Pages

Oct 5, 2011

ஏழு ஆண்டு காத்திருந்த செயற்கைக்கோள்

     ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்திலிருந்து வருகிற 12 ஆம் தேதி சுமார் 1000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் செலுத்தப்பட இருக்கிறது. இதன் பெயர் Megha-Tropiques.

    Megha  என்றால் மேகங்கள். Tropiques என்றால் பிரெஞ்சு மொழியில் வெப்ப மண்டலப் பகுதிகள் என்று பொருள். அதாவது உலகில் வெப்ப மண்டலப் பிராந்தியத்துக்கு மேலே இருக்கின்ற மேகக் கூட்டங்களை இச்செயற்கைக்கோள் ஆராய்ந்து தகவல் சேகரிக்கும்.

    பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) வடக்கே 22 டிகிரி வரை தெற்கே 22 டிகிரி வரை மட்டுமே இதன் பார்வை செல்லும். சூரியனிடமிருந்து பூமிக்கு இப்பிராந்தியத்தில் தான் அதிக வெப்பம் கிடைக்கிறது. இங்குதான் மேகங்களும் அதிகம்.

நடுக்கோட்டுக்கு மேலே மேகக் கூட்டம்
      இந்திய - பிரான்ஸ் நாடுகளின் கூட்டு திட்டம் இது. இந்த செயற்கைக்கோள் 2004 ஆம் ஆண்டிலேயே உயரே செலுத்தப்பட்டிருக்க வேண்டும். சில பிரச்சினைகளால் ஏழு ஆண்டுகள் கழித்து இப்போது செலுத்தப்படுகிறது. செயற்கைக்கோளில் நான்கு கருவிகள் இருக்கும். அவற்றில் ஒரு கருவியின் மிக நீளமான ஆங்கிலப் பெயரைச் சுருக்கி MADRAS  என்று குறிப்பிடுகிறார்கள். இக் கருவி இரு நாடுகளும் சேர்ந்து உருவாக்கியது. மற்ற மூன்றும் பிரெஞ்சு தயாரிப்பு.

செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை
     உலகின் வெப்ப மண்டல நாடுகளுக்கு மேலாக பறக்கும் என்பதால் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே செயற்கைக்கோளின் கீழ் வரும் - இவை இந்தியா, தென் கிழக்காசிய நாடுகள், இடைப்பட்ட கடல் பகுதிகள், ஆப்பிரிக்க கண்டத்தில் மத்தியப் பகுதியில் உள்ள நாடுகள்,  தென் அமெரிக்க கண்டத்தின் வடகோடி நாடுகள் ஆகியவை . சுமார் 865 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கும் என்பதால் இது மேகக் கூட்டங்களுக்கு மேலாக அமைந்திருக்கும்.

     எனவே மேகங்களில் அடங்கிய ஆவி வடிவிலான நீர், ஐஸ் துணுக்குகள் வடிவிலான நீர், நுண்ணிய நீர்த்துணுக்குகள் வடிலான நீர் ஆகியவை பற்றி விரிவான தகவல்களை சேகரித்து அனுப்பும். 

    மேகக் கூட்டங்களின் நடமாட்டம் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். அந்த அளவில் தென் மேற்குப் பருவ மழை, வடகிழக்குப் பருவ மழை பற்றி நாம் மேலும் நன்கு தகவல் பெற முடியும்.
   
     இந்தியாவின் மிக நம்பகமான PSLV ராக்கெட் மேகடிராபிக்ஸ் செயற்கைக்கோளைச் செலுத்தும். இது பொதுவில் ஒன்றரை டன் எடை சுமந்து செல்லக் கூடியது.  மேகடிராபிக்ஸ் செயற்கைக்கோளின் எடை போக மேலும் சுமக்க முடியும் என்பதால் மூன்று சிறிய செயற்கைக்கோளையும் உடன் வைத்துச் செலுத்த இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment