Oct 30, 2011

வியாழனை கிழக்கு வானில் காணலாம்

Share Subscribe
"வியாழன் கிரகத்தைப் பூமியிலிருந்து இன்று காணலாம்" என அண்மையில் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் செய்தி வெளியாகியது. இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ’ பூமிக்கு அருகில் வியாழன் வந்துள்ளதாகக்’ கூறியது .இப்படியாக வியாழன் கிரகம் பத்திரிகைகளில் அடிபட்டது.

உள்ளபடி வியாழன் கிரகத்தை வருகிற நாட்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கிழக்குத் திசையில் காணலாம். அஸ்தமன சமயத்தில் மட்டுமே தெரியும் என்று நினைத்து விட வேண்டாம். இரவில் விடிய விடிய் எப்போது வேண்டுமானாலும் காணலாம். இரவு ஆக ஆக வியாழன் வானில் உச்சிக்குப் போய்விடும்.



வானில் வியாழன் பெரிய ஒளிப் புள்ளியாகத் தெரியும். ஆனால் நட்சத்திரம் போல ஜொலிக்காது. காரணம் வியாழனுக்கு சுய ஒளி கிடையாது.   அலுமினியத் தகட்டின் மீது ஒளி பட்டால் அந்த ஒளியை அலுமினியம் பிரதிப்பலிப்பதைப் போலவே கிரகங்கள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கின்றன். நட்சத்திரங்களுக்கு சுய ஒளி உள்ளதால் வானில் அவை ஜொலிக்கின்றன.

இரவு வானில் நாம் வெறும் கண்ணால பார்க்கக்கூடிய ஐந்து கிரகங்களில் வெள்ளி (சுக்கிரன்) மட்டுமே மிகப் பிரகாசமாகத் தெரியக்கூடியதாகும்.. வியாழன் அடுத்த இடத்தை வகிக்கிறது. செவ்வாய் மூன்றாவது இடம்.சனி கிரகத்தையும் வெறும் கண்ணால் பார்க்கலாம். புதன் கிரகம் எளிதில் தென்படாது. யுரேனஸ்,  நெப்டியூன் ஆகியவற்றை டெலஸ்கோப் மூலமே காண முடியும்.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது.வியாழன் கிரகத்துக்கு குரு என்ற பெயரும் உண்டு.வியாழன் கிரகத்தைப் பெரிய பானையாகக் கற்பனை செய்து கொண்டால் அதனுள் 1300 பூமிகளைப் போட்டு அடைத்து விடலாம். இதிலிருந்து வியாழன் எவ்வளவு பிரும்மாண்டமானது என்பதை உணரலாம்.

பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் உள்ளது.வியாழன் கிரகத்துக்கு 64 சந்திரன்கள் உள்ளன. இவற்றில் நான்கு தான் பெரியவை.மற்ற அனைத்தும் மிகவும் சிறியவை.
  இடது புறம் வியாழன் கிரகம். அருகே உள்ளது பூமி

வியாழன் கிரகம் ஒரு பெரிய பனி உருண்டை. வியாழன் சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதால் சூரியனின் வெயில் வியாழனில் உறைக்காது. ஆகவே தான் எல்லாமே உறைந்து வியாழன் பனிக்கட்டி உருண்டையாக இருக்கிறது. வியாழனை நெருங்கி ஆராய ஆளில்லா விண்கலங்கள் பலவும் அனுப்பப்பட்டு வியாழ்னைப் பற்றி நிறைய தகவலகள் பெறப்பட்டுள்ளன.

வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் உள்ளன். வானை நாம் 12 ராசி மண்டலங்களாகப் பிரித்துள்ளதால் வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றி வருகையில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ராசியாகக் கடந்து வரும். இதைத் தான் குருப் பெயர்ச்சி என்கிறார்கள்.   வியாழன் இப்போது மேஷ ராசியில் உள்ளது ( சூரியன் துலா ராசியில் உள்ளது)

அக்டோபர் 29 ஆம் தேதியன்று பூமி நடுவே இருக்க வியாழன், பூமி, சூரியன் ஆகியவை நேர்கோட்டில் அமைந்திருந்தன. அதாவது வியாழன் எதிர்மானத்தில் (Opposition) உள்ளது. இப்படி அமைந்துள்ள நிலைமைகளில் வியாழன் கிரகத்துக்கும் பூமிக்கும் உள்ள தூரம் மற்ற சமயங்களை விடக் குறைவாக இருக்கும்.
 படத்தில் பிற கிரகங்கள் காட்டப்படவில்லை
Not to scale


 மாறாக சூரியன் நடுவே அமைந்திருக்க பூமி, சூரியன், வியாழன் ஆகிய மூன்றும் அந்த வரிசையில் நேர்கோட்டில் இருக்குமானால் வியாழன் கிரகம் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும்.

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர். வியாழன் கிரகம் இப்போது பூமியிலிருந்து  இதைப் போல சுமார் 4 மட்ங்கு தொலைவில் உள்ளது. அதாவது பூமியிலிருந்து வியாழன் இப்போது சுமார் 60 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

நீங்கள் சூரிய அஸ்தமனத்துக்கு பிற்கு கிழக்கு வானில் வியாழனைப் பார்த்து விட்டு மேற்குத் திசையை நோக்கினால் வெள்ளி கிரகம் தெரியலாம். அக் கிரகம் சுமார் 8 மணி வாக்கில் மேற்கே அஸ்தமித்து விடும் என்பதால் அதற்கு முனபாக மேற்கு வானைக் கவனிக்க வேண்டும். இப்போது மேற்கு வானில் மிகப் பிரகாசமாக இருப்பது அது ஒன்றுதான்.

No comments:

Post a Comment