Pages

Nov 1, 2011

நியூட்ரினோவின் ஓட்டப் பந்தயம்

 ஜெனீவாவிலிருந்து இத்தாலிக்கு நியூட்ரினோ செல்லும் பாதை
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரிலிருந்து இத்தாலி நாட்டுக்கு நியூட்ரினோ ''ஓட்டப் பந்தயம்' மறுபடி நடக்கப் போகிறது. ஜெனீவாவில் தரைக்கு அடியிலிருந்து நுண்ணிய நியூட்ரினோ துகள்களை அனுப்பினால் அவை இத்தாலியில் இதே போல உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்துக்குப் போய்ச் சேரும். அவை எவ்வளவு வேகத்தில் பாய்ந்து சென்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிவர்.

 நியூட்ரினோக்களை அனுப்புமிடம். ஜெனீவா
இப்பரிசோதனை கடந்த மூன்று ஆண்டுக்காலமாக எண்ணற்ற தடவைகள் நடந்தது தான். ஆனால் நோக்கம் வேறு விதமாக இருந்தது. நியூட்ரினோக்கள் ஓடும் போதே வேறு உருப் பெறும் தன்மை கொண்டவை. அதாவது ராமனாகக் கிளம்பினால் கிருஷ்ணனாகப் போய்ச் சேரும். இது எப்படி என்று அறிவதே விஞ்ஞானிகளின் நோக்கமாக இருந்தது.

இது பற்றிய சோதனைகளின் போது விஞ்ஞான உலகமே அதிர்ச்சியளிக்கின்ற சமாச்சாரம் தெரிய வந்த்து.  நியூட்ரினோ ஒளியின் வேகத்தையும் மிஞ்சுகிற வேகத்தில் பாய்ந்து செலவதாகத் தோன்றியது. ஒளியின் வேகத்தை எதனாலும் யாராலும் மிஞ்ச முடியாது எனப்து உலகம் பூராவிலும் ஒப்புக்கொள்ளப்ப்ட்ட கொள்கை. ஐன்ஸ்டைன் அதை அடித்துக் கூறியிருக்கிறார்.

 பரிசோதனைகளின் போது நியூட்ரினோவின் வேகத்தை அளந்த கருவிகளில் ஒரு வேளை கோளாறு இருந்திருக்குமோ என்று  ஐயம் உள்ளது..அப்படி இன்றி உண்மையில் நியூட்ரினோ ஒளி வேகத்தை மிஞ்சியிருக்கும் என்றால் இயற்பியல் தொடர்பான அடிப்படைக் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

ஆகவே தான் மீண்டும் ஒரு த்டவை நியூட்ரினோவை விஞ்ஞானிகள் ஓடவைத்து சோதனை நடத்தப்போகிறார்கள்.இந்தத் தடவை நியூட்ரினோக்களின் வேகத்தை அளப்பதே பிரதான நோக்கமாக இருக்கும்.  ஒளி வேகம் குறித்து ஏற்கெனவே உள்ள கொள்கை ஜெயிக்குமா அல்லது நியூட்ரினோ ஜெயிக்குமா என்பது தான் கேள்வி.

நியூட்ரினோ என்பது மிக நுண்ணிய துகள் ( நியூட்ரான் வேறு நியூட்ரினோ வேறு) யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கப் பொருட்கள் இயற்கையாகச் சிதைவுறும். அப்போது நியூட்ரான் புரோட்டானாக மாறுவதுண்டு. அப்படி மாறும் போது நியூட்ரினோ ஒன்று வெளிப்படும்.

தவிர, சூரியனிலிருந்து கோடிக்கணக்கில் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன.விண்வெளியிலிருந்து நியூட்ரினோக்கள் வருகின்றன. அணு உலைகளிலிருந்தும் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன.

நியூட்ரினோக்களில் மூன்று வகை உண்டு. எலக்ட்ரான் நியூட்ரினோ, மியுவான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோ.இவ்ற்றில் சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களை சோலார் நியூட்ரினோ என்றும் அழைப்பார்கள்.

 இத்தாலியில் உள்ள ஆராய்ச்சிக்கூடம்
ஒரு சமயம் இந்த சோலார் நியூட்ரினோக்கள் உலகின் விஞ்ஞானிகளுக்குப் பெரும் தலைவலியை அளித்தன. சூரியனுக்குள் அணுச் சேர்க்கை நிகழ்கிறது. இந்த அணுசேர்க்கையின் போது சூரியனிலிருந்து இவ்வளவு நியூட்ரினோக்கள் வெளிப்பட்டாக  வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர்.

 சூரியனில் நடக்கும் அணுச்சேர்க்கை பற்றிய தங்கள் கொள்கை சரிதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய விஞ்ஞானிகள் சூரியனிலிருந்து வருகின்ற சோலார் நியூட்ரினோக்களை ஆராய முற்பட்டனர். ஆனால் அவ்விதம் வருகின்ற சோலார் நியூட்ரினோக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் இருக்கவில்லை. ஆகவே உலகம் பூராவிலும் பல நாடுகளில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் கோலார் தங்கச் சுரங்கப் பகுதியில் கைவிடப்பட்ட ஒரு சுரங்கத்தில் நல்ல ஆழத்தில் கருவிகளை வைத்து சோதித்தனர்.

கடைசியில் கனடாவில் இதே போல ஆழத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 2002 ஆம் ஆண்டில் கிடைத்தது. அதாவது சூரியனிலிருந்து கிளம்புகிற சோலார் நியூட்ரினோக்களில் (எலக்ட்ரான் நியூட்ரினோக்கள்) பலவும் கிளம்பிய இடத்திலிருந்து வருகின்ற வழியில் ‘சட்டை மாற்றிக் கொள்வது போல’ வேறு நியூட்ரினோக்களாக மாறி விடுகின்றன என்பது தெரிய வந்தது. ஆகவே அனைத்து வகை நியூட்ரினோக்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்த போது விஞ்ஞானிகளுக்கு கணக்கு சரியாக இருந்தது.

நியூட்ரினோக்கள் எதையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை.  தமிழகத்தில் பகல் நேரம் என்று வைத்துக் கொண்டால் சூரியனிலிருந்து வரும் கோடானுகோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துக் கொண்டு அத்துடன் பூமியைத் துளைத்துக் கொண்டு இரவாக இருக்கின்ற அமெரிக்கா வழியே விண்வெளிக்குப் பாய்ந்து சென்று விடும். இருபது பூமிகளைப் பக்கம் பக்கமாக வைத்தாலும் அவை அனைத்தையும் நியூட்ரினோக்கள் துளைத்துச் சென்று விடும்.(தமிழகத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையம் ஒன்று அமைய இருக்கிறது).

எதைக்கொண்டும் நியூட்ரினோக்களைத் தடுத்து நிறுத்த முடியாது.ஒரு பெரிய ரௌடி தப்பி ஓடும் போது தன்னைத் தடுக்க வருபவர்களைக் கீழே தள்ளி விட்டு ஓடிவிடுவான்.ஒரு சந்தில் நான்கு பேர் கீழே கிடந்தால் அந்த வழியாக அவன் ஓடினான் என்று அறிந்து கொள்ளலாம்.  ஆராய்ச்சிக்கூடங்களில் நியூட்ரினோ இப்படித் தாக்கி விட்டுச் செல்வதால் ஏற்படும் விளைவுகளை வைத்துத் தான் நியூட்ரினோ பற்றி அறிந்து கொள்கிறார்கள்.

மறுபடி ஜெனீவாவுக்கு வருவோம். இங்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் சேர்ந்து அமைத்துள்ள CERN என்ற பிரும்மாண்டமான ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. இங்கு பாதாளத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சிப் பிரிவிலிருந்து இத்தாலியில் கிரான் சாஸோ மலைக்கு அடியில் உள்ள பெரிய ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஏற்கெனவே கூறியப்டி மியுவான் நியூட்ரினோக்களை அனுப்பி வருகின்றனர். நிலத்துக்கு அடியில் தான் இந்த நியூட்ரினோக்கள் மண்னையும் பாறைகளையும் துளைத்துக் கொண்டு செல்கின்றன. பூமியைத் துளைக்கின்ற நியூட்ரினோக்களுக்கு நிலத்துக்கு அடியே செல்வதில் பிரச்சினை இல்லை.

ஜெனீவாவிலிருந்து இத்தாலியின் ஆராய்ச்சிக்கூடத்துக்கு உள்ள தூரம் 732 கிலோமீட்டர். மியுவான் நியூட்ரினோ எந்த அளவுக்கு டாவ் நியூட்ரினோக்களாக மாறுகின்றன என்று அறிவதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம். இப்பரிசோதனை எண்ணற்ற தடவைகள் நடந்துள்ளன்.

நியூட்ரினோக்கள் எவ்வளவு வேகத்தில் வந்து சேருகின்றன என்பதும் இந்த ஆராய்ச்சியின் போது ப்திவு செய்யப்பட்டது. ஆனால் இவை ஒளியை மிஞ்சும் வேகத்தில் செல்வதாகவே தெரியவந்தது. ஆகவே தான் CERN விஞ்ஞானிகள் இறுதியில் அதாவது கடந்த மாதம் இது பற்றி அறிவிப்பு வெளியிட்டனர்.
இத்தாலி ஆராய்ச்சிக்கூடத்தின்
இன்னொரு தோற்றம்

நாங்கள் புதிதாகக் கண்டுபிடிப்பு செய்துவிட்டதாகக் கூற விரும்பவில்லை. மற்றவர்களும் இது போல பரிசோத்னை நடத்தி எங்களுக்குக் கிடைத்த தகவல் சரிதானா என்பதைச் சோதிக்க் வேண்டும் என விரும்புகிறோம் என்று CERN விஞ்ஞானிகள் அடக்கமாகவே கூறியுள்ளனர்.

ஜெனீவா விஞ்ஞானிகள் நவம்பர் மாதக் கடைசியில் மீண்டும் மியுவான் நியூட்ரினோக்களை ஓடச் செய்யும் பரிசோதனையை  நடத்த இருக்கின்றனர். இதுவரை செய்தது மாதிரியில் இல்லாமல் இந்த நியூட்ரினோக்களை சற்றே வேறுபட்ட வகையில் அதாவது அதிக இடைவெளிகளில் அனுப்ப இருக்கிறார்கள்.இந்தத் தடவை நியூட்ரினோக்களின் வேகத்தை அளப்பதே பிரதான நோக்கமாக இருக்கும். அப்ப்ரிசோதனையில் என்ன தெரிய வரும் என்பதை உலகின் விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

ஒளியானது வெற்றிடம் வழியே சென்றால் அதன் வேகம் வினாடிக்கு 2,99,792 கிலோ மீட்டர். ஜெனீவா விஞ்ஞானிகள் நடத்திய பரிசோதனைகளில் நியூட்ரினோக்கள் ஒளி வேகத்தில் சென்றால் எவ்வளவு நேரத்தில் போய்ச் சேர்ந்திருக்குமோ அதை விட 60 நானோ செகண்டுகள் முன்னதாகப் போய்ச் சேர்ந்தன. ஆகவே தான் பிரச்சினை.

6 comments:

  1. அருமையான தகவல்கள். எளிதான அறிவியல் விளக்கம். நன்றி

    ReplyDelete
  2. நியூட்ரினோ ஒளியைவிட வேகமாக போகவில்லையாமே ?

    ReplyDelete
  3. Anonymous
    பிப்ரவரி நான்காம் வாரம் வாக்கில் வந்துள்ள தகவல்கள் அப்படித்தான் கூறுகின்றன.ஒன்று அளவிடுவதில் கோளாறு, இன்னொன்று வயர் பிரச்சினை. கடைசியில் ஐன்ஸ்டைன் தான் ஜெயித்திருக்கிறார் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  4. Kasali
    சூரிய ஒளி என்பது மின்காந்த அலைகள் வ்கையைச் சேர்ந்தது. நியூட்ரினோ என்பது அணுத் துகள்.சூரிய ஒளியால் பூமியைத் துளைத்துச் செல்ல முடியாது. அப்படி முடியுமானால் நமக்கு இரவே இருக்காது. நியூட்ரினோவை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது. சமையலறையில் பாத்திரங்கள் இங்குமங்குமாக உருண்டு விழுந்து கிடந்தால் இரவில் பூனை வந்து விட்டுச் சென்றுள்ளது என்பதை ஊகிக்கலாம். அது மாதிரி நியூட்ரினோக்கள் வேகமாகப் பாய்ந்து செல்லும் போது வழியில் இருப்பதன் மீது மோதி விளைவுகளை உண்டாக்குகிறது. இதை வைத்து நியூட்ரினோக்கள் பற்றி அறிகின்றனர்

    ReplyDelete
  5. kassali
    மற்ற்வை இயற்கையானவையே.

    ReplyDelete
  6. எனக்கும் ஒரு சந்தேகம் அய்யா.
    சூரியனிலிருந்து வெளிவரும் நியுட்ரினோ மனிதன் உடலையும் துளைத்துகொண்டு செல்லும்போது மனிதனுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் அய்யா?

    ReplyDelete