Apr 20, 2012

முதல் சோதனையில் அக்னி 5 ஏவுகணை அபார வெற்றி

Share Subscribe
இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை முதல் சோதனையிலேயே சிறந்த வெற்றி கண்டுள்ளது. வியாழன் காலையில் ஒடிசா மானிலத்திலுள்ள ஏவுகணைத் தளத்திலிருந்து கிளம்பிய இந்த ஏவுகணை 5000 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இந்துமாக் கடலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தது. இந்த ஏவுகணை பல அணுகுண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் படைத்தது.  இப்போதைய சோதனையில் அணுகுண்டுகளுக்குப் பதில் ஒரு டன் எடை அளவுக்கு சாதாரண குண்டுகள் சுமந்து செல்லப்பட்டன.

அக்னி 5 (Agni) ஏவுகணை வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவினால் சீனாவின் வட கோடியில் உள்ள நகரங்களையும் தாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனாவின் எந்தப் பகுதியும் இந்தியாவின் இந்த ஏவுகணையிலிருந்து தப்ப முடியாது.

அக்னி 5 ஏவுகணை உயரே செலுத்தப்படுகிறது
சீனாவைத் தாக்குவதற்காக அக்னி 5 ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்ல முடியாது என்றாலும் நம்மால் சீனாவின் எந்தப் பகுதியையும் அணுகுண்டு வீசித் தாக்க முடியும் என்பதால் நம்மைத் தாக்க சீனா துணியாது. அந்த அளவில் இது நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

அக்னி 5 ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரகத்தைச் சேர்ந்தது. ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் உள்ள நாடுகள், ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ல நாடுகள் ஆகியவை அக்னி 5 ஏவுகணையின் தாக்குதல் வளையத்துக்குள் வரும். ஆகவே தான் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என வர்ணிக்கப்படுகிறது.

அணிவகுப்பில் அக்னி 5 ஏவுகணை மாடல்
சீனாவிடம் பல வகையான ஏவுகணைகள் உள்ளன. 5000 கிலோ மீட்டர் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை, 10 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்க வல்ல ஏவுகணை ஆகியவை இவற்றில் அடங்கும். இந்த இரண்டும் அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவையே. இது வரை நாம் சீனாவை விடப் பின் தங்கியிருந்தோம். இப்போது சம நிலையை எட்டியிருக்கிறோம் எனலாம். சீனாவின் 10 ஆயிரம் கிலோ மீட்டர் ஏவுகணை பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை. சீனா அந்த ஏவுகணையை அமெரிக்காவை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளது.

இந்தியாவும் வருகிற நாட்களில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு செல்லும் ஏவுகணையை உருவாக்கலாம். ஆனால் இது விஷயத்தில் நமக்கு அவசர அவசியம் எதுவுமில்லை.

இந்தியாவின் அடுத்த திட்டம் அணு ஆயுத ஏவுகணைகளுடன் கூடிய சப்மரீனை உருவாக்குவதே. இந்தியா ஏற்கெனவே அரிஹந்த் என்னும் பெயர் கொண்ட அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளது. இது அடுத்து பல சோதனைப் பயணங்களுக்கு உள்ளாக்கப்படும். இதில் கே-4 எனப்படும் ஏவுகணைகள் இடம் பெறும். இவை 3000 முதல் 5000 கிலோ மீட்டர் தொலைவு பறந்து செல்லும் திறன் படைத்தவையாக இருக்கும். இவற்றின் முகப்பிலும் பல அணுகுண்டுகளை வைத்துச் செலுத்த முடியும். இந்திய கடற்படையில் அரிஹந்த இடம் பெறக் குறைந்தது ஓராண்டு ஆகலாம்.

அரிஹ்ந்த ரகத்தில் மேலும் மூன்று சப்மரீன்கள் கட்டப்பட்டு வருகின்றன. அணுசக்தியால் இயங்கும் சப்மரீன் ஒன்று கடலுக்கு வெளியே தலை நீட்டாமல் பல மாத காலம் கடலுக்குள் மூழ்கியபடி உலகின் கடல்களில் பயணித்துக் கொண்டிருக்க முடியும்.

விமானங்களில் அணுகுண்டுகளை எடுத்துச் சென்று வீசும் திறன், ஏவுகணை முகப்பில் அணுகுண்டுகளை வைத்து பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன், பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்க வல்ல அணுஆயுத ஏவுகணைகளை அணுசக்தி சப்மரீன்களிலிருந்து செலுத்தும் திறன் ஆகிய இந்த மூன்று திறன்களும் இருந்தால் அது அணுஆயுத முத்திறன் (Nuclear Triad) எனப்படுகிறது. இப்போது அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய மூன்று நாடுகளிடம் மட்டுமே இத்திறன் உள்ளது. இந்தியாவின் அணுசக்தி சப்மரீன்கள் முற்றிலுமாக தயாரான பிறகு இந்தியாவும் முத்திறனைப் பெற்றதாக விளங்கும்.

8 comments:

ஒரு வாசகன் said...

அக்னி 5 ஏவுகணை 5000 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடக்க எவ்வளவு நேரம் எடுக்கும்? இதன் வேகம் என்ன?

என்.ராமதுரை / N.Ramadurai said...

ஒரு வாசகன்:
அக்னி 5 ஏவுகணை மிக உயரம் சென்று விட்டு பின்னர் கீழ் நோக்கி இறங்குகிறது.அதாவது வளைந்த பாதையில் செல்கின்றது. இவ்விதமாக அது 5000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை எட்டுகிறது. ஆக அதன் மொத்த பயண தூரத்தைக் கணக்கிடுவது கடினம். எனினும் இப்போதைய சோதனையின் போது அது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 20 நிமிஷத்தில் சென்றடைந்தது. இதை வைத்து நீங்களே தோராயமாக அதன் வேகத்தைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்

ராஜரத்தினம் said...

அது எப்படி 5000 கிமீ இலக்கு நம் நாட்டு எல்லையில் இருக்கும்? அது கடல் என்றால் அது சர்வதேச கடலா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

5000 கிலோ மீட்ட்ர் தூரம் என்பது இந்தியாவுக்குத் தெற்கே இந்துமாக்கடலில் சர்வதேச கடல் பிராந்தியமாகும். அந்த இடம் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே அமைந்திருக்கலாம் வழக்கமாக கப்பல்கள் செல்லும் பாதைகள் தவிர்க்கப்படும். அத்துடன் குறிப்பிட்ட வட்டாரத்தில் வந்து விழலாம் என்பதற்கான் முன்னறிவிப்பும் எச்சரிக்கையும் விடப்படும்.

Salahudeen said...

கண்டம் விட்டு கண்டம் போய் தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகனை நமக்கு உலகில் வல்லரசு என்ற பெயரை வேண்டுமானால் வாங்கி தரலாமே ஒழிய நமது நாட்டில் உள்ள வறுமையை ஒழிக்காது.இதற்கான செலவை கூட அரசு வெளியிடவில்லை மேலும் இதற்கான தடுப்பு முறை தொழில்நுட்பம் (Anti missile technology) நமது எதிரி நாடுகளிடம் இருந்தால் இதனால் என்ன பயன்?

SIV said...

Bio weapons ல் நம் நாட்டின் நிலை என்ன என்பதையும் தெரிந்து விரும்புகிறேன்?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Bio weapons ஐ பொருத்தமட்டில் இவ்வித ஆயுதங்களைத் தயாரிக்கலாகாது, போரில் பயன்படுத்தலாகாது என்பது குறித்து சர்வதேச உடன்பாடு உள்ளது. இதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.இதுவே அதிகாரபூர்வ நிலையாகும்.

SIV said...

நன்றி ஐயா

Post a Comment