ஆனால் என்ன ஆச்சரியம்! அது சூரியனின் கடும் வெப்பத்தை தாங்கி நின்று சூரியனை சுற்றி விட்டு டிசம்பர் 21ஆம் தேதியன்று கம்பீரமாக வானில் காட்சி அளித்தது. கீழே உள்ள படத்தைக் கவனிக்கவும். அழியப் போகிறது என்று சொல்லப்பட்ட வால் நட்சத்திரத்தின்(Comet) நீண்ட வாலை இப்படத்தில் காணலாம். கூர்ந்து கவனித்தால் இரட்டை வால் தெரியும்.
படத்தில் தெரிவது லவ்ஜாய் வால் நட்சத்திரத்தின்
நீண்ட வால். அதன் தலை அடிவானத்துக்குக்
கீழே உள்ளது.
|
இந்த சிறிய வால் நட்சத்திரம் சென்ற மாதம் 27 ஆம் தேதி தான் (நவம்பர் 27, 2011) கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமெச்சூர் வானவியல் ஆராய்ச்சியாளரான டெர்ரி லவ்ஜாய் (Terry Lovejoy) என்பவர் கண்டுபிடித்ததால் வால் நட்சத்திரத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.
வால் நட்சத்திரங்கள் பொதுவில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கைப்பர் வட்டம்(Kuiper Belt) அல்லது ஊர்ட்ஸ் முகில்(Oorts Cloud) எனப்படும் பகுதியிலிருந்து வருகின்றன. அவை கிரகங்களின் சுற்றுப்பாதைகளைக் குறுக்காகக் கடந்து சூரியனை நோக்கி வரும். சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே திரும்பி விடும்.
வால் நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கும் சமயத்தில் தான் வானில் நமக்குத் தென்படுகின்றன .சூரியனை சுற்றி விட்டுத் திரும்புகையில் சில காலம் தெரியும். பிறகு நீண்ட தொலைவு சென்று விடுவதால் தெரியாது. வால் நட்சத்திரங்கள் வானில் அபூர்வமாகவே தென்படுவதற்கு இதுதான் காரணம்.
எல்லா வால் நட்சத்திரங்களையும் போல லவ்ஜாய் சூரியனை சுற்றி முடிக்கையில் தான் அது சூரியனை மிகவும் நெருங்கி விட்டது.
சூரியனை நோக்கி வருகின்ற வால் நட்சத்திரம் இவ்விதமாக சூரியனை சுற்றிச் செல்லும். மஞ்சள் நிறத்தில் இருப்பது சூரியன். |
லவ்ஜாய் வால் நட்சத்திரத்தின் குறுக்களவு வெறும் 500 மீட்டர் தான். இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கியதிலிருந்து அதை 6 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கவனித்து வந்தன.
வருகிற நாட்களில் லவ்ஜாய் வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து மேலும் விலகிச் செல்லும். அப்போது அது வானில் நன்கு தெரியலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
எல்லா வால் நட்சத்திரங்களும் சூரியனுக்கு இவ்வளவு அருகாமையில் வருவதில்லை. சில சிறிய வால் நட்சத்திரங்களே இவ்வளவு பக்கத்தில் வந்து சூரியனை சுற்றி விட்டுச் செல்கின்றன. இவற்றுக்கு ‘சூரிய உரசிகள்’ என்று பெயர்.
1910 ஆம் ஆண்டில் தெரிந்த பெரிய வால் நட்சத்திரம். இது பகலிலும் கண்ணுக்குத் தெரிந்தது. |
இப்படி பின்னுக்குத் தள்ளப்படுவதால் தான் சூரியனை நோக்கி வரும் போது தலை முன்னே இருக்க வால் பின்னே அமைந்திருக்கிறது. சூரியனை சுற்றி முடித்த பின்னர் வால் முன்னே செல்ல தலை பின்னால் அமைந்திருக்கிறது. மேலே கூறிய அதே காரணத்தால் நுண்ணிய துகள்கள் முன்னோக்கித் தள்ளப்படுகின்றன. ஆகவே தான் வால் திசை முன்னே செல்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல பெரிய வால நட்சத்திரங்கள் தோன்றின.வால் நட்சத்திரங்களில் பல நூறு ஆண்டுக்கு ஒரு முறை தலை காட்டுபவை உண்டு. சில வால் நட்சத்திரங்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை தான் தென்படும். பல சிறிய வால் நட்சத்திரங்க்ள் பாதை மாறி சூரிய மண்டலத்துக்குள்ளாக அமைந்து அடிக்கடி தலைகாட்டுகின்றன. லவ்ஜாய் அப்படிப்பட்ட வால் நட்சத்திரங்களில் ஒன்றாகும்.
வால்விண்மீன் பற்றிய தகவல் நன்று, பாராட்டுகள்
ReplyDeleteஎல்லாப் பதிவுகளுமே அருமை. அரிய தகவல்கள். வெகு நாட்களாகத் தேடிய செல்வம் கையில் கிடைக்கப்பெற்றதாய் உணர்கிறேன். அதுவும் தமிழில் கிடைத்திருப்பது மிகநன்று. வளர்க உம் தொண்டு.
ReplyDeleteஅருமை
ReplyDelete