ஒளியின் வேகத்தை எதனாலும் மிஞ்ச முடியாது என 1905 ஆம் ஆண்டில் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை தப்பாக இருக்குமோ என்று அண்மையில் ஐயம் கிளம்பியது. நியூட்ரினோ (Neutrino) என்னும் அணுத் துகள் தொடர்பாக ஐரோப்பாவில் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட பல பரிசோதனைகள் இவ்வித ஐயத்தை ஏற்படுத்தின. ஏனெனில் நியூட்ரினோ துகள் ஒளியை விட அதிக வேகத்தில் செல்வதாக அந்த பரிசோதனைகள் காட்டின. கடந்த டிசம்பரில் மறுபடி நடந்த பரிசோதனைகளும் அதே முடிவைக் காட்டின.
|
செப்டம்பர் 2011: நியூட்ரினோ பற்றி
பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி |
கடைசியில் ’ஜெயிக்கப்போவது யாரு?’ என்ற கேள்விக்குறியோடு இந்த மாத மத்தியில் மறுபடி நடந்த பரிசோதனைகளில் நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சவில்லை என்பது தெரிய வந்தது. ஐன்ஸடைனின் கொள்கை தான் இறுதியில் ஜெயித்தது.
ஐன்ஸ்டைனின் கொள்கை மீது இததனை காலம் இலலாமல் திடீரென சந்தேகம் வந்தது ஏன்? நியூட்ரினோ என்பது என்ன?
நியூட்ரினோ என்பது மிகச் சிறிய அணுத் துகள். அண்மைக் காலம் வரை நிறைய பேருக்கு அப்படி ஒரு துகள் இருக்கிறது என்பதே தெரியாது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூட்ரினோ ஒளி வேகத்தை மிஞ்சி விட்டதாக செய்தி வெளியாகிய போது அது உலகப் பிரசித்தி பெற்றது.
பள்ளியில் இயற்பியல் பாடத்தில் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் ஆகியவை பற்றிப் படித்தது பலருக்கும் நினைவிருக்கும். அணுவுக்குள் இடம் பெற்றுள்ள நியூட்ரான் (Neutron) வேறு, நியூட்ரினோ வேறு.
நியூரினோ துகள்கள் சூரியனில் அணுச்சேர்க்கையின் (Nuclear Fusion) போது உண்டாகின்றன (பிற நட்சத்திரங்களிலும் இது நடக்கிறது). சூரியனிலிருந்து வெளிப்படும் கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை -- நமது உடலையும் -- துளைத்துக் கொண்டு ம்றுபுறம் வெளிப்பட்டு விண்வெளியை நோக்கிப் போய்க் கொண்டே இருக்கின்றன. எந்த சக்தியாலும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அடுத்தடுத்து ஐம்பது பூமிகளை வைத்தாலும் இவை அனைத்தையும் ஊடுருவிச் சென்று விடும்.
எலக்ட்ரான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோ, மியுவான் நியூட்ரினோ என மூன்று வகை உண்டு. எலக்ட்ரான் நியூட்ரினோவுக்கு சோலார் நியூட்ரினோ என்ற பெயரும் உண்டு (Electron/Solar, Tau, Muon). சூரியனில் நடக்கின்ற அணுச்சேர்க்கையின் விளைவாக சூரியனிலிருந்து இவ்வளவு சோலார் நியூட்ரினோக்கள் வர வேண்டும் என நிபுணர்கள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர்.
ஆனால் அதை விடக் குறைவான நியூட்ரினோக்களே வந்து சேருகின்றன என்பதைப் பரிசோதனைகள் காட்டின. மீதி சோலார் நியூட்ரினோக்கள் எங்கே போயின என்ற கேள்வி எழுந்தது. சூரியனில் அணுச்சேர்க்கை நடைபெறுவது பற்றிய கொள்கையே தவறாக இருக்குமோ என விஞ்ஞானிகள் கவலை கொண்டனர்.
காணாமல் போகும் நியூட்ரினோக்கள் பற்றிய பிரச்சினை விஞ்ஞானிகளை சுமார் 30 ஆண்டுக்காலம் திண்டாட வைத்தது. கடைசியில் 2001 ஆம் ஆண்டில் கனடாவில் நடந்த ஒரு பரிசோதனையின் போது தான் சோலார் நியூட்ரினோக்கள் பூமிக்கு வருகிற வழியில் -- பச்சை சட்டையைக் கழற்றி விட்டு மஞ்சள் நிற சட்டையைப் போட்டுக் கொள்வது போல -- வேறு நியூட்ரினோக்களாக மாறுகின்றன என்பது தெரிய வந்தது. எல்லா நியூட்ரினோக்களையும் கூட்டிப் பார்த்தால் கணக்கு சரியாக இருந்தது.
பெரிய ஆராய்ச்சிக்கூடத்தில் மனிதனாலும் நியூட்ரினோக்களை உண்டாக்க முடியும். ஐரோப்பாவில் ஜெனீவா நகருக்கு அருகே CERN எனப்படும் உலகப் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி அமைப்பானது பாதாளத்தில் பெரிய ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவி பல வகையான ஆராய்ச்சிகளைப் பல ஆண்டுக்காலமாக நடத்தி வருகிறது.
|
ஜெனீவாவில் பாதாளத்தில் அமைந்த
CERN ஆராய்ச்சிக்கூடத்தின் ஒரு பகுதி |
அந்த ஆராய்ச்சிக்கூட நிபுணர்கள் நியூட்ரினோக்களை உண்டாக்கி அவற்றை பாதாளம் வழியே -- நிலத்துக்கு அடியில் பாறைகள் வழியே -- இத்தாலியில் உள்ள வேறு ஓர் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்புவதில் ஈடுபட்டனர். பூமியைத் துளைத்துச் செல்லும் நியூட்ரினோக்களுக்கு நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே இத்தாலியின் ஆராய்ச்சிக்கூடத்துக்குச் செல்வதில் பிரச்சினை இருக்கவில்லை.எலக்ட்ரான் நியூட்ரினோக்கள் போகின்ற வழியில் வேறு நியூட்ரினோக்களாக மாறுவது பற்றி மேலும் அறிவதே இதன் நோக்கமாகும்.
இவை எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பதை அறிவது ஆராய்ச்சியின் பிரதான நோக்கம் இல்லை என்றாலும் நியூட்ரினோக்களின் வேகத்தைக் கண்டறிவதற்கு மிக நுணுக்கமான கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இந்த ஆராய்ச்சிகளின் போது தான் நியூட்ரினோக்கள் -- ஐன்ஸ்டைனின் கொள்கையை மீறி -- ஒளியின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதாகக் கருவிகள் காட்டின. முதலில் நிபுணர்கள் இதை நம்பவில்லை. பல நூறு தடவை பரிசோதனைகளை நடத்திப் பார்த்தனர். நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சுவதாக எல்லாப் பரிசோதனைகளும் காட்டவே தான் கடைசியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நியூட்ரினோக்கள் பற்றிய இத் தகவலை வெளியிட்டனர்.
|
ஐன்ஸ்டைன்: தப்புக்கு வாய்ப்பில்லை |
ஐன்ஸ்டைனின் கொள்கை தவறாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தில் கடந்த டிசம்பரில் வேறு வகையில் பரிசோதனைகளை நடத்திய போதும் நியூட்ரினோக்கள் ஐன்ஸடைனின் கொள்கை தப்பு என்பது போல செயல்பட்டன. அதாவது நியூட்ரினோக்களின் வேகத்தை அளந்த கருவிகள் நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை விட அதிக வேகத்தில் செல்வதாகவே காட்டின.
கடைசியில் இந்த மாதம் மறுபடி பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதை வேறு குழுவினர் நடத்தினர். நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தில் தான் செல்கின்றன. அவை ஒளி வேகத்தை மிஞ்சவில்லை என்று இப்போதைய பரிசோதனைகள் காட்டியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை ஆராய்ச்சிக்கூட சார்பில் டாக்டர் செண்ட்ரோ மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்டார். "இது விஷயத்தில் எனக்கு ஆரம்ப முதலே சந்தேகம் இருந்து வந்தது" என்றார் அவர்.
நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சுவதாக முந்தைய பரிசோதனைகள் காட்டியதற்கு கருவிகளில் இருந்த கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ ஒளி வேகத்தை எதுவும் மிஞ்ச முடியாது என ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை சரியானதே என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது. ஐன்ஸ்டைனா கொக்கா?
பிரச்சினை தீர்ந்து விட்டாலும் வருகிற மாதங்களில் நியூட்ரினோக்களின் வேகத்தை அளக்க அமெரிக்காவிலும், ஜப்பானிலும் இதே மாதிரி பரிசோதனைகள் நடத்தப்படலாம்.
எல்லாம் சரி, ஒளியின் வேகம் என்ன? ஒளியானது
வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் (முப்பது கோடி மீட்டர்) வேகத்தில் செல்கிறது. சரியாகச் சொன்னால் வினாடிக்கு 29,97,92,458 மீட்டர்.
கொசுறு
: தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் சுமார் ரூ 1300 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.