Pages

Oct 1, 2011

சிக்கிமில் பூகம்பம் ஏற்பட்டது ஏன்?

    அண்மையில் இமயமலையின் தென் புறத்தில் அமைந்த சிக்கிம் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டுப் பலர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியத் துணைக் கண்டம் காரணம். எப்படி? பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக்கண்டம், மடகாஸ்கர் தீவு, அண்டார்டிகா, ஆப்பிரிக்கா முதலான கண்டங்கள் ஒன்று சேர்ந்து ஒரே கண்டமாக இருந்தன. தென் அமெரிக்கக் கண்டம் ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடல் அப்போது கிடையாது.


    ஒரு கால கட்டத்தில் கண்டங்கள் நகர ஆரம்பித்தன. சரியாகச் சொல்வதானால் பூமியின் மேற்பரப்புக்கு அடியில் அமைந்த சில்லுகள் நகர ஆரம்பித்தன. ஒரு சில்லு என்பது பல ஆயிரம் கிலோமீட்டர் நீள அகலமும் பல நூறு மீட்டர் தடிமனும் கொண்ட பிரும்மாண்டமான பாறைப் பாளங்கள். இந்தியச் சில்லு மீது தான் இந்தியத் துணைக் கண்டமும் இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளும் அமைந்துள்ளன.

   ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையிலிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பிய இந்தியச் சில்லு வட கிழக்கு நோக்கி மெல்ல நகர்ந்து பல கோடி ஆண்டுக்காலம் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவும் மத்திய ஆசிய நாடுகளும் அமைந்த யூரேசியச் சில்லுடன் ஒட்டிக் கொண்டது. யுரேசிய சில்லுவை இந்தியச் சில்லு மேலும் மேலும் நெருக்கிய போது விளிம்புகள் புடைத்துக் கொண்டு மேலெழும்பின. அதுவே இமயமலை. யுரேசிய சில்லுவை இந்தியச் சில்லு இன்னமும் நெருக்குவதால் இந்தியாவில் இமயமலையை ஒட்டி அமைந்த உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம், அஸ்ஸாம், சிக்கிம் முதலான மாநிலங்களில் அவ்வப்போது பூகம்பம் நிகழ்கிறது. சில சமயங்களில் இது மிகக் கடுமையாக அமைவதுண்டு.

   பூமியைப் பிரதானமாக ஏழு சில்லுகள் போர்த்துள்ளன. சிறிய சில்லுகள் நிறையவே உள்ளன. சில்லுகள் எல்லாமே நகர்ந்து கொண்டிருக்கின்றன. சில இடங்களில் இரு சில்லுகள் உரசிச் சில்லும்.வேறு சில இடங்களில் ஒரு சில்லு மற்றொரு சில்லுக்கு அடியில் புதையுண்டு போகும். உதாரணமாக இந்தியச் சில்லுவின் கிழக்குப் பகுதி பர்மா சில்லுக்கு அடியில் புதைகிறது. சில்லுகள் புதையுண்டு போகும் இடங்களில் கடும் பூகம்பம் உண்டு. சுனாமி உண்டு. எரிமலைகளும் உண்டு. இந்தோனேசியாவில் நிறைய எரிமலைகள் உள்ளதற்கு அங்கு புதையுண்டு போகும் சில்லுகள் அதிகம் இருப்பதே காரணம். ஜப்பானின் கதையும் அது போன்றதே.

1 comment:

  1. "இந்தோனேசியாவில் நிறைய எரிமலைகள் உள்ளதற்கு அங்கு புதையுண்டு போகும் சில்லுகள் அதிகம் இருப்பதே காரணம். ஜப்பானின் கதையும் அது போன்றதே."

    வருத்தமான செய்தி :(

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete