Pages

Dec 1, 2011

பிராசியோடைமியம் என்பது என்ன?

பள்ளியில் வேதியல் பாடம் படித்தவர்களுக்கு மூலகங்களின் பட்டியல் (Periodic Table) பற்றித் தெரிந்திருக்கும். பூமியில் எவ்வளவு வகையான மூலகங்க்ள் (Elements) உள்ளன என்பதை இப்பட்டியல் வரைபட வடிவில் காட்டும். அந்தந்த மூலகத்துக்கு உரிய எண், அதன் சுருக்கமான அடையாளப் பெயர் ஆகியவை அந்தப் பட்டியலில் காணப்படும்.

ஆனால் அணு எண் 57 ல் தொடங்கி அணு எண் 71 வரையிலான மூலகங்க்ள் பிரதான பட்டியலில் காணப்படமாட்டாது. அவற்றை மூலகங்களின் பட்டியலுக்கு கீழே தனி வரிசையில் அளித்திருப்பார்கள். இந்த மூலகங்களுக்கு Lanthanides  என்ற பெயரும் உண்டு. லாந்தானம் வகையறா என்பது இதன் பொருள்.

சிவப்பு நிறத்தில் வட்டமிடப்பட்டவை லாந்தனம் வகையறா
கிடைப்பதற்கு அரியவை என்ற பொருளில் இந்த மூலகங்களுக்கு அருமண் உலோகங்கள்(Rare Earth Metals) என்ற பொருந்தாப் பெயரும் உண்டு.   இந்த மூலகங்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடந்த காலகட்டத்தில் இவை கிடைப்பதற்கு அரியவையாக இருந்தன. தவிர, ஒரு காலத்தில் ஆக்சைடுகள்(Oxide) மண் என்றும் குறிப்பிடப்பட்டது.  ஆகவே அருமண் உலோகம் என்ற பெயர்.

உண்மையில் இந்த உலோகங்கள் அரியவையும் அல்ல, இவை மண்ணும் அல்ல. சொல்லப்போனால் பூமியின் மேற்பரப்பில் தங்கத்தை விட நியோடைமியம் உலோகம் அதிகமாக உள்ளது. இந்த வகை உலோகங்கள் இப்போது டன் கணக்கில் நிறையவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

லாந்தானம் வகையறா உலோகங்கள் பலவும் வாயில் நுழையாப் பெயர்களைக் கொண்டவை. பிராசியோடைமியம், நியோடைமியம், டிஸ்புரோசியம், இட்டர்பியம், லூடேஷியம் முதலியவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இவை அல்லாமல் அருமண் உலோகங்களின் பட்டியலில் லாந்தானம், செரியம், புரோமிதியம், சமாரியம், யூரோப்பியம், கடோலினியம், டெர்பியம், ஹோல்மியம், எர்பியம், தூலியம் ஆகியவையும் அடங்கும்.

 கடலடி உலோக் உருண்டை
 தவிர, பிரதான மூலகப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஸ்காண்டியம் (அணு எண் 21) இட்ரியம் (அணு எண் 39) ஆகியவையும் அருமண் உலோகங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. (இட்டர்பியம் வேறு, இட்ரியம் வேறு).  பலருக்கும் இப்படியான உலோகங்கள் உள்ளன என்பது தெரியாது (அருமண் உலோகங்கள் பட்டியலில் அடங்கிய புரோமிதியம் இயற்கையில் கிடைப்பது இல்லை).

 நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்கள் பலவற்றில் அருமண் உலோகங்களில் ஏதாவது ஒன்று அடங்கியுள்ளது. வீடுகளில் காஸ் அடுப்பைப் பற்ற வைப்பதற்குப் பயன்படுத்தும் காஸ் லைட்டரில் தீப்பொறியை தோற்றுவிப்பது செரியம் உலோகம். சிகரெட் லைட்டரிலும் செரியம் அடங்கியுள்ளது. பட்டி தொட்டிகளிலும் பயன்படுத்தப்படும் செல் போன்களிலும் அருமண் உலோகங்கள் சிறு அளவில் அடங்கியுள்ளன.

வர்த்தகத் துறையிலும் ராணுவத் துறையிலும் இவற்றுக்கு நூற்றுக் கணக்கான உபயோகங்கள் உள்ளன. காந்தங்கள், லேசர்கள், இழை ஒளியியல், பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.


கம்ப்யூட்டர் டிஸ்க் டிரைவ், சி.எப்.எல். பல்புகள், சார்ஜ் செய்யத்தக்க பாட்டரிகள், கம்ப்யூட்டர் மெமரி சிப், எக்ஸ்ரே டியூப், கம்ப்யூட்டர் மானிட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள், சூரிய மின்பலகைகள் என பல்வேறான பொருட்களைத் தயாரிப்பதற்கு இவை அத்தியாவசியமானவை. ராணுவத் துறையில் இவை பயன்படுத்தப்படுகின்ற கருவிகளின் பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. அணுசக்தித் துறையிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

மோனசைட் அடங்கிய மணல் சேகரிப்பு 
இந்தியாவில் தமிழக மற்றும் கேரளக் கரையில் கிடைக்கும் மோனசைட் மணலில் பலவகையான அருமண் உலோகங்கள் அடங்கியுள்ளன. இந்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆலைகளை அமைத்து இவற்றைப் பிரித்து எடுத்து வருகிறது. ஒரிசாவிலும் இவை கிடைக்கின்றன. ஆனால் இந்தியா 2004 ஆம் ஆண்டிலிருந்து இவற்றை ஏற்றுமதி செய்வது கிடையாது.

உலகில் அருமண் உலோகங்களின் உற்பத்தியில் 95 சதவிகிதம் சீனாவின் கையில் உள்ளது. கடந்த ஆண்டில் ஜப்பானுடன் ஏற்பட்ட ஒரு தகராறைத் தொடர்ந்து ஜப்பானுக்கு அருமண் உலோகங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இதனால் ஜப்பானில் கார் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

மின்சாரத்தால் இயங்கும் கார்களில் இடம் பெறும் காந்தங்களின் உறபத்திக்கு நியோடைமியம், டிஸ்புரோசியம் ஆகிய அருமண் மூலகங்கள் அவசியம். அமெரிக்காவுக்கான அருமண் உலோக ஏற்றுமதி மீதும் சீனா தடை விதித்தது. இத்தடை சில மாதங்களே நீடித்தது. அத்துடன் சீனா இவற்றின் ஏற்றுமதி கோட்டாவை ஒரேயடியாகக் குறைத்தது.

ஆகவே சீனாவை இனி முற்றிலுமாக நம்ப முடியாது என்று அமெரிக்காவும் ஜப்பானும் முடிவெடுத்தன. சீனாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து உலக மார்க்கெட்டில் அருமண் உலோகங்கள் பலவற்றின் விலை ஒரு கட்டத்தில் பத்து மடங்கு உயர்ந்தது.

சீனாவின் தடை நடவடிக்கையைத் தொடர்ந்து ஜப்பானுக்கு அருமண் உலோக ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் ஜப்பானிய உதவியுடன் புதிய அருமண் பிரிப்பு ஆலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்தியா தனது அருமண் உலோக உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

அருமண் உலோகங்கள் உற்பத்தியில் சீன ஆதிக்கம்
இவ்விதப் பின்னணியில் தான் கடலடி உலோக உருண்டைகளை எடுப்பதில் மேற்கத்திய வட்டாரங்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளன. இந்த உலோக உருண்டைகளில் அனேகமாக எல்லா அருமண் உலோகங்களும் சிறு அளவுக்கு அடங்கியுள்ளன. ஆனால் இவற்றை மேலே எடுத்து அருமண் உலோகங்களை வர்த்தக ரீதியில் பிரித்தெடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

காண்க: கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்

No comments:

Post a Comment