Oct 1, 2011

அமெரிக்க செயற்கைக்கோளை பத்திரமாக இறக்கியிருக்க முடியுமா?

Share Subscribe
அமெரிக்காவின் 6 டன் எடை கொண்ட யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைகோள் — அதாவது அதன் துண்டுகள் — செப்டம்பர் 24-ம் தேதி சனிக்கிழமை பசிபிக் கடலில் வந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயறகைக்கோள் எங்கு வந்து விழுமோ என்பது குறித்து கடந்த சில நாட்களாக அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் செய்தி ஊடங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகின.


     பூமியைச் சுற்றுகின்ற ஒரு செயற்கைக்கோள் காற்று மண்டலத்துக்கு மேலாகத் தான் அமைந்திருக்கும். ஏதோ காரணத்தால் அது காற்று மண்டலத்தில் நுழையும் போது தீப்பிடித்து அதன் பல பகுதிகள் முற்றிலுமாக அழிந்து விடலாம். எனினும் பெரிய துண்டுகள் கீழே வந்து விழ வாய்ப்பு எப்போதும் உள்ளது. ஒரு பெரிய துண்டு கீழே தரையில் வந்து விழுவதாக வைத்துக்கொண்டால் அது வந்து விழும் வேகம் மணிக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டராகக் கூட இருக்கலாம்.அப்படியான வேகத்தில் விழுகின்ற துண்டு கணிசமான சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இது வரை செயற்கைகோள் துண்டுகள் யார் தலையிலும் வந்து விழுந்தது கிடையாது என்றாலும் அந்த ஆபத்து இல்லாமல் இல்லை.

  ஒரு செயற்கைக்கோளை யாருக்கும் தீங்கில்லாமல் கடலில் வந்து விழும்படி செய்ய முடியும். அதற்கு முன்கூட்டி திட்டமிட முடியும். அதற்கு அச்செயற்கைக்கோளில் போதுமான எரிபொருள் இருக்க வேண்டும். அத்துடன் அந்த செயற்கைக்கோள் பூமியின் காற்று மண்டலத்துக்குள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட கோணத்தில் நுழையும்படி செய்ய வேண்டும். இதற்கென அச்செயறகைக்கோளில் சில செண்டிமீட்டர் நீள அகலம் கொண்ட பல சிறிய ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படியான ஏற்பாடு இருக்குமானால் அந்த செயற்கைக்கோளை அச்சிறிய ராக்கெட்டுகள் மூலம் இயக்கி பசிபிக் கடலின் தென்பகுதியில் கப்பல் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் வந்து விழும்படி செய்ய முடியும்.  

  பூமியை 1986-ம் ஆண்டிலிருந்து 15 ஆண்டுக்காலம் சுற்றிச் சுற்றி வந்த   ”மிர்” விண்கலத்தை கைவிடுவதென ரஷியா முடிவு செய்த பின் 135 டன் எடை கொண்ட அந்த விண்கலத்தை ரஷிய நிபுணர்கள் நன்கு திட்டமிட்டு  2001 மார்ச் 23-ம் தேதி பசிபிக் கடலில் வந்து விழும்படி செய்தனர்.  அது காற்று மண்டலத்தில் நுழைந்த போது பெரும் பகுதி அழிந்து போயிற்று. கடைசியில் சுமார் 20 டன் எடை அளவிலான துண்டுகள் பசிபிக்கில் வந்து விழுந்தன. ரஷியா ஆரம்ப முதலே இவ்வித ஏற்பாட்டை செம்மையாக்கிக் கொண்டது. ஆகவே தான் 1978 முதல் ரஷியாவின் 80க்கும் மேற்பட்ட பெரிய விண்கலங்கள் திட்டமிட்ட ரீதியில் பசிபிக்கின் அப்பகுதியில் வந்து விழுந்தன. பசிபிக்கின் அந்த கடல் பகுதிக்கு "செயற்கைக்கோள்களின் மரணக் கிணறு" என்று பெயர் ஏற்பட்டதில் வியப்பில்லை.

     செயற்கைக்கோளை செலுத்தும் போதே அது பின்னர் கடலில் வந்து விழுதற்கான வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என  செயற்கைக்கோள்களை செலுத்தும் நாடுகளிடையே ஓர் உடன்பாடு ஏற்பாட்டை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment