அண்மையில் தமிழ் சேனல் ஒன்றில் ஒரு நிகழ்ச்சியைக் காண நேர்ந்த்து. பேட்டி காண்பவர் கையில் மைக்குடன் ஆங்காங்கு சென்று யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்து கேள்வி கேட்டார். அவர் இவ்விதம் பலரிடம் அதே கேள்வியைக் கேட்டார். கேள்வி இது தான் - இந்தியாவின் நான்கு எல்லைகளிலும் என்ன இருக்கிறது? ப்த்துக்கும் மேற்பட்டவர்களிடம் அவர் இக்கேள்வியைக் கேட்டதில் தலை நரைத்த மூதாட்டி ஒருவர் தான் சரியான விடை அளித்தார். கிழக்கே அரபுக் கடல் உள்ளது, வடக்கே அமெரிக்கா உள்ளது என்பதாகப் பதிலளித்தவர்கள் உண்டு.
எனினும் இந்த நிகழ்ச்சியை வைத்து பொதுவில் மக்களிடையே பூகோளம் பற்றிய அறிவு குறைவு என்று முடிவு கட்டி விட முடியாது. பேட்டி கண்டவர் ஒரு பிரபல பள்ளியின் வாசலில் நின்று கொண்டு வெளியே வருகின்ற மாணவர்களிடம் இக்கேள்வியைக் கேட்டிருந்தால் ஒருவேளை அவர்கள் அனைவரும் சரியான பதிலை அளித்திருக்கலாம்.
பூகோளம் என்பது மிக் முக்கியமான அறிவுத் துறை. ஒரு நாட்டின் வரலாற்றை நிர்ணயிப்பதில் பூகோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கைபர், போலன் கணவாய்கள் இல்லாதிருந்தால் இந்தியாவின் வரலாறே வேறு விதமாக இருந்திருக்கும். வளங்கள் விஷய்த்தில் பூகோளம் ஒரு நாட்டின் வலிமை அல்லது வலிமை இன்மையை நிர்ணயிக்கிறது. பூகோளம் ஒரு நாட்டு மக்களின் நடை, உடை, பாவனை ஆகியவற்றையும் நிர்ணயிப்பதாகக் கூறலாம்.
வானிலிருந்து படம் எடுக்கும் செயற்கைக்கோள்கள், நவீன கம்ப்யூட்டர்கள், ஜி.பி.எஸ் தகவல் தொடர்பு வசதி முதலியன பூகோளத்தின் பரிமாணத்தை பல மடங்கு பெரிதாக்கியுள்ளன.
இந்திய பூகோளத் தகவல் திரட்டின் அடையாளம் |
ஒரு பெரிய நகரில் எங்கோ ஒரு கட்டடத்தில் தீப்பிடிக்கிறது. அந்த இடத்துக்கு எந்தப் பாதை வழியே சென்றால் சீக்கிரம் செல்லலாம்? நகரில் எந்தெந்த இடங்களில் பாதாள சாக்கடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன? நகரில் எந்தெந்த திறந்த வெளிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாட்டில் காடுகளின் பரப்பு குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா, விவசாய நிலங்களின் பரப்பு எவ்வளவு, நாட்டில் எந்தெந்தப் பகுதியில் எந்தவிதமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன என்பன போனற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை பெற கம்ப்யூட்டரில் பொத்தானைத் தட்டினால் கண் முன்பாகத் தெரியும் மேப்புகள் வடிவில் விடை பெறலாம். முப்பரிமாண வடிவில் காட்டும் மேப்புகளையும் பெற முடியும்.
தனியார் துறையினருக்கும் GIS மூலமான தகவலகள் பலவகைகளிலும் உதவுகிறது. எங்கு கிடங்கு அமைத்தால் சரக்குகளை எளிதில் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லலாம்? மார்க்கெட்டிங் சர்வே எங்கெல்லாம் இனி நடத்த வேண்டும் என்பன போன்ற தகவலகளை GiS மூலம் பெற முடியும்.
கம்ப்யூட்டர்களில் பூகோள ரீதியிலான எண்ணற்ற தகவல்களையும் சேகரித்து வைத்துப் பயன்படுத்த முடிகிறது. இத்தகவல்களை மேப்புகள், சார்ட்டுகள், வரிவடிவப் படங்கள் என பல்வேறு வடிவங்களில் பெற இயலும்.
விஞ்ஞானிகள், பல்வேறு அமைப்புகள், நகர நிர்வாகிகள், தனியார் துறையினர், ராணுவத் துறையினர் என ப்ல்வேறு துறைகளும் இத்தகவல்களைப் பயன்படுத்துகின்றனர்.
கார்ட்டோசாட் செய்ற்கோளிலிருந்து எடுக்கப்பட்ட படம்: நன்றி இஸ்ரோ |
GIS பற்றிய பயன்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கென இந்த ஆண்டில் 64 நாடுகளில் நவம்பர் 16 ஆம் தேதி GIS தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இது நவம்பர் 17 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்காவில் மக்களிடையே பூகோள விழிப்புணர்வை ஏற்படுத்த பூகோள வாரம் ஆண்டுதோறும் நவம்பர் மாத மூன்றாவது வாரம் பின்பற்றப்படுகிறது. இந்த வாரத்தின் போது வருகின்ற புதன்கிழமை GIS தினமாகப் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு பூகோள விழிப்புணர்வு வாரத்தின் போது புதன்கிழமை 16 ஆம் தேதி வருகிறது. கடந்த ஆண்டில் நவம்பர் 17 ஆம் தேதி புதன்கிழமையாக இருந்தது.
2 comments:
good info thanks sir
can you please tell the correct answer.. what is there in four corners of India.
Post a Comment