Pages

Apr 15, 2012

பூகம்பங்கள் அதிகரித்து வருகிறதா?

ஏப்ரல் 11 -- சுமத்ரா தீவுக்கு மேற்கே கடும் பூகம்பம் -- ரிக்டர் 8.6
ஏப்ரல் 11 -- அதே இடத்தில் மீண்டும் பூகம்பம் -- ரிக்டர் 8.2
ஏப்ரல் 11 -- மெக்சிகோ அருகே பூகம்பம் -- ரிக்டர் 6.5

ஏப்ரல் 12 -- கலிபோர்னியா வளைகுடா பூகம்பம் -- ரிக்டர் 6.2
ஏப்ரல் 12 -- அதே கலிபோர்னியா வளைகுடா மறுபடி பூகம்பம் -- ரிக்டர் 6.9

ஏப்ரல் 13 -- இத்தாலியில் பூகம்பம் -- ரிக்டர் 4.7
ஏப்ரல் 13 -- ஜப்பானில் ஹான்ஷூ தீவுக்குக் கிழக்கே பூகம்பம் -- ரிக்டர் 5

ஏப்ரல் 14 -- இந்தியாவில் குஜராத்தில் பூகம்பம் ரிக்டர் -- 4.1
ஏப்ரல் 14 -- இந்தியாவில் மகாராஷ்டிர மானிலத்தில் பூகம்பம் -- ரிக்டர் 5
ஏப்ரல் 14 -- அதே மகாராஷ்டிர மானிலத்தில் மறுபடி பூகம்பம் -- ரிக்டர் 4

மேலே உள்ள பட்டியலைப் பார்வையிட்டால் உலகில் திடீரென பூகமபங்கள் அதிகரித்து வருவதாக எண்ணத் தோன்றும். அத்துடன் மனதில் ஓர் அச்சமும் ஏற்படும்.

மாயா காலண்டர், சாயா காலண்டர் என எதையெல்லாமோ ‘ஆதாரம்’ காட்டி 2012 டிசம்பர் கடைசியில் பூமி அழியப் போகிறது என்று உலக அளவில் பீதி கிளப்பி வரும் கும்பல்கள் வாயை மெல்ல ஆரம்பித்து விட்டனர். ’இவையெல்லாம் நாங்கள் சொன்னபடி நடக்கப் போவதைக் காட்டுகின்றன’ என்று பேச ஆரம்பித்துள்ள்னர்.

ஆனால் உண்மை நிலைமை வேறு. உலகில் பூகம்பம் அல்லது நில நடுக்கம் இல்லாத நாளே கிடையாது. சொல்லப்போனால தினமும் சராசரியாக 50 பூகம்பங்கள் நிகழ்கின்றன (ரிக்டர் அளவில் 4-க்கும் அதிகமாக உள்ளவை) .

உலகில் எங்கு நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதை அமெரிக்க புவியியல் சர்வே அமைப்பு (U.S Geological Survey) பதிவு செய்கிறது. சுருக்கமாக USGS  என்று குறிப்பிடப்படும் இந்த அமைப்பின் தகவல்களின்படி ஓராண்டில் சுமார் 20 ஆயிரம் பூகம்பங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் ரிக்டர் அளவில் 4-க்கும் அதிகமாக உள்ளவை. ரிக்டர் அளவில் 4-க்கும் குறைவாக உள்ள பூகம்பங்களையும் சேர்த்தால் ஓராண்டில் 15 லட்சம் பூகம்பங்கள் நிகழ்கின்றன.

ஓரிடத்தில் ரிக்டர் அளவில் 3-க்கும் குறைவான நில் நடுக்கம் ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது தெரியாம்லேயே போகலாம். ரிக்டர் அளவில் 4-க்கும் அதிகமான நில நடுக்கங்களே நன்கு உணரப்படும்.

ரிக்டர் அளவில் 8 அல்லது அதற்கு அதிக அளவில் உள்ள பூகம்பமே மிகக் கடுமையானது. அவ்விதமான கடும் பூகம்பம் ஓராண்டில் ஒன்று அல்லது இரண்டு நிகழலாம். அதிசயமாக 2007 ஆம் ஆண்டில் நான்கு கடும் பூகம்பங்கள். இந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்குள்ளாக இரண்டு நிகழ்ந்துள்ளன. எனினும் பொதுவில் கூறுவதானால் பூகம்பங்கள் இப்போது திடீரென அதிகரித்துள்ளதாகக் கருத இடமில்லை.

உலகில் நிகழும் பூகம்பங்களுக்கும் சூரியனில் காணப்படும் கரும் புள்ளிகளுக்கும் இடையே ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கலாம் என்று கடந்த பல ஆண்டுகளாக ஒரு கொள்கை உள்ளது. அதாவது சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகிறது. கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் போது பூமியில் பூகம்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஒரு சிலர் கருதுகின்றனர்.ஆனால் அவ்விதம் கருத அறிவியல் ரீதியில் ஆதாரம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்ற்னர்.

4 comments:

  1. மீடியாக்கள் பரபரப்புக்காக எதையாவது உருவாக்கி விடுகின்றனர். உண்மை நிலையை தெளிவாக விளக்கியதற்கு நன்றி!

    ReplyDelete
  2. yes sir. Media causes panic among people. thanks for narrating clearly

    ReplyDelete
  3. பரபரப்புதான் முக்கியமாப்போயிருச்சு.

    தினம் நாலைஞ்சு ஆட்டம் இங்கேயும் நடன்துக்கிட்டேதான் இருக்கு. இன்னிக்குப்பொழுது விடிஞ்சு இதுவரை அஞ்சு:-)

    http://quake3.crowe.co.nz/QuakeList/

    நாங்களும் மேலே உள்ள சுட்டியில் ஒரு கண் வச்சுக்கிட்டே வேலையைப் பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. அய்யா வணக்கம்,

    The Intensity scale-Mercalli இந்த scale பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அய்யா...

    மிக்க நன்றி!

    சசு.அருள்,திருவண்ணாமலை

    ReplyDelete