மனித வரலாற்றில் இதற்கு முன்னர் 1960 ஆம் ஆண்டில் கடல் ஆராய்ச்சியாளர், ஜாக் பிக்கா, அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ் ஆகிய இருவரும் ட்ரீயஸ்ட்(Trieste) என்னும் நீர்மூழ்குகலம் மூலம் சேலஞ்சர் மடுவுக்குச் சென்றனர். இப்போது கேமரான் மூன்றாவது நபராகச் சென்றுள்ளார்.
ட்ரீயஸ்ட் நீர்மூழ்கு கலம் கடலுக்குள் இறக்கப்படுகிறது. மேற்புறம் பெரிய வடிவில் இருப்பது பெட்ரோல் டாங்க். அதன் அடிப்புறத்தில் உள்ள கோளத்துக்குள் தான் இருவர் அமர்ந்திருந்தனர். |
கடலில் மேலும் மேலும் ஆழத்தில் இறங்கும் போது அழுத்தம் பயங்கரமாக அதிகரிக்கும். சேலஞ்சர் மடுவில் கடலடித் தரையில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு இருக்கும். தகுந்தபடி வடிவமைக்கப்படாவிட்டால் அது அப்பளம் போல நொறுங்கி விடும். கடலடித் தரையில் நீரின் அழுத்தம் மிக அதிகம் என்பதால் நீர்மூழ்கு கலத்திலிருந்து வெளியே வருவது என்பது சிந்தித்துப் பார்க்க முடியாத விஷயம்.
நீர்மூழ்கு கலங்கள் கடலுக்குள் இறங்குவதைப் பொருத்த வரையில் பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ள அதே முறை தான் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. கரையையொட்டி ஆழம் குறைந்த கடல் பகுதியில் முத்தெடுப்பதற்காக உள்ளே இறங்குபவர்கள் கடந்த காலத்தில் இடுப்பில் பெரிய கல்லைக் கட்டிக் கொள்வர். முத்துச் சிப்பிகளைச் சேகரித்த பின்னர் கல்லைத் தூர எறிந்து விடுவர் பின்னர் மேலே வந்து சேருவர். கல்லைக் கட்டிக்கொண்டால் கல்லின் எடை காரணமாக எளிதில் உள்ளே இறங்க முடியும்.
ஜாக் பிக்காவின் ட்ரீயெஸ்ட், கேமரானின் டீப்சீ சேலஞ்சர் கலம் ஆகிய இரண்டிலும் அடிப்படையில் இதே முறை தான் பயன்படுத்தப்பட்டது. அதாவது உள்ளே இறங்குவதற்கு அக்கலங்களில் எடை சேர்க்கப்பட்டது.
கேமரான் பயன்படுத்திய டீப்சீ சேல்ஞ்சர் கலம். இது கடலுக்குள் செங்குத்தாகத்தான் இறங்கியது |
நீங்கள் ஒரு மரத் துண்டை தண்ணீர் நிரம்பிய வாளியில் போட்டால் அது மிதக்கும். ஆனால் அந்த மரத்துண்டுடன் ஒரு சிறிய கல்லைக் கட்டி வாளியில் போட்டால் மரத்துண்டு அடி மட்டத்துக்குப் போய்ச் சேரும். மரத்துண்டுடன் இணைந்த கல் தனியே அகன்று விடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே அந்த மரத்துண்டு மேலே வந்து மிதக்க ஆரம்பித்து விடும்.
இந்த இரு நீர்மூழ்கு கலங்களிலும் கடலுக்குள் இறங்குவதற்கோ அல்லது கடலடிக்குச் சென்ற பின்னர் மேலே வருவதற்கோ எஞ்சின் எதுவும் கிடையாது. ஆகவே தான் எடை சேர்க்க வேண்டியுள்ளது. சரி, இவை கடலடியில் பணியை முடித்த பின்னர் மேலே வருவது எப்படி?
சேலஞ்சர் மடுவிலிருந்து மேலே வந்தவுடன் கேமரான் பேட்டி அளிக்கிறார் |
கேமரானின் டீப்சீ சேலஞ்சர் நீழ்மூழ்கு கலம் மேலே வருவது என்று முடிவு செய்யப்பட்டவுடன் அதில் இருந்த இரும்பு வில்லைகள் இதே போல வெளியேற்றப்பட்டன. அந்த நீர்மூழ்குக் கலம் கெட்டியான விசேஷ நுரைப் பொருளால் ஆனது. அது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது. ஆகவே இரும்புத் வில்லைகள் வெளியேற்றப்பட்டதும் அது மரத்துண்டு போல மேலே வந்து மிதக்க ஆரம்பித்தது.
டீப்சீ சேலஞ்சர் நீர்மூழ்கு கலத்தின் இன்னொரு தோற்றம் |
கேமரானின் நீர்மூழ்கு கலத்தில் தனி ஏற்பாடாக மின்சார மோட்டார் இருந்தது. கடலடித் தரையை அடைந்த பின்னர் அதை சற்று முன்னே செலுத்தவும் பக்கவாட்டில் திரும்பச் செய்யவும் ஏற்பாடுகள் உள்ளன. இந்த ஏற்பாடுகள் செயல்படுவதற்காகவே மின்சார மோட்டார். ட்ரீயஸ்ட் கலத்துடன் ஒப்பிட்டால் டீப்சீ சேலஞ்சர் மிக நவீனமானது என்பதில் ஐயமில்லை.
டைட்டானிக் உட்ப்ட பல பிரபல சினிமாப் படங்களை எடுத்தவரான ஜேம்ஸ் கேமரான் கேமராவைப் பயன்படுத்தி ஜாலவித்தை செய்ப்வர். டீப்சீ சேலஞ்சர் அவருக்காகவே உருவாக்கப்பட்டது . அந்த அளவில் அதன் வெளிப்புறத்தில் பல கேமராக்களும் மின்சார பாட்டரிகளால் இயங்கும் சக்திமிக்க மின் விளக்குகளும் உள்ள்ன. இவை கடலுக்கு அடியில் முப்பரிமாணப் படங்களை எடுக்க உதவுபவை. ஒரு விமரிசகர் கூறுகையில் டீப்சீ சேலஞ்சரில் ஒரு டிவி ஸ்டுடியோவே அடங்கியுள்ளது என்றார்.
பொதுவில் நீர்மூழ்கு கலங்களால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு செல்ல முடியாது.கடலுக்குள் இறங்குவதானால் இவை ஒரு கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் குறிப்பிட்ட இடத்தில் கிரேன் மூலம் இறக்கப்படும். அதே போல பணி முடிந்து மேலே வந்ததும் மறுபடி கப்பலில் ஏற்றப்படும். தவிர, நீர்மூழ்கு கலம் மறுபடி கடலுக்குள் இறங்குவதானால் புதிதாக இரும்பு வில்லைகள் நிரப்பப்பட வேண்டும்.
ஜேம்ஸ் கேமரான் போலவே ரிச்சர்ட் பிரான்சன் என்ற மற்றொரு கோடீஸ்வரர் ஆழ் கடலுக்குச் செல்ல நீர்மூழ்குக் கலம் ஒன்றை உருவாக்கி வருகிறார் (படம் கீழே). பிரான்சன் வசதி படைத்தவர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல விசேஷ விண்வெளி வாகனம் ஒன்றை உருவாக்கி வருபவர். ஆழ் கடல் மீதும் அவர் கண் வைத்துள்ளார. சேலஞ்சர் மடுவை எட்டிப் பிடிப்பதிலான போட்டியில் கேமரான், பிரான்சனை முந்திக் கொண்டு விட்டதாகவும் கூறலாம்.
இது கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் பயன்படுத்த இருக்கும் நீர்மூழ்கு கலம். இதில் விமானத்துக்கு உள்ளது போன்ற இறக்கைகள் உண்டு. Courtesy: Virgin Oceanic |
காண்க: பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்
8 comments:
பெட்ரோலை எதற்கு நிரப்ப வேண்டும்? காற்றை நிரப்பியிருந்தால் அதைவிட எடை குறைவாகவும், செலவும் குறைவாகவும் இருந்திருக்குமே? விளக்குவீர்களா?
சரவணன்
விபரமான செய்திகள். ஆழ்கடலில் கீழ்நோக்கிய பயணம் குறித்து..
வாழ்த்துகள் நண்பரே
பல புதிய தகவல்கள். நன்றி சார்!
இது போல் பூமிக்கடியில் ட்ரில் செய்து இதுவரை எவ்வளவு ஆழம் சென்றிருக்கிறார்கள்? அதுபற்றிய ஆராய்ச்சிகள் எப்படி நடக்கின்றன என்றும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
நன்றி அய்யா ஆழ் கடலில் இறங்கும் முறை பற்றி அருமையாக விளக்கி உள்ளிர்கள்.
\\பல கேமராக்களும் மின்சார பாட்டரிகளால் இயங்கும் சக்திமிக்க மின் விளக்குகளும் உள்ள்ன. இவை கடலுக்கு அடியில் முப்பரிமாணப் படங்களை எடுக்க உதவுபவை.//
அப்படி எதாவது படங்கள் எடுக்கப்பட்டதா? இருந்தால் விவரம் தரவும் ஆழ் கடலில் உயிரினம் உள்ளதை அறிவேன் அவற்றிற்கு oxygen எங்கிருந்து கிடைகிறது மற்றும் அவற்றின் வாழ்கை முறை பற்றி நேரம் கிடைத்தால் விளக்கவும்.நன்றி
I really liked your blog! Nice Posts! Keep up the good work! www.bigindianwedding.com
சரவணன் கேட்டதற்கான எனக்குத் தெரிந்த விளக்கம் ..... பெட்ரோலிலும் பார்க்க காற்று ஆனது இலகுவாக அமுக்கப்படக் கூடியதாக இருக்கும். அதன் மேற்புறத்தில் இணைக்கப்பட்டிருந்த தொட்டியில் காற்று நிரப்பப்பட்டிருந்தால் சேலஞ்சர் மடுவில் உள்ள அழுத்தத்தின்( கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு ) காரணமாக காற்று இலகுவாக அழுத்தப்பட்டு தொட்டி சேதமடைந்துவிடும்/ நசுங்கி விடும்
nandri
Post a Comment