.
மிகச் சரியாகக் கணக்கிட்டால் சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிஷம், 46 வினாடி ஆகின்றது. இந்த அடிப்படையில் நாம் ஆணடைக் கணக்கிட்டுக் கொள்ள் முடியாது. ஆகவே முழு எண்களாக 365 என்று வைத்துக் கொண்டுள்ளோம். நமது காலண்டர் அவ்விதமாகத் தான் உள்ளது.
சூரியனை பூமி ஒரு முறை சுற்றி முடிப்பதை ஓர் ஆண்டு என்கிறோம் |
ஆகவே நமது காலண்டரும் இயற்கையும் ஒத்துப் போக வேண்டும். இதைக் கருதித்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை (நான்கினால் வகுபடுகின்ற ஆண்டுகளில்) கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டார்கள். லீப் வருடத்தில் பிப்ரவரியில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் என்று வைத்துக் கொண்டார்கள். அப்படி ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டாலும் கணக்கு சரியாக வருவதில்லை.
ஏனெனில் நாம் கூடுதலாக 11 நிமிஷம் 14 வினாடியை சேர்த்துக் கொண்டு விடுகிறோம். கணக்குப் பார்த்தால் இது 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி ஆகிவிடுகிறது. ஆகவே 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம் கிடையாது.
அப்படிச் செய்தாலும் கணக்கு உதைக்கிறது. 5 மணி 17 வினாடி குறைந்து போய்விடுகிறது. ஆகவே 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொள்கிறோம். 1600 ஆம் ஆண்டு லீப் வருடமாக இருந்தது. ஆனால் 1700, 1800 மற்றும் 1900 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்கள் இல்லை. 2000 ஆண்டு லீப் வருடமாக இருந்தது. 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்களே. அதேபோல் 2012 ஆம் ஆண்டும் லீப் வருடமே.
நாம் பயன்படுத்தும் காலண்டருக்கு - அதாவது ஆண்டுக் கணக்கு - கிரிகோரியன் காலண்டர் என்று பெயர். நாம் இதை ஆங்கில ஆண்டு என்கிறோம்.
இப்போது நாம் பயன்படுத்தும் காலண்டரில் சீர்திருத்தம் செய்வதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. இப்போது இருக்கின்ற ஏற்பாடே மேல் என்ற நிலை தான் உள்ளது.
நடை முறையில் நாம் பயன்படுத்துகின்ற ஆங்கில ஆண்டு சூரியனை வைத்துக் கணக்கிடப்படுவதால் இதை சூரியமான ஆண்டுக் கணக்கு என்றும் கூறலாம். சித்திரை முதல் பங்குனி வரையிலான தமிழ் ஆண்டும் சூரியமான ஆண்டே ஆகும்.
உலகில் எவ்வளவோ வகையான காலண்டர்கள் உள்ளன. மாயன் (Mayan) காலண்டர் அவற்றில் ஒன்று. இந்த மாயன் காலண்டர் சம்பந்தப்ப்ட்ட ஒரு விஷயத்தையும் மற்றும் பல விஷயங்களையும் முடிச்சுப்போட்டு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4 -41 மணிக்கு உலகம் அழியப் போவதாக வழக்கமாகப் பீதி கிளம்பும் கும்பல் அறிவித்துள்ளது. ஆனால் அப்படி எதுவும் நேராது என வானவியல் நிபுணர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்!
No comments:
Post a Comment