நின்றால் நல்ல கதகதப்பு. ஆகவே நடுவே வந்து நிற்க அனைத்துக்கும் சான்ஸ் கிடைக்கும்.

கடைக்கு அரிசி வாங்கப் போகின்ற குடும்பத் தலைவி மாதிரி கடலை நோக்கிச் செல்லும் பெண் பெங்குவின்கள் அனைத்தும் கடலில் இறங்கி குழந்தைகளுக்கும் சேர்த்து வயிறு முட்ட இரை தின்னும். பின்னர் இவை அனைத்தும் திரும்பி வந்து சேரும் சமயத்தில் குஞ்சுகள் பொரிந்து விடும்.

பெங்குவின்கள் நடக்கும் விதம் மிக அலாதியானது
பெண் பென்குவின்கள் திரும்பி வருவதற்குள் குஞ்சு வெளியே வந்து விட்டால் அப்பா பெங்குவின் தனது உணவுக் குழலிலிருந்து ஜீரணமான உணவு போன்ற ஒரு பொருளை வெளியெ கொண்டு வந்து குஞ்சுக்கு ஊட்டும். தக்க நேரத்தில் தாய் பெங்குவின்கள் வந்து சேர்ந்து விட்டால் குஞ்சுகளுக்கு இரைக்குப் பஞ்சமில்லை. தாய் பெங்குவின்கள் தங்களது வயிற்றுக்குள் சேர்த்து வைத்துள்ள உணவை குஞ்சுகளுக்கு ஊட்டும்.

பெண் பெங்குவின்கள் வந்து சேர்ந்த பின்னர் அதுவரை பட்டினி கிடந்த ஆண் பெங்குவின்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ள கடலை நோக்கிக் கிளம்பும். குஞ்சுகள் சற்று வளர்ந்ததும் அவையும் தாய்மார்களுடன் கடலை நோக்கிக் கிளம்பும். இதற்குள் ஆறு மாத இரவுக் காலம் முடிந்து 6 மாத பகல் காலம் தொடங்கி விடும்.

வெள்ளை அங்கியும் கருப்புக் கோட்டும்
அணிந்தது போல...
எம்பரர் பெங்குவின்கள் ஏன் கடலுக்கு அருகில் கூட்டம் சேர்ந்து நிற்பதற்குப் பதில் கடலிலிருந்து மிகவும் தள்ளி அமைந்த இடத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன? அண்டார்டிகாவில் குளிர் காலத்தில் கடும் காற்று வீசும். மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் போது நுண்ணிய பனிக்கட்டித் துகள்கள் உடலில் ஊசி குத்துவது போலத் தாக்கும். அண்டார்டிகாவின் உள் பகுதிகளில் முகடுகள் உண்டு. இவை காற்றின் வேகத்தை மட்டுப்படுத்தும். ஆகவே தான் பெங்குவின்கள் கடும் காற்று குறைவாக உள்ள இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

எம்பரர் பெங்குவின்களை விலங்குக் காட்சிசாலைகளில் வளர்ப்பது மிகவும் கடினம். கடும் குளிர்ச்சியை உண்டாக்குவதில் பிரச்சினைகள் அதிகம். ஆனாலும் உலகில் சில விலங்குக் காட்சிசாலைகளில் பெரும்பாடு பட்டு பெங்குவின்களை வளர்க்கின்றனர்.

பெங்குவின்கள் பற்றி நிறையப் புத்தகங்கள் உள்ளன. டாகுமெண்டரி சினிமாப் படங்கள் உள்ளன. ஹாலிவுட் படங்களும் உள்ளன.

7 comments:

  1. மிகவும் அருமையாக இருந்தது இந்த பெங்குவின் கட்டுரை. நன்றி அய்யா.

    நாகு
    www.tngovernmentjobs.in
    www.nagaindian.blogspot.com

    ReplyDelete
  2. very useful article sir :) thank you. Keep posting articles.

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை.

    நேரம் இருந்தால் இதையும் பாருங்க.

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/02/blog-post_04.html

    ReplyDelete
  4. அழகா சொன்னீங்கள் மனிதர்கள் கால் வைக்காததால் அந்த இனங்கள் இம்மதியாக வாழ்கின்றன இல்லை அதையும் அழித்து ஒழித்து நாசம் செய்துவிடுவார்கள்.

    ReplyDelete
  5. அழகா சொன்னீங்கள் மனிதர்கள் கால் வைக்காததால் அந்த இனங்கள் இம்மதியாக வாழ்கின்றன இல்லை அதையும் அழித்து ஒழித்து நாசம் செய்துவிடுவார்கள்.

    http://www.sinthikkavum.net/2012/04/blog-post_23.html

    ReplyDelete
  6. பெங்குயன் பற்றி பீ பீ சீ ஆவன படம் பார்த்துள்ளேன் இறைவனின் விசித்திரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  7. சிறப்பான தகவல்கள் நன்றி

    ReplyDelete