பூமியை விட சந்திரன் வடிவில் சிறியது. அந்த அளவில் சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமிக்கு உள்ளதில் ஆறில் ஒரு பங்கு அளவே இருக்கிறது.
பூமி, சந்திரன் இரண்டிலும் ஈர்ப்பு சக்தியானது எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இல்லை. இடத்துக்கு இடம் நுண்ணிய அளவில் மாறுபடுகிறது. சில இடங்களில் அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம்.
சந்திரனின் மேற்பரப்பில் ஈர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என்பது பற்றி மேலோட்டமாகத் தகவலகள் ஏற்கெனவே சேகரிக்கப்பட்டுள்ளன. எனினும் மிகத் துல்லியமான தகவல்களைச் சேகரிப்பதற்கென அமெரிக்க நாஸா விண்வெளி அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி இரு விண்கலங்களை சந்திரனுக்கு அனுப்பியது. இவற்றுக்கு கிரெயில் A, கிரெயில் B என்று பெயர். கிரெயில்(GRAIL) என்பது Gravity Recovery And Interior Laboratory என்ற நீண்ட பெயரின் சுருக்கமாகும்.
இரு விண்கலங்களும் சந்திரனுக்கு மேலே எவ்விதமாகப் பறக்கும் என்பதையும், பூமிக்கு எவ்விதமாகத் தகவல்களை அனுப்பும் என்பதையும் விளக்கும் படம் |
கிரெய்ல் A டிசம்பர் 31 ஆம் தேதியும்(2011), கிரய்ல் B ஜனவரி ஒன்றாம் தேதியும்(2012) போய்ச் சேர்ந்தன. வழக்கமான முறையில் அல்லாமல் எரிபொருள் அதிகம் தேவைப்படாத பாதையில் சிறிய ராக்கெட் மூலம் இவை செலுத்தப்ப்ட்ட காரணத்தால் சந்திரனுக்குப் போய்ச் சேர மூன்றரை மாதங்கள் ஆகின. இத்துடன் ஒப்பிட்டால் 1960 களில் ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் ஒன்று 36 மணி நேரத்திலேயே சந்திரனுக்குப் போய் சாதனை புரிந்தது.
சந்திரனுக்குப் போய்ச் சேர்ந்துள்ள இரு விண்கலங்களும் சந்திரனை ஜோடியாக ஒன்றோடு ஒன்று கைகோர்த்துக் கொண்டது போல தெற்கு வடக்காகப் பறக்கும்.
பூமிக்குள் சில இடங்களில் பாறை அடர்த்தியாக இருக்கும். வேறு சில இடங்களில் அடர்த்தி குறைவாக இருக்கும். பூமிக்குள் இருக்கின்ற இப்படியான மாறுபாடுகளால் தான் பூமியின் மேற்புறத்தில் ஈர்ப்பு சக்தி அளவில் மாறுபாடுகள் உள்ளன. இந்த மாறுபாடுகள் மிக உயரத்தில் பறக்கின்ற செயற்கைகோள்கள் மீதும் விளைவுகளை உண்டாக்குகின்றன.பாறைகள் மிக அடர்த்தியாக இருக்கின்ற இடத்துக்கு மேலே பறக்கும் போது --ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கின்ற இடத்துக்கு மேலாக வரும் போது -- செயற்கைகோள் ஒருகணம் சுண்டி இழுக்கப்படுவது போன்ற விளைவுக்கு உள்ளாகிறது. சந்திரனிலும் இப்படியான நிலைமை உள்ளது.
சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ள இரு விண்கலங்களின் சுற்றுப்பாதை நன்கு திருத்தியமைக்கப்பட்டபின் இரண்டும் சந்திரனுக்கு மேல் 54 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கும். மார்ச் மாதத்தில் தான் அவை பணியைத் தொடங்கும்.
சந்திரனுக்கு மேலாக இந்த இரு செயற்கைகோள்களும் ஒன்றன் பின் ஒன்றாகப் பறக்கும் போது சந்திரனின் உட்புறத்தில் உள்ள நிலைமைகள் காரணமாக முதல் விண்கலம் சுண்டி இழுக்கப்பட்லாம். அப்போது இந்த இரு விண்கலங்களுக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் லேசான மாறுதல் ஏற்படும். இவ்விதமான மாறுபாடுகள் சிக்னல் வடிவில் பூமியில் உள்ள தலைமைக் கேந்திரத்துக்கு அனுப்பப்படும். இந்த இரு விண்கலங்கள் நடத்தும் ஆய்வானது சந்திரனை எக்ஸ்ரே எடுப்பதற்கு ஒப்பானது என சொல்லப்படுகிறது.
சந்திரனின் ஈர்ப்பு சக்தி பற்றி முன்பு எடுக்கப்பட்ட படங்கள். இடது: சந்திரனின் முன்பக்கம். வலது: சந்திரனின் பின்பக்கம். |
விண்வெளி யுகம் தோன்றியதிலிருந்து அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா, ஜப்பான் முதலான நாடுகள் சந்திரனுக்கு மொத்தம் சுமார் 100 விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆனாலும் சந்திரன் பற்றிய பல விஷயங்கள் இன்னமும் புதிராகவே உள்ளன.
இப்போது சந்திரனுக்கு இரட்டை விண்கலங்களை அனுப்பியுள்ள திட்டத்துக்குப் பொறுப்பான மரியா ஜூபெர் (Maria Zuber) கூறுகையில் சந்திரன் நமக்கு அருகே இருந்தாலும் அதை விட அதிகத் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தைப் பற்றித் தான் நாம் நிறைய அறிந்து கொண்டுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment