Pages

Nov 3, 2011

தமிழகத்தின் மழை சீசன்

"ஐப்பசியில் அடை மழை" என்று சொல்வார்கள். தமிழ் பஞ்சாங்கம் பற்றித் தெரியாதவர்களுக்கென சொல்வதானால் ஐப்பசி மாதம் என்பது அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் மத்தி வரை நீடிப்பதாகும்.

ஐப்பசியில் அடை மழை என்று சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் டிசம்பர் மத்தி வரை மழை நீடிப்பது உண்டு. அதாவது கார்த்திகை முடியும் வரை மழைபெய்ய வாய்ப்பு உண்டு. ஒரு சமயம் டிசம்பர் 18 ஆம் தேதியன்று புயல் வீசியது.
 வடகிழக்குப் பருவக் காற்று
அக்டோபர் மத்தியிலிருந்து டிசம்பர் மத்தி வரையில் பெய்கின்ற மழைக்கு வடகிழக்குப் ப்ருவ மழை என்றும் பெயர். வடகிழக்குத் திசையிலிருந்து வீசுகின்ற காற்று இந்த மழையைக் கொண்டு வருவதால் அப்பெயர்.

ஜூன் கடைசியில் சூரியன் தெற்கே செல்ல ஆரம்பித்ததும் ஆசியாவின் மத்தியப் பகுதி குளிர்ந்து விடும். காற்று அடர்த்தியாகி விடும். காற்றழுத்தமும் அதிகரித்து விடும். ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதியில் தொட்ர்ந்து வெப்பம் நிலவும். உதாரணமாக செப்டம்பரில் தமிழகத்தில் கடும் வெயில் வீசுகிறது. இதன் விளைவு அக்டோபரிலும் நீடிக்கிறது. ஆகவே இதனால் பூமியின் நடுக்கோட்டுக்கு சற்று வடக்கே உள்ள ப்குதியில் காற்றின் அடர்த்தியும் அழுத்தமும் குறையும். இதன் விளைவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிக் காற்று வீசத் தொடங்கும்.

பாசன ஏரி
பூமியின் சுழற்சி காரணமாக காற்று வீசும் திசை சற்றே விலகும். இதன் விளைவு தான் வடகிழக்குப் பருவக் காற்று. வங்கக் கடல் மேலாக் வரும் போது அது நிறைய ஈரப் ப்சையை எடுத்துக் கொள்கிறது. அதன் விளைவாக மழை பெய்கிறது.

பொதுவில் ஜூன் முதல் ஆகஸ்ட் மத்தி வரை இந்தியா முழுவதிலும் பெய்கின்ற தென் மேற்குப் பருவ மழையால் தமிழகத்துக்குப் பெரிய பலன் எதுவும் கிடையாது. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரும். பெரியார் அணை, வைகை அணை, பவானி சாகர் போன்றவை நிரம்பும். நீலகிரி மலையில் முக்கியமாக மின்சார உற்பத்திக்காகக் கட்டப்பட்ட சிறு அணைகளும் நிரம்பும்.  

ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பெய்யும் மழையைத் தேக்கி வைத்துப் பின்னர் பாசனத்துக்குப் பயன்படுத்துவதற்கென்றே தமிழக்த்தில் கடந்த பல நூற்றாண்டுகளில் மன்னர்கள் ஆயிரமாயிரம் ஏரிகளைத் தோண்டினர்.இப்போது இவற்றில் பலவும் மேடிட்டுப் போய் விட்டன. ஆக்கிரமிப்பு காரணமாக பல ஏரிகள்  இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டன.

கோயில் குளம்
குளங்கள் வேறு வகை. தமிழகத்தில் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. கோயில் என்றால் அருகே ஒரு குளம் இருக்கும்.அதைச் சுற்றிலும் மரங்கள் இருக்கும். குளம, மரங்கள், நிலத்தடி நீர் மூன்றுக்கும் ஒரு வகையான தொடர்பு உண்டு.மரங்களை வெட்டினால் குளம் வற்றி விடும். குளங்கள் வற்றினால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மடடம் கீழே இறங்கி கிணறுகளும் வற்றி விடும்.

வடகிழக்குப் பருவ மழை ஒரு வகையில் தென்மேற்குப் பருவ மழையிலிருந்து வேறு பட்டது. தென் மேற்குப் பருவ மழையின் போது தென் மேற்கிலிருந்து தொடர்ந்து அலை அலையாக மழை மேகங்கள் வந்து கொண்டிருக்கும். வடகிழக்குப் பருவ மழை சீசனின் போது வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் தான் நல்ல மழை பெய்யும். அதே போல வங்கக் கடலில் புயல் சின்னங்கள் உருவானாலும் நல்ல மழை பெய்யும்.

வடகிழக்குப் பருவ மழையால் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், ஒரிசா ஆகிய மானிலங்களும் மழையைப் பெறுகின்றன்.

No comments:

Post a Comment