Pages

Oct 12, 2011

இளைத்துப் போன சந்திரனை இன்று இரவு காணலாம்

இன்று பௌர்ணமி. ஆகவே இன்று இரவு சந்திரன் முழு நிலவாகக் காட்சி அளிக்கும். ஆனால் ஒரு வித்தியாசம்.  நீங்கள் காண்பது இளைத்துப் போன சந்திரனாக இருக்கும். இந்த ஆண்டின் மற்ற பௌர்ணமிகளை விட சந்திரன் இன்று சிறியதாகக் காணப்படும். இதற்குக் காரணம் இந்தப் பௌர்ணமியின் போது பூமியிலிருந்து சந்திரன் அதிகத் தொலைவில் இருக்கும் என்பதே.

சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது.   சந்திரனின் சுற்றுப்பாதை மட்டும் மிகச சரியான வட்டமாக இருக்குமானால் பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை சற்றே நீள் வட்டமாக உள்ளது இதன் விளைவாக சந்திரன் ஒரு சமயம் பூமிக்கு அருகில் இருக்கும். அதை ஆங்கிலத்தில் Perigee என்பார்கள்.  வேறு ஒரு சமயம் பூமியிலிருந்து அதிகத் தொலைவில் இருக்கும். அது Apogee. அருகே படம் காண்க. இன்று இரவு பூமியிலிருந்து சந்திரன் 4,06,434 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்.
சந்திரனின் சுற்றுபாதை


இத்துடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பௌர்ணமியன்று பூமியிலிருந்து சந்திரன் மிக அருகில் --3,56,571 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. ஆகவே சந்திரன் பெரிதாகக் காட்சி அளித்தது. அன்று தெரிந்த முழு நிலவை ‘ மகா பௌர்ணமி’ (Super Moon) என்று வருணித்தார்கள்.


மகாபௌர்ணமி சந்திரனுடன் ஒப்பிட்டால் இன்றைய முழு நிலவு -- அளவில்-- 12.5 சதவிகிதம் சிறியதாகத் தெரியும். சற்றே தொலைவில் இருப்பதால் பௌர்ணமி நிலவின் ஒளியும் 20 சதவிகிதம் குறைவாக இருக்கும்.

மேலே உள்ள படத்தைக் காணவும் சந்திரன் அருகாமையில் இருந்த போது எடுத்த புகைப்படமும் அதிகத் தொலைவில் இருந்த போது எடுத்த புகைப்படமும் ஒரே படமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று இரவு சந்திரன் எந்த அளவு சிறியதாக இருக்கும் என்பதை இப்படத்தைப் பார்த்து அறியலாம்.

சந்திரன் இப்போது அதிகத் தொலைவில் உள்ளதால் பூமியில் விளைவுகள் உண்டா? கடல்களில் வேலை ஏற்றம், வேலை இறக்கம் (Tides)  ஆகிய இரண்டும் சந்திரன் செலுத்தும் ஈர்ப்பு சக்தியால் ஏற்படுபவை. இன்று சந்திரன் தொலைவில் இருப்பதால் வேலை ஏற்றம் வேலை இறக்கம் இரண்டும் சற்றே குறைவாக இருக்கும்.

No comments:

Post a Comment