Dec 11, 2011

புளூட்டோவை நோக்கி: ஆறு ஆண்டுகளாகப் பயணம்

Share Subscribe
மனிதன் செலுத்திய விண்கலம் ஒன்று கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக அதிவேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அது தனது இலக்கை எட்டுவதற்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும். நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் புளூட்டோவை (Pluto) நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த விண்கலத்தை செலுத்திய அமெரிக்க நாஸா(NASA) விண்வெளி அமைப்பானது இடைக்கால அறிக்கை போல அந்த விண்கலம் இப்போது எங்கே உள்ளது என்பது பற்றி அண்மையில் தெரிவித்தது.

அந்த விண்கலம் இப்போது ஒரு நாளில் பத்து லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கிறது. அவ்வளவு வேகத்தில் சென்றாலும் புளூட்டோவை நெருங்க இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இதிலிருந்து புளூட்டோ எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் செல்லும் பாதை.
இன்னும் செல்ல வேண்டிய தூரம் சிவப்பு நிறத்தில் உள்ளது.
(இடம் கருதி இப்படத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய் 
கிரகங்கள் குறிப்பிடப்படவில்லை)
புளூட்டோ சுமார் 591 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பல சமயங்களிலும் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை ஓர் அலகாகக் கொள்வது உண்டு. இத்தூரத்தை ஒரு வான் அலகு (Astronomical Unit) என்று நிபுணர்கள் கூறுவர். இந்த கணக்கின்படி புளூட்டோ ஒரு சமயம் 48 கோடி வான் அலகு தூரத்திலும் வேறு சில சமயங்களில் 29 வான் அலகு தூரத்திலும் இருக்கிறது. புளூட்டோவின் சுற்றுப்பாதை நீள் வட்டமாக இருப்பதே அதற்குக் காரணம். புளூட்டோ ஒரு தடவை சூரியனை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.

புளூட்டோ சூரிய மண்டலத்தின் கடைசி ஸ்டேஷன். அதைத் தாண்டினால் நாம் அனேகமாக எல்லையற்ற விண்வெளியில் காலடி எடுத்து வைப்பவர்களாகி விடுவோம். சூரிய மண்டல எல்லையில் உள்ள ஒன்று எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகத் தான் 2006 ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தைச் செலுத்தினார்கள். அது 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் புளூட்டோவை நெருங்கி அதைப் படம் பிடித்து அனுப்புவதுடன் புளூட்டோ பற்றிய தகவலக்ளையும் அனுப்பும்.

யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நெருங்கி ஆராய்வதற்கு கடந்த கால்த்தில் பயனீர்(Pioneer), வாயேஜர்(Voyager) ஆகிய ஆளில்லா விண்கலங்கள் செலுத்தப்பட்டன. அந்த விண்கலங்கள் இந்த இரு கிரகங்களையும் நெருங்கிச் சென்று அவை பற்றிய தகவலகளையும் ப்டங்களையும் அனுப்பின. புளூட்டோ ஒன்று தான் மீதி இருந்தது.

புளூட்டோ சமாச்சாரம் ஒரு சோகக் கதை. சூரிய மண்டலத்தில் நமது அண்டை வீடு என்று சொல்லத்தக்க செவ்வாயைத் தாண்டிச் சென்றால் இருக்கக்கூடிய வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்குமே ராட்சதக் கிரகங்கள். ஆனால் சூரிய மண்டலத்தின் வெளிக் கோடியில் காவல்காரன் போல இருக்கின்ற புளூட்டோ, புதன் கிரகத்தைக் காட்டிலும் சிறியது. எனினும் புளூட்டோவை நான்கு குட்டி சந்திரன்கள் சுற்றி வருகின்றன.

புளூட்டோவும் மற்ற சில கிரகங்களும்
சூரிய மண்டலத்தில் புளூட்டோவையும் சேர்த்து ஒன்பது கிரகங்கள் உள்ளதாகக் கடந்த பல ஆண்டுகளாகப் பள்ளிகளில் போதிக்கப்பட்டு வந்தது. விஞ்ஞானிகளும் அவ்வாறே கூறி வந்தனர்.

ஆனால் 2006 ல் நடந்த சர்வதேச வானவியல் நிபுணர்கள் சங்க மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு அதன் சிறிய வடிவம் காரணமல்ல. ஒரு கிரகம் என்ற அந்தஸ்து இருக்க வேண்டுமானால் அது தனது வட்டாரத்தில் உள்ள வேறு சிறிய வான் பொருட்கள் இல்லாதபடி அவற்றை ஈர்த்து அந்த வட்டாரத்தில் தனது ஆளுமையை நிலை நாட்டியிருக்க வேண்டும். அந்த அளவுகோலின்படி புளூட்டோ கிரகம் அல்ல என்று முடிவு செய்யப்பட்டது.

புளூட்டோ.
ஹப்புள் டெலஸ்கோப் எடுத்த படம்
இதை வேறு விதமாகச் சொல்வதானால் ஒரு பேட்டையில் ‘தாதா’ ஒருவர் தனது போட்டியாளர்களை ஒடுக்கி தனது அதிகாரத்தை நிலை நாட்டியிருக்க வேண்டும். அப்படியானவரே ‘தாதா’ என குற்றக் கும்பல் வட்டாரத்தினரால் மதிக்கப்படுவார்.

புளூட்டோ இருக்கின்ற வட்டாரத்தில் பல ‘சிறு கோள்கள்’ உள்ளன. அந்த வகையில் புளூட்டோவும் ‘சிறு கோள்’ என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும் புளூட்டோவை கிரகம் என்ற அந்தஸ்திலிருந்து அகற்றியது சரியல்ல என்று கருதுவோர் நிறையவே உள்ளனர். நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தை அனுப்பிய குழுவினர் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று கருதுகின்றனர்.

புளூட்டோவை கிளைட் டாம்பா (Clyde Tombaugh) என்ற அமெரிக்க வானவியல் விஞ்ஞானி நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வான் ஆராய்ச்சிக்கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அதனால் நியூ மெக்சிகோ மாகாண சட்ட மன்றம் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று அடித்துக் கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டாம்பா இல்லினாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் இல்லினாய் மாகாண சட்ட மன்றமும் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கலிபோர்னியா மாகாண சட்ட ம்ன்றமும் புளூட்டோவுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

புளூட்டோவுக்கு ஆதரவாக இயக்கம் நீடிக்கிறது
புளூட்டோவுக்கு கிரக அந்தஸ்து கிடையாது என்று சர்வதேச வானவியல் யூனியன் (International Astronomical Union) 2006 ஆம் ஆண்டில் எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளதற்குக் காரணம் உண்டு. இந்த யூனியனில் மொத்தம் 9000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2700 பேர் தான் மாநாட்டில் பங்கு கொண்டனர். புளூட்டோவை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அரங்கில் 424 பேர் தான் இருந்தன்ர். இக்காரணத்தாலும் புளூட்டோ பற்றிய தீர்மானம் குறித்து இன்னமும் சர்ச்சை நிலவுகிறது. புளூட்டோவுக்கு மீண்டும் கிரக அந்தஸ்து கிடைக்கச் செய்ய இன்னமும் இயக்கம் நடந்து வருகிறது.

கிரேக்க புராணப்படி புளூட்டோ பாதாள உலகின் மன்னன். புளூட்டோ மரணத்தின் தேவன் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன. ஆக, கிரக அந்தஸ்திலிருந்து கீழே தள்ளப்பட்ட தண்டனையை புளூட்டோ என்றாவது ஒரு நாள் வென்று மறுபடி கிரக அந்தஸதைப் பெற்றால் வியப்பில்லை.

8 comments:

செல்வா said...

மிக மிக அருமையான தகவல் ஐயா. நன்றிகள்.

// // ஒரு சமயம் 48 கோடி வான் அலகு தூரத்திலும் வேறு சில சமயங்களில் 29 வான் அலகு தூரத்திலும் இருக்கிறது.//

இந்த இடத்தில் 48 கோடி வான் அலகுகள் என்பது தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது. 48 வான் அலகுகள் என்பதுதான் வருமா ? தவறாயிருப்பின் சரி செய்யுங்கள். நன்றி :)

என்.ராமதுரை / N.Ramadurai said...

48கோடி வான் அலகுகள் என்றும் கூறலாம்.பொதுவில் தூரத்தைக் குறிப்பிடுகையில் ’ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்’ என்று சொலவது தான் வழக்கமாக இருக்கிறது. நான்கு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது என்று சொல்வதில்லை.அவ்விதமாக 48 கோடி வான் அலகு தூரத்தில் என்று சொல்லப்பட்டதாகக் கூறலாம்.

Narayanan Narasingam said...

Selva is correct. He is not talking about singular/plural difference.

It should be 48 AU, not 48 crores AU.

என்.ராமதுரை / N.Ramadurai said...

செல்வா,
தங்களது கேள்வியை முன்னர் சரியாகப் படிக்கவில்லை.தாங்கள் ஒருமை, பன்மை பற்றிக் குறிப்பிடுவதாக்வே கருதி விட்டேன். 48 வான் அலகு என்பது தான் சரி. தவறுதலாக ‘கோடி” சேர்க்கப்பட்டு விட்டது.

செல்வா said...

நன்றி ஐயா, நானும் இது பற்றிய தங்களின் பதிலால் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். தெளிவாகக் கூறியமைக்கு நன்றி :))

Sudhakar Shanmugam said...

நவகிரகங்களில் (சாஸ்திரப்படி) ஒரு கிரகமாக புளூட்டோ உள்ளதா?

Sudhakar Shanmugam said...

நவகிரகங்களில் (சாஸ்திரப்படி) ஒரு கிரகமாக புளூட்டோ உள்ளதா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

இந்திய ஜோசிய சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்களுக்கு இடமில்லை.

Post a Comment