Apr 11, 2012

தமிழகத்தில் நில நடுக்கம்: மக்கள் பீதி

Share Subscribe
சென்னை உட்ப்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏப்ரல் 11 ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவிலும் பின்னர் 4 மணி அளவிலும் கடும் நில நடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். சென்னையில் அடுக்கு மாடிக் கட்டடங்களில் பணி புரிந்து வந்த ஊழியர்கள் கீழே ஓடி வந்த பின்னர் திரும்ப மேலே செல்லத் தயங்கினர். பூகம்பம், அதாவது நில நடுக்கம், என்பது தமிழகத்தில் அபூர்வமானதே. ஆகவே தான் இந்த பீதி.

இந்த பூகம்பம் சுமத்ரா தீவின் மேற்குப் பகுதியில் கடலுக்கு அடியில் நிகழ்ந்தது. ரிக்டர் ஸ்கேல்(Richter) அளவில் 8.6 புள்ளி இருந்தது. அதாவது அது கடும் பூகம்பம். பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் தமிழகத்தையும் எட்டியதால்தான் தமிழகத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் தினமும் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதி, ஜப்பான், நியூசீலந்து போன்ற பகுதிகளில் நில நடுக்கங்கள் மிக சகஜம். பல நில அதிர்வுகள் ஓரிரு வினாடிகளே நீடிக்கும். பழகிப் போன காரணத்தால் மக்கள் அலட்டிக் கொள்ளாமல் தங்களது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பர். ஆனால் ரிக்டர் ஸ்கேல் அளவில் 8 என்பதான பூகம்பம் சராசரியாக ஓராண்டில் ஒரு முறை தான் நிகழ்வதாகும்.

அப்படியான பூகம்பத்தின் அதிர்ச்சி மிகத் தொலைவில் உள்ள பகுதிகளிலும் உணரப்படும். ஒரு லாரியிலிருந்து சிமெண்ட் மூட்டையைக் கீழே தூக்கிப் போட்டால் நிலத்தில் லேசாக அதிர்ச்சி ஏற்படும். அதே ஒரு கிரேனிலிருந்து விழுந்தால் 100 மீட்டர் தொலைவிலும் அந்த அதிர்ச்சி உணரப்படும். பூகம்ப விஷயத்திலும் இது பொருந்தும்.

ஆகவே தான் புதன்கிழமையன்று சுமத்ரா தீவுக்கு மேற்கே இரண்டு தடவை ரிக்டர் ஸ்கேலில் 8 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்ட போது அது சுமார் 2700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழகத்திலும் உணரப்பட்டது. ஆனால் சுமத்ரா அருகே அதே இடத்தில் ரிக்டர் ஸ்கேலில் 5 அளவுக்குத் தொடர்ந்து பல தடவை பூகம்பம் ஏற்பட்ட போதெல்லாம் அது சென்னையில் உணரப்படவில்லை.

இந்த ரிக்டர் ஸ்கேல் அளவில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ரிக்டர் ஸ்கேலில் 5 என்பதற்கும் 6 என்பதற்கும் வித்தியாசம் எண்ணிக்கை அளவில் ஒன்று தான் வித்தியாசம். ஆனால் ரிக்டர் ஸ்கேலில் 6 அளவிலான பூகம்பம் ரிக்டர் ஸ்கேலில் 5 அளவிலான பூகம்பத்தை விட 10 மடங்கு கடுமையானது.
ரிக்டர் ஸ்கேலில் 4 எனப்படும் பூகம்பத்தை விட ரிக்டர் 8 அளவிலான பூகம்பம் பத்தாயிரம் மடங்கு கடுமையானது. அந்த வகையில் பார்க்கும் போது 2004 டிசம்பரில் ஏற்பட்ட கடலடி பூகம்ப்ம் ( ரிக்டர் அளவில் 9.3) இப்போதைய பூகம்பத்தை விட சுமார் 10 மடங்கு கடுமையானதே.

2004 ஆம் ஆண்டில் கடலடி பூகம்பமும் சுனாமியும்
தோன்றிய இடம் (சிவப்பு வட்டம்). இப்போதைய
கடலடி பூகம்பம் இந்த இடத்துக்கு
சற்று மேற்கே நிகழ்ந்துள்ளது.
இப்போதைய கடலடி பூகம்பத்தைத் தொடர்ந்து ஒரு வேளை சுனாமி தாக்குதல் ஏற்படலாமோ என்ற அச்சத்தில் அது பற்றி தமிழகக் கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் மாலையில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. கடலடி பூகம்பம் ஏற்படும் போதெல்லாம் சுனாமி தாக்குதல் ஏற்பட்டாக வேண்டும் என்ற அவசியமில்லை. தவிர, இப்போதைய பூகம்பமானது கடல் தரைக்கு அடியில் பிரம்மாண்ட பாளங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்டதே என்று உலக அளவில் பூகம்பங்களைக் கண்காணித்து வருகின்ற அமெரிக்க USGS  அமைப்பு விளக்கம் கூறியது.

2004 ஆம் ஆண்டில் சுனாமி பற்றி முன்கூட்டி எச்சரிப்பதற்கான ஏற்பாடு இல்லாத காரணத்தால் தமிழகக் கரையோர மாவட்டங்களில் பல ஆயிரம் பேர் உயிரிழந்தன்ர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் சென்னை நகரில் புதன் மாலையில் சுனாமி வருவதை நேரடியாகக் ஆகக் காணும் ஆசையில் ஏராளமானவர்கள் கடற்கரையில் திரண்டனர். சுனாமி அலைகளின் வேகமும் அதன் தாக்குதல் சக்தியும் யாராலும் எதிர்கொண்டு நிற்க முடியாத அளவிலானவை. மக்களின் மடமை கண்டு வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை.

இப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தின் விளைவாகப் பல இடங்களில் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதாக தமிழ் டிவி சேனல்களில் தெரிவிக்க்கப்பட்டது. நல்ல வேளையாகக் கட்டடம் எதுவ்ம் இடிந்து விழுந்ததாகத் தகவல் இல்லை.

பூகம்பம் மனிதனைக் கொல்வதில்லை. கட்டடங்கள்தான் மனிதனைக் கொல்கின்றன என்று சொல்வதுண்டு. அது உண்மையே. பூகம்ப ஆபத்து எப்போதும் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் எண்ணற்ற அடுக்கு மாடிக் கட்டடங்கள் உள்ளன. இவையெல்லாம் பூகம்பத்தைத் தாங்கி நிற்குமாறு தகுந்த விதிமுறைகளின் படி கட்டப்பட்டவை

1989 ஆம் ஆண்டில் சான்பிரான்சிஸ்கோ வட்டாரத்தில் லோமா பிரிட்டா என்னுமிடத்தில் பூகம்பம் (ரிக்டர் ஸ்கேலில் 6.9) ஏற்பட்ட போது சான்பிரான்சிஸ்கோ நகரில் 30 மாடி 40 மாடிக் கட்டடங்களின் உச்சிப் பகுதிகள் இப்படியும் அப்படியுமாக ஆடின. ஆனால் இடிந்து விழவில்லை. இந்த பூகம்பத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இத்துடன் ஒப்பிட்டால் 2001 ஜனவரியில் குஜராத்தில் பூஜ் என்னுமிடத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ( ரிக்டர் அளவில் 7.7) சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலோர் கட்டடங்கள் இடிந்ததால் அவற்றின் அடியில் சிக்கி உயிரிழந்தவர்களே.

நமது நாட்டில் கட்டடங்களைக் கட்டுவதில் விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படுவதில்லை. இனிமேலாவது இது விஷயத்தில் கண்டிப்பு காட்டப்பட வேண்டும்.

காண்க:
பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?
சில்லுகள் போர்த்திய பூமி

5 comments:

Anonymous said...

அய்யா,மிகவும் அற்புதம்,மிக்க நன்றி!

சசு.அருள்,திருவண்ணாமலை

Anonymous said...

அறியாமையை போக்கிட உதவிய மிகச்சிறந்த பதிவு. தொடர்ந்து செயலாற்றுங்கள்! மிக்க நன்றி!

Anonymous said...

Sir, this below line is not clear for me. Can you please explain more?

இந்த ரிக்டர் ஸ்கேல் அளவில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ரிக்டர் ஸ்கேலில் 5 என்பதற்கும் 6 என்பதற்கும் வித்தியாசம் எண்ணிக்கை அளவில் ஒன்று தான் வித்தியாசம். ஆனால் ரிக்டர் ஸ்கேலில் 6 அளவிலான பூகம்பம் ரிக்டர் ஸ்கேலில் 5 அளவிலான பூகம்பத்தை விட 10 மடங்கு கடுமையானது.
ரிக்டர் ஸ்கேலில் 4 எனப்படும் பூகம்பத்தை விட ரிக்டர் 8 அளவிலான பூகம்பம் பத்தாயிரம் மடங்கு கடுமையானது. அந்த வகையில் பார்க்கும் போது 2004 டிசம்பரில் ஏற்பட்ட கடலடி பூகம்ப்ம் ( ரிக்டர் அளவில் 9.3) இப்போதைய பூகம்பத்தை விட சுமார் 10 மடங்கு கடுமையானதே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிறப்பான பதிவு.

Salahudeen said...

ரிக்டர் அளவு கோல் பற்றி தெளிவாக விளக்கி உள்ளிர்கள் நன்றி அய்யா ஆனால் //ரிக்டர் ஸ்கேலில் 4 எனப்படும் பூகம்பத்தை விட ரிக்டர் 8 அளவிலான பூகம்பம் பத்தாயிரம் மடங்கு கடுமையானது// இதில் ஏதும் எழுத்து பிழை உள்ளதா? மேலும் நில நடுக்கம் வருவதை முன்பே அறியும் கருவி இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை ஏன்?

Post a Comment