’சாதா’ |
அணுவின் அமைப்பு பற்றிப் பலரும் அறிந்திருப்பர். எந்த ஓர் அணுவானாலும் அதில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று வகைத் துகள்கள் இருக்கும். ஹைட்ரஜன் மட்டும் இதில் விதிவிலக்கு. ஹைட்ரஜன் அணுவை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான அணுக்களில் மையக் கருவில் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். அதை ஓர் எலக்ட்ரான் சுற்றி வரும்; நியூட்ரான் இராது. ரொம்பவே சிம்பிள். இவ்விதமான இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் வேதியல் ரீதியில் பிணையும் போது அது தண்ணீர் ஆகிறது. இதை H2O என்று குறிப்பிடுவர்.
அபூர்வமாக சில ஹைட்ரஜன் அணுக்களில் மையக் கருவில் புரோட்டானுடன் சேர்ந்து ஒரு நியூட்ரானும் இருக்கும். ஆகவே இதற்கு கன ஹைட்ரஜன் அணு என்று பெயர். சாதாரணத் தண்ணீரில் மிக அற்ப அளவுக்கே கன ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கும். பத்து லட்சம் ஹைடரஜன் அணுக்களில் 152 அணுக்கள் மட்டுமே கன ஹைட்ரஜன் அணுக்களாக இருக்கும்.
ஆனால் தண்ணீரில் அடங்கிய ஹைட்ரஜன் அணுக்களில் 99.75 சதவிகிதம் கன ஹைட்ரஜனாக இருக்கும்படி செய்ய முடியும் - இதுவே கன நீர் ஆகும். கன நீருக்கு Deuterium என்ற பெயரும் உண்டு. இதை D2O என்று குறிப்பிடுவர்.
தூத்துக்குடி கன நீர் ஆலை |
உலகின் முதலாவது கன நீர் ஆலை 1940களில் நார்வே நாட்டில் செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் கன நீரைத் தயாரித்து வந்த ஒரே நாடு அது தான். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. ஹிட்லர் ஆட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி அணுகுண்டு தயாரிக்க விரும்பியது.
ஆகவே ஹிட்லர் எப்படியாவது நார்வேயின் அந்த கன நீர் ஆலையைக் கைப்பற்ற முயன்றார். அதை முறியடிப்பதில் பிரிட்டிஷ் படைகளும் நார்வேயின் தேசபக்த வீரர்களும் நடத்திய போர் வீரம் செறிந்தது. சினிமாப் படம் கூட எடுத்திருக்கிறார்கள்.
சாதாரண யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளில் கன நீரைப் பயன்படுத்துவர். அதன் மூலம் புளூட்டோனியத்தைப் பெற முடியும். புளூட்டோனியத்தைக் கொண்டு அணுகுண்டு செய்ய இயலும்.
மாறாக, செறிவேற்றப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தும் அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் லகு நீர் பயன்படுத்தப்படுகிறது. கூடன்குளத்திலும் இப்படித்தான்.
இந்தியா சொந்தமாக வடிவமைத்து நிறுவிய அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் சாதாரண யுரேனியம் இடம் பெறுவதால் கன நீர் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி உட்பட இந்தியாவில் பல இடங்களில் கன நீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. கன நீர் உற்பத்தியில் உலகில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ReplyDeleteஇந்தியாவும் சொந்த அணு தொழில்நுட்பம் வைத்துள்ளது என்று சொன்னீர்கள்.அதுவும் கன நீர் நுட்பம்,ஏன் இந்தியா ரஷியாவிடம் இருந்து லகு அணுமின் திட்டத்தை பல கோடி கொடுத்து வாங்குகிறது சொந்த தொழில்நுட்பம் கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடைபெறுகிறதா இல்லையா
ReplyDeleteஇந்தியா சொந்த அணுதொழில்நுட்பம் வைத்துள்ளதா சற்று விவரிக்கவும்..........................
ReplyDeleteமணிகண்டராஜ்
ReplyDeleteஇந்தியா சொந்தமாக அணு தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் பல இடங்களில் இந்தியா உருவாக்கிய தொழில் நுட்ப அடிப்படையில் அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் ஆனால் இவ்வித அணு மின்சார யூனிட் ஒவ்வொன்றும் 220 மெகாவாட் திறன் கொண்டவையே. இப்போது தான் 440 மெகாவாட் யூனிட்டைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம். தவிர, இந்தியாவில் போதுமான யுரேனியம் கிடைப்பதில்லை.
ரஷிய உதவியுடன் அல்லது பிரெஞ்சு உதவியுடன் அமையும் அணுமின் யூனிட்டுகள் ஒவ்வொன்றும் தலா 1100 மெகாவாட் அல்லது 1600 மெகாவாட் திறன் கொண்டவை. ஆகவே பிரெஞ்சு உதவியுட்ன் ஆறு யூனிட்டுகளைக் கொண்டஅணுமின் நிலையம் அமைத்தால் அந்த ஒரு அணுமின் நிலையம் மட்டும் 9600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இருக்கும். இந்தியாவின் மின்சாரப் பசியை விரைவில் போக்க இது உதவும்.
நமது அணுமின் யூனிட்டுகள் சிறியவை. தவிர, யுரேனிய பிரச்சினையும் உள்ளது. ஆகவே தான் இந்தியா பிற நாடுகளின் உதவியை நாட நேரிட்டது.
இதற்கிடையே இந்தியாவில் ஏராளமாகக் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டத்திலும் இந்தியா இறங்கியுள்ளது. இது பலனளிக்க நீண்ட காலம் ஆகும்.