Nov 12, 2011

யந்திர ஆடை போர்த்திய மனிதன்

Share Subscribe
ரோபாட் சூட் அணிந்தவர் கையில் மூட்டைகள்
ஜப்பானில் புகுஷிமா(Fukushima) அணு உலையில் உள்ள ஆபத்தான அணுசக்திக் கழிவுப் பொருட்களை அகற்ற இப்போது வழி பிறந்துள்ளது. சைபர்டைன் என்னும் ஜப்பானிய நிறுவனம் விசேஷ ரோபாட் சூட்டுகளைத் (Robot Suit) தயாரித்து அளிக்க முன்வந்துள்ளது. இந்த ரோபாட் சூட்டையும் அதற்கு மேலாக விசேஷ உலோக ஷீட்டையும் அணிந்து உள்ளே சென்றால் பாதுகாப்பாகப் பணியாற்ற இயலும் என்று கூறப்படுகிறது. இந்த ரோபாட் சூட்டை அணிந்தால் ஐந்து மடங்கு எடையை சுமக்க முடியும் என்பது கூடுதல் அம்சம். அது என்ன ரோபாட் சூட்?

தொழிலாளி ஒருவரால் ஒரு மூட்டை அரிசியை முதுகில் தூக்க முடியும். ஆனால் அதே தொழிலாளியிடம் இரு கைகளையும் நன்கு நீட்டச் சொல்லி  அரிசி மூட்டையை அவரது கைகள் மீது வைத்தால் எடை தாங்க முடியாமல்  கீழே போட்டு விடுவார். ஆனால் அவர் ரோபாட் சூட் எனப்படும் யந்திர ஆடையைப் அணிந்து கொண்டால் கைகளில் ஒரு அரிசி மூட்டையை வைத்தால் மூட்டை கீழே விழாது. அந்த எடையை சுமக்க யந்திர ஆடை உதவுகிறது. இப்படியான யந்திர ஆடையைத்தான் Robot Suit என்று குறிப்பிடுகிறார்கள்.

ரோபாட்டுகள் நமக்குத் தெரியும். இப்போது உலகெங்கிலும் பல நாடுகளில் ஆலைகளில் பலவகையான ப்ணிகளைச் செய்வதற்கு ரோபாட்டுகள் உதவுகின்றன. பல்வகையான ரோபாட்டுகளை உருவாக்குவதில் ஜப்பான் முன்னணியில் நிற்கிறது. ரோபாட் என்றவுடன் மனிதன் வடிவிலான யந்திரம் நம் கண் முன் தோன்றும். ஆனால் எல்லா ரோபாட்டுகளும் மனித வடிவில் இருக்க வேண்டும் என்பதில்லை. வெறும் கை வடிவிலான ரோபாட்டும் உண்டு.

ரோபாட்டுகளுக்கு மனிதன் போன்ற மூளை கிடையாது. செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) துறையில் என்னதான் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தாலும் ரோபாட்டுக்கு மனித மூளைக்கு இணையான அறிவாற்றலை அதற்கு அளிக்க இயலாது.

ஆனால் மனித மூளையுடன் ரோபாட் இணைந்து செயல்படச் செய்ய முடியும், அது தான் ரோபாட் சூட். இதைச் சாதித்துள்ளவர் யோஷியூகி சன்காய் (Yoshiyuki Sankai). ஜப்பானின் பிரபல சுகுபா பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியர் (Tsukuba University). சிறு வயதிலிருந்தே அவருக்கு ரோபாட் மீது மிகுந்த ஆர்வம். மனிதனும் யந்திரமும் சேர்ந்து இயங்குகின்ற ஒன்றை உருவாக்குவதில் அவர் முனைந்தார்.

சுமார் 14 ஆண்டுக்காலம் அவர் பாடுபட்டு உருவாக்கியது தான் ரோபாட் சூட். நம் உடலில் தசைகள் முக்கிய பங்காற்றுகின்றன்.  நாம் கையைத் தூக்கினால் அதற்கான ஆணை நுண்ணிய மின் துடிப்புகள் வடிவில் மூளையிலிருந்து தசைக்கு வந்து சேருகிறது. அங்க அசைவுகள் அனைத்தும் மூளையிலிருந்து வரும் இப்படியான மின் துடிப்புகளின் மூலம் நடைபெறுகின்றன. ரோபாட் சூட்டை அணியும் போது தசைகளின் மீது அதாவது தோல் மீது உணர் கருவிகள் பதிக்கப்படுகின்றன.



ரோபாட் சூட்டானது தோலுக்கு வந்து சேரும் இந்த மின் துடிப்புகளை அறிந்து கொள்கிறது. அப்போது ரோபாட் சூட்டில் உள்ள பல்வேறு பகுதிகளும் அத்ற்கேற்ப செயல்படுகின்றன. த்சைகளுக்குப் பதில் ரோபாட் சூட்டின் பகுதிகள் இயங்குகின்றன. இதற்கான வகையில் ரோபாட் சூட்டுக்குள் கம்ப்யூட்டரும் மற்றும் மோட்டார்களும் இதர கருவிகளும் உள்ளன. பாட்டரிகளும் உள்ளன.

ஆகவே உள்ளே மனிதன் இருக்க, அவன் அணிந்துள்ள ரோபாட் சூட் செயல்படும் போது ஐந்து ம்டங்கு ஆற்றலுடன் செயல்பட முடிகிறது. காலூன்றி நிற்பதும் யந்திர மனிதன் தான் என்பதால் ரோபாட் சூட்டின் எடை அவனை அழுத்துவதில்லை. கையை நீட்டச் சொல்லி 40 கிலோ எடையை வைத்தால் தாங்கிக் கொள்ள முடிவதற்கும் இதுவே காரணம். இந்த ரோபாட் சூட்டை உருவாக்கும் போது எண்ணற்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது.
ரோபாட் சூட் மாடல்

ரோபாட் சூட் 2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் தான் பெரிய அளவில் அவை உற்பத்தி செய்யப்பட்டன. ஆரம்ப கட்டத்தில் இடுப்பிலிருந்து பாதம் வரையில் அணிவதற்கான ரோபாட் சூட் தான் தயாரிக்கப்பட்டன. மிக வயதானவர்களால் நடக்க முடியாமல் போகிறது. அவர்களுக்கு இது உதவுகிறது.

 ஜப்பானில் 100 மருத்துவ மனைகளில் இப்போது ரோபாட் சூட் பயன்படுத்தப்படுகிறது. பக்கவாதத்தால் கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவும் வகையில் இது மேலும் செம்மையாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தான் இந்த ரோபாட் சூட் Hybrid Assistive Limb என்று அழைக்கப்படுகிறது.இது சுருக்கமாக HAL என்று குறிக்கப்படுகிறது.

பின்னர் தான் முழு உடலுக்கும் பொருத்தமான ரோபாட் சூட் உருவாக்கப்பட்டது. இதன் விலை சுமார் ரூ 6 லட்சம். கடந்த ஆண்டு வரை இந்த ரோபாட் சூட்டுகள் ஜப்பானுக்குள்ளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பை ராணுவ காரியங்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் சில நாடுகள் பேராசிரியர் சன்காயை அணுகின. ஆனால் அவர் அதற்கு இணங்க மறுத்து விட்டார். மனித நலனே முக்கியம் என்று அவர் கூறினார்.

ஆனால் இப்போது அமெரிக்காவில் சில நிறுவனங்கள் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான் ரோபாட் சூட்டுகளை உருவாக்குவதில் முனைந்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் பெரும் விபத்து நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அணு உலைக்குச் சென்று அங்குள்ள கழிவுகளை அகற்றலாம் என்றால் உயிருக்கு ஆபத்தான கடும் கதிர்வீச்சு தாக்கும். சாதாரண ரோபாட்டுகளை அனுப்பிப் பயனில்லை. இப்போது இப்பணிக்கென பேராசிரியர் சன்காயின் சைபர்டைன் நிறுவனம் விசேஷ ரோபாட் சூட்டுகளைத் தயாரித்து அளிக்க முன்வந்துள்ளது.

ரோபாட் சூட்டுக்கு மேலே டங்க்ஸ்டன் ஷீட் .
இந்த ரோபாட் சூட்டை அணியும் ஊழியர்கள் கடும் கதிர்வீச்சு தாக்காமல் இருக்க இந்த சூட்டுக்கும் மேல் 15 கிலோ எடை கொண்ட டங்க்ஸ்டன் (Tungsten) உலோக ஷீட்டை அணிந்திருப்பர்.  ரோபாட் சூட்டில் உள்ள பாட்டரிகள் சுமார் இரண்டரை மணி நேரம் தாங்கும். ரோபாட் சூட் அணிந்தவர்களை அடுத்தடுத்து அனுப்பும் போது அணுசக்திப் பொருட்களை அகற்றும் பணியை விரைவாக முடிக்க இயலும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment