நிருபர் : நிச்சயம் கடும் பூகம்பம் வ்ராதுன்னு சொல்றீங்க. ஆக, எல்லாரும் வீட்டுக்குப் போய் ஒயின் பாட்டலை உடைச்சி ஜாலியா இருக்கலாம் .இல்லையா?
அதிகாரி: ஆமா, கவலையே இல்லை. சாதாரண ஒயின் பாட்டில் என்ன, ஸ்பெஷல் ரகத்தையே வச்சுக்கலாம்.
அந்த அதிகாரி என்பவர் ஏழு பேர் அடங்கிய நிபுணர் குழுவின் துணைத் தலைவர். மற்ற 6 பேரும் விஞ்ஞானிகள். பூகம்ப இயல், எரிமலை இயல் ஆகிய துறைகளில் வல்லுநர்கள். இத்தாலியைச் சேர்ந்த அந்த நிபுணர்கள் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டவர்கள். அந்த நிபுணர்கள் சார்பில் தான் அந்த அதிகாரி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.பேட்டி 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 தேதி நடந்தது. பேட்டி நடந்த இடம் இத்தாலியில் ஒரு மாகாணத் தலைநகரான லாகுவில்லா.
இததாலி பொதுவில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுகின்ற நாடு. அந்த அளவில் லாகுவில்லா நகரும் பூகம்பப் பிராந்தியமே .லாகுவில்லாவில் தொடர்ந்து பல மாத காலம் லேசான நில அதிர்வுகள் இருந்த பின்னணியில் தான் மேற்படி பேட்டி நடந்தது. பேட்டி நடந்த சில நாட்களுக்குப் பிறகு அதாவது ஏப்ரல் 6 ஆம் தேதி கடும் பூகம்பம் (ரிக்டர் அளவு கோலில் 6.3) ஏற்பட்டது. 300 பேர் பலி. 20 ஆயிரம் வீடுகள் தரை மட்டம்.
பேட்டி அளித்த அதிகாரி, மற்றும் 6 விஞ்ஞானிகள் மீது இப்போது வழக்கு நடைபெற்று வருகிறது. தவறான, தெளிவற்ற, முரண்பட்ட தகவல்களை அளித்ததன் மூலம் 300 பேர் உயிரிழக்க அவர்களே காரணம்.அவர்களுக்கு தண்டனை அளிப்பதுடன் 3 கோடி டாலர் நஷட ஈடு தரவும் உத்தரவிட வேண்டும் என்று வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளுக்கு எதிராக கோர்ட் தீர்ப்பளித்தால் அதிகாரி உட்பட அந்த ஏழு பேருக்கும் 15 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
இந்த வழக்கு உலகெங்கிலும் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பூகம்பம் எந்த இடத்தில் எந்தத் தேதியில் எத்தனை மணிக்கு ஏற்படும் என்று யாராலும் முன்கூட்டிக் கணித்துக் கூற இயலாது. பூகம்ப இயல் இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை. கடந்த கால வரலாற்றில் ஒரே ஒரு தடவை தான் பூகம்பம் பற்றி சரியாகக் கணித்துக் கூறப்பட்டது. சீனாவின் ஹாய்செங் நகரை கடும் பூகம்பம் தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு அந்த நகரிலிருந்து பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மறு நாளே அதாவது 1975 பிப்ரவரி 4 ஆம் தேதி ( ரிக்டர் அளவில் 7.3 ) க்டும் பூகம்பம் தாக்கியது. அப்படிச் செய்திராவிட்டால் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மடிந்திருப்பர். ஹாய்செங் வட்டாரத்தில் இயற்கையாகக் காணப்பட்ட பல விப்ரீத அறிகுறிகளை வைத்துத் தான் இக் கணிப்பு செய்யப்பட்டது.
லாகுவில்லா பூகம்ப விஷயத்தில் விஞ்ஞானிகள் ஒரு தப்பு செய்து விட்டதாகக் கூறலாம். வானிலை அறிக்கைகளில், “ இங்குமங்குமாக மழை இருக்கலாம். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். பிற இடங்களில் வறண்ட வானிலை இருக்கலாம் “ என்று மழுப்பலாகக் கூறப்படுவதைப் போல இத்தாலிய நிபுணர்கள், “ ஒரு வேளை கடும் பூகம்பம் ஏற்படலாம், அப்படி ஏற்படாமலும் போகலாம் “ என்று கூறியிருந்தால் இப்போது கூண்டில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிராது.
No comments:
Post a Comment