Oct 2, 2011

சீனாவின் வானுலக மாளிகை

Share Subscribe
    சீனாவுக்குப் பெரிய ஆசை உண்டு. அதாவது தற்போது தன்னிகரற்ற பெரு வல்லரசாக விளங்கும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தைக் கைப்பற்ற சீனா விரும்புகிறது.  அந்த முனைப்பில் தான் சீனா இப்போது தனது விண்வெளி நிலையத்தை உயரே செலுத்தியுள்ளது.


    சீனாவின் ராட்சத ராக்கெட் மூலம் செப்டம்பர் 29 ஆம் தேதியன்று உயரே செலுத்தப்பட்டுள்ள அந்த விண்கலத்தின் பெயர் டியன்கங்-1 (Tiangong-I). சீன மொழியில் டியன்கங் என்றால் “வானுலக் மாளிகை"  என்று அர்த்தம்.


    மாளிகை என்ற மாத்திரத்தில் ஏதோ பெரிய கட்டுமானம் என்று நினைத்து விட வேண்டாம்.  அது இரண்டு அல்லது மூன்று சீன விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கியிருப்பதற்கான விண்கலம்.  அந்த விண்கலம் பல ஆண்டுக்காலம் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும். அவ்வளவு தான்.

டியன்கங்-1 (Tiangong-I)

    விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி நடத்துவதற்கான் விண்கலத்தை செலுத்தும் திறன் படைத்த நாடுகளில் சீனா இப்போது மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. சோவியத் யூனியன் (இப்போதைய ரஷியா) தான் முதன் முதலில் – 1971 ஆம் ஆண்டில் விண்வெளி நிலையத்தைச் செலுத்தியது. அதன் பெயர் சல்யூட். எடை 18 டன். பின்னர் அமெரிக்கா 1973 ஆம ஆண்டில் ஸ்கைலாப் எனப்படும் தனது விண்வெளி நிலையத்தைச் செலுத்தியது. அதன் எடை 77 டன். பின்னர் ரஷியா 1986 ஆம் ஆண்டில் செலுத்திய மிர் எனப்படும் விண்வெளி நிலையத்தின் எடை 129 டன்.
    
    ஆனால் சீனா இப்போது அலங்காரமான பெயரில் செலுத்தியுள்ள வானுலக மாளிகையின் எடை வெறும் எட்டு ட்ன். இது பூமியிலிருந்து சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வரத் தொடங்கியுள்ளது.  இப்போதைக்கு இதில் விண்வெளி வீரர் யாரும் இல்லை. விரைவில் வேறு விண்கலங்கள் மூலம் சீன விண்வெளி வீரர்கள் மூவர் வானுலக மாளிகைக்கு அனுப்பப்படுவர்.

    எனினும் சீனாவின் முயற்சியைக் குறைத்து மதிப்பிட்டு விட் முடியாது. வருகிற ஆண்டுகளில் மேலும் மேலும் பகுதிகளைச் செலுத்தி அவற்றை வானுலக் மாளிகையுடன் இணைத்து அதை விரிவு படுத்துவது சீனாவின் திட்டமாகும். 2020 ஆம் ஆண்டு வாக்கில் இந்த விண்கலத்தை  60 டன் எடை கொண்ட பெரிய விண்கலமாக மாற்ற சீனா உத்தேசித்துள்ளது.

    சீனா முதல் தடவையாக 2003 ஆம் ஆண்டில் தனது ஷென்சு விண்கலம் மூலம் சீன விண்வெளி வீரர் ஒருவரை உயரே அனுப்பியது. 2005 ஆம் ஆண்டில் இருவர் அடங்கிய விண்கலத்தைச் செலுத்தியது. 2008 ல் அனுப்பப்பட்ட சீன விண்கலத்தில் மூவர் சென்றன்ர்.

    அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான் முதலான நாடுகள் கூட்டாக செயல்பட்டு உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம் ஏற்கெனவே விண்வெளியில் செயல்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சம் 6 நிபுணர்கள் தங்கி ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். 1998 ல் உயரே செலுத்தப்பட்டுப் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்ட இந்த விண்வெளி நிலையத்தின் எடை 450 டன். இந்த சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் போட்டியாக விண்வெளி நிலையத்தை அமைக்கும் வேலையில் சீனா இப்போது ஈடுபட்டுள்ளதாகத் தோன்றினாலும் உண்மை நோக்கம் வேறு. தனது விண்வெளி நிலையத்திலிருந்து கீழே வேவு பார்ப்பதே சீனாவின் நோக்கமாகத் தெரிகிறது. தவிர, உலக நாடுகளிடையே தங்கள் மீதான மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் சீனா விரும்புகிறது.
  
    சீனாவுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலைமை என்ன? இந்தியாவின் GSLV  ராக்கெட் இன்னும் செம்மையாக்கப்படாத நிலையில் PSLV ராக்கெட்டை நாம் நம்பி நிற்கிறோம். இந்த ராக்கெட் பல சாதனைகளைப் புரிந்துள்ள போதிலும் இதன் மூலம் அதிகபட்சம் ஒன்றரை டன் செயற்கைகோள்களை மட்டுமே உயரே செலுத்த இயலும். இந்தியா GSLV Mark III  என்னும் மேம்பட்ட ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இது 10 டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியது. இந்த ராக்கெட் அனேகமாக அடுத்த ஆண்டில் முதல் தடவையாக செலுத்தப்பட்டு சோதிக்கப்படலாம். இது வெற்றியாக அமைந்தால் இந்த ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர் ஒருவரை உயரே அனுப்புவது தான் இந்தியாவின் முதல் வேலையாக இருக்கும்.

4 comments:

venusrinivasan said...

அன்பு நண்பர் ராமதுரை அவர்களுக்கு உங்கள் கட்டுரைகளை நான் அறிவியல்மணியில் படித்திருக்கிறேன். அருமையான தகவல்களை சுவையாக தருகிறீர்கள் பாராட்டுக்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

//// சோவியத் யூனியன் (இப்போதைய ரஷியா) தான் முதன் முதலில் – 1971 ஆம் ஆண்டில் விண்வெளி நிலையத்தைச் செலுத்தியது. அதன் பெயர் சல்யூட். எடை 18 டன். பின்னர் அமெரிக்கா 1973 ஆம ஆண்டில் ஸ்கைலாப் எனப்படும் தனது விண்வெளி நிலையத்தைச் செலுத்தியது. அதன் எடை 77 டன். பின்னர் ரஷியா 1986 ஆம் ஆண்டில் செலுத்திய மிர் எனப்படும் விண்வெளி நிலையத்தின் எடை 129 டன்.///

இதில் International Space Station ஐ விட்டுவிட்டீர்களே. அதன் எடை, மற்ற விவரங்களையும் தரலாமே. இப்போது ஆக்டிவ் அக இருக்கும் ஸ்பேஸ் லாப் அது மட்டுமே.

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
International Space Station பற்றி அப்பதிவில் குறிப்பு உள்ளது.அது சர்வதேச விண்வெளி நிலையம் என்பதாகத் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் பற்றிப் பின்னர் தனியாக ஒரு பதிவு வெளியாகலாம்,

என்.ராமதுரை / N.Ramadurai said...

kassali
தாங்கள் கேட்கின்ற தகவல்கள் அனைத்தையும் அளிப்பது என்றால் தனி புத்தகமே எழுத வேண்டியிருக்கும்.
இந்த ஆண்டு அக்டோபர் நிலவரப்படி உலகில் சுமார் 404 இணை சுற்று செயற்கைக்கோள்கள் ( Geo-stationary Satellites) உள்ளன

Post a Comment