Pages

Dec 30, 2011

வால் நட்சத்திரத்துக்கு ஆறு வால்கள்

ஐரோப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வால் நட்சத்திரங்களை ‘பிசாசுகள்’ என்று கருதினர். நவீன காலத்தில் சர் பிரெட் ஹாயிலும் (Sir Fred Hoyle) சந்திரா விக்ரமசிங்கேயும்(Wickramasinghe) வால் நட்சத்திரங்களை கிருமிகளைக் கொண்டு வரும் ‘வில்லன்கள்’ என வர்ணித்தனர். எனினும் வால் நட்சத்திரங்களை சூரிய மண்டலத்தின் கோமாளிகள் என்றும் சொல்லலாம்.

சர்க்கஸ் கோமாளி அவ்வப்போது வெவ்வேறு வேஷத்தில் வருவது போல வால் நட்சத்திரங்கள் விதவிதமான வடிவில் வருகின்றன. அட்டகாசமான வாலுடன் காணப்படும் வால் நட்சத்திரங்கள் உண்டு. சில வால் நட்சத்திரங்கள் பெரிய தலையுடன் காணப்படுகின்றன. பொதுவில் வால் நட்சத்திரத்துக்கு ஒரு வால் தான் உண்டு. ஆனால் மூன்று வால்கள் அல்லது ஆறு வால்களுடன் மிரட்டிய வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் தெனபட்டுள்ளன.

1744 ஆம் ஆண்டில் தோன்றிய வால் நட்சத்திரம் இவ்விதம் ஆறு வால்களைக் கொண்டதாக இருந்தது. அக்காலத்தில் கேமிரா கிடையாது. பிரெஞ்சு ஓவியர் வரைந்த படத்தைக் கீழே காணலாம்.

ஆறு வால்களுடன் கூடிய வால் நட்சத்திரம்.
தலை அடிவானத்துக்கு கீழே உள்ளது.
1957 ஆம் ஆண்டில் தோன்றிய ஒரு வால் நட்சத்திரத்துக்கு கூரிய மூக்கு இருந்தது. படம் கீழே.

கூர் மூக்கு வால் நட்சத்திரம்

வால் நட்சத்திரங்கள் அனைத்துமே சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை மறந்து விடக்கூடாது. ஆகையால் தான் அவை சூரியனைச் சுற்றுகின்றன.

ஒரு கால கட்டத்தில் பூமி தான் மையத்தில் இருப்பதாகவும் சூரியன், சந்திரன், கிரகங்கள் என அனைத்தும் பூமியைச் சுற்றுவதாகவும் தவறான கருத்து நிலவியது. போலந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கோப்பர்னிகஸ்(Copernicus) சூரியன் தான் நடுவில் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். ஆனால் அதை வெளியே பகிரங்கமாகச் சொல்லப் பயந்தார். பின்னர் அவரது கொள்கை நிலைநாட்டப்பட்டது.  ஆனாலும் வால் நட்சத்திரங்களைப் பற்றி கோப்பர்னிகஸுக்குப் பிறகு வந்த கெப்ளர் (Kepler)அல்லது வேறு விஞ்ஞானிகளால் சரியான விளக்கத்தை அளிக்க இயலவில்லை.

எட்மண்ட் ஹாலி
கடைசியில் சர் ஐசக் நியூட்டன்(Sir Isaac Newton) தான் சரியான விளக்கத்தை அளித்தார். நியூட்டனின் சம காலத்தவரான எட்மண்ட் ஹாலி(Edmond Halley) தனது நண்பர் நியூட்டன் உருவாக்கிய இயக்க விதிகளைப் பயன்படுத்தி ஒரு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். 1531, 1607, 1682 ஆகிய ஆண்டுகளில் வானில் தென்பட்ட வால் நட்சத்திரம் ‘பழைய சுப்பன் தான்’ என்று அவர் கண்டுபிடித்துக் கூறினார். அதாவது கி.மு 240 ஆம் ஆண்டிலிருந்து அது திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கிறது. அதே வால் நட்சத்திரம் தான் இப்படி வருகிறது என்று அதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பழைய குறிப்புகளையும் தாம் போட்ட கணக்குகளையும் வைத்துத் தான் எட்மண்ட் ஹாலி 1705 ஆம் ஆண்டில் அக்கண்டுபிடிப்பைச் செய்தார். அந்த வால் நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலை காட்டும் என்று கூறிய ஹாலி அது மீண்டும் 1758 ஆம் ஆண்டில் வரும் என்று சொன்னார்.

ஹாலி வால் நட்சத்திரத்தின்
சுற்றுப்பாதை 
அதன்படியே அந்த வால் நட்சத்திரம் அந்த ஆண்டில் மீண்டும் வந்தது. ஆனால் அப்போது ஹாலி உயிருடன் இருக்கவில்லை. அந்த வால் நட்சத்திரத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டு அது ஹாலி வால் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது (Halley's Comet). ஹாலி தமது ஆயுட்காலத்தில் 24 வால் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையைக் கணக்கிட்டுக் கூறினார். ஹாலி வால் நட்சத்திரம் மாதிரியே பல வால் நட்சத்திரங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன.

திரும்பத் திரும்ப வருகிற வால் நட்சத்திரங்களை அதுவரை யாராலும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போனது ஏன்? முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். எட்மண்ட ஹாலி சுற்றுப்பாதையைக் கணக்கிட்டுத் தான் ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் வரும் என்று கூறினார். அடையாளத்தை வைத்து அல்ல.

தவிர, ஒவ்வொரு வால் நட்சத்திரமும் சூரியனை நெருங்கும் போது நிறைய பொருளை இழக்கிறது. ஆகவே அடுத்த தடவை வரும் போது அது இளைத்துக் காணப்படுகிறது. சொல்லப் போனால் ஹாலி வால் நட்சத்திரம் 1986 ல் மறுபடி தலை காட்டிய போது அது சோபை இழந்து காணப்பட்டது. அடுத்து 2061 ஆம் ஆண்டில் அது மறுபடி தலை காட்டும் போது மேலும் இளைத்துக் காணப்படலாம்.

ஹாலி வால் நட்சத்திரம் இப்போது
நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால் உள்ளது.
ஒவ்வொரு தடவையும் சூரியன் காரணமாக ஏராளமான பொருளை இழக்கும் வால் நட்சத்திரங்கள் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற கட்டத்தை எட்டும் போது என்ன ஆகும்? பனிக்கட்டி, தூசு, உறைந்த வாயுக்கள் என அனைத்தையும் இழந்த பின் வால் நட்சத்திரம் வெறும் பாறையாக அதாவது அஸ்டிராய்ட் (Asteroid) ஆக மாறி விடும். அப்போது அது பறக்கும் பாறை அல்லது பறக்கும் குட்டி மலை என்று சொல்லத்தக்க அளவில் இருக்கும்.

உதாரணமாக 1949 ஆம் ஆண்டில் ஒரு வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்ப்ட்டது. அதற்கு 107 P/Wilson-Harrington வால் நட்சத்திரம் என்று பெயரிட்டார்கள். பின்னர் 1979 ஆம் ஆண்டில் ஒரு அஸ்டிராய்ட் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு 1979 A என்று பெயரிட்டனர். பிறகு உன்னிப்பாக ஆராய்ந்ததில் அது 1949 ல் கண்டுபிடிக்க்ப்பட்ட அதே வால் நட்சத்திரம் என்று தெரிய வந்தது. அதாவது வால் நட்சத்திரமாக இருந்து அது பின்னர் அனைத்தையும் இழந்து பாறையாகி விட்டது.

 இதற்கு நேர் மாறாக ஒன்று நடந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்டிராய்ட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.அதற்கு 596 ஷெல்லா (596 Schella) என்று பெயரிட்டார்கள். எனினும் அமெரிக்க அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் லாசன் 2010 ஆம் ஆண்டு வானை ஆராய்ந்த போது மேற்படி அஸ்டிராய்டு வால் நட்சத்திரம் போலத் தென்படுவதைக் கவனித்தார். பின்னர் மற்ற்வர்களும் ஆராய்ந்த போது உண்மையில் அது வால் நட்சத்திரமே என்பது தெரிய வந்தது. இப்படியாக ஆரம்பத்தில் அஸ்டிராய்டுகள் எனக் கருதப்பட்டவை பின்னர் வால் நட்சத்திரங்கள் என்று தெரிய வந்துள்ளது.



இது புதிய நிலைமையை உண்டாக்கியது. சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே கோடானு கோடி அஸ்டிராய்டுகள் கிரிவலம் செய்யும் பக்தகோடிகளைப் போல ஓர் ஒழுங்குடன் தனிப்பாதை அமைத்துக் கொண்டு சூரியனை சுற்றி வருகின்றன. இக்கூட்டத்தில் உள்ளவை அனைத்தும் சிறியதும் பெரியதுமான பாறைகளே.

இப்போது இந்த அஸ்டிராய்ட் கும்பலின் நடுவே வால் நட்சத்திரங்களும் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. வானவியல் விஞ்ஞானிகள் இவற்றுக்கு Main Belt Comets  என்று பெயரிட்டுள்ளனர். இவை கிரகங்கள் மற்றும் அஸ்டிராய்டுகள் போல வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்ற காரணத்தால் சூரியனுக்கு அருகில் வருகின்ற வாய்ப்பே இல்லாதவை.

வால் நட்சத்திரங்களைப் பற்றி மேலும் விவரமாக அறியும் பொருட்டு நாஸாவும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் கடந்த பல ஆண்டுகளில் வால் நட்சத்திரங்களை நோக்கி ஆளில்லா விண்கலங்களை அனுப்பின. இவற்றில் பலவும் வால் நட்சத்திரங்களுக்கு அருகாமையில் சென்று அவற்றைப் படம் பிடித்து அனுப்பின.

வில்ட்-2 என்னும் வால்
நட்சத்திரத்திலிருந்து தூசு
சேகரித்த ஸ்டார்டஸ்ட்
விண்கலம்
அந்த விண்கலங்களில் ஒன்று வால் நட்சத்திரத்தில் அடங்கிய பொருளின் சாம்பிளை சேகரித்து பூமிக்கு அனுப்பியது. நுண்ணிய வடிவிலான அப்பொருட்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது தெரிய வந்த தகவல்கள் வால் நட்சத்திரங்கள் எப்படி உண்டாயின என்பது பற்றி விஞ்ஞானிகள் இதுவரை கொண்டிருந்த கொள்கைகளை அடியோடு தகர்க்கும் வகையில் உள்ளன.

இப்படியாக வால் நட்சத்திரங்கள் புதுக் குழப்பத்தை உண்டாக்கியுள்ளன. இந்த நிலையில் வால் நட்சத்திரங்கள் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள இன்னும் சில காலம் ஆகலாம் என்று தோன்றுகிறது.

1 comment:

  1. your posts are really superb.... and informative too..... your book vinveli is awesome....
    checkout my blog:
    http://tipsfortechviewers.blogspot.com/

    ReplyDelete