எலெனின் சென்ற பாதை |
இதே இந்த வால் நட்சத்திரம் பூமியைத் தாக்கி பெரு நாசத்தை உண்டாக்கப் போவதாகவும் இந்த வால் நட்சத்திரம் தாக்குவதால் மனித குலமே அழியப்போவதாகவும் மேற்கத்திய நாடுகளில் ஒரு கும்பல் அபாயச் சங்கு ஊதி வந்தது. ‘மனித குலம் அழியப் போகும் தேதி வந்தாச்சு’ என்று அடிக்கடி பீதி கிளப்புகிற அதே கும்பல் தான் இப்படி ஒரு பெரும் புரளியைக் கிளப்பி விட்டது.
விஷயம் தெரியாத பலர் இப்புரளியை நம்பி வந்தனர் என்ற காரணத்தால் தான் நாஸா ‘இனி கவலையில்லை’ என அறிவிப்பு விட வேண்டி வந்தது.எலெனின் வால் நட்சத்திரம் ஆகஸ்ட் கடைசி வாக்கிலேயே உடையத் தொடங்கியது. வானில் அந்த வால் நட்சத்திரம் இருக்க வேண்டிய இடத்தை அண்மையில் படம் எடுத்த போது வால் ந்ட்சத்திரம் அழிந்ததால் ஏற்பட்ட நுண்ணிய துகள்கள் மெல்லிய புகைப்படலமாகக் காட்சியளித்தன்
எலெனின் அழியாமல் இருந்திருக்குமானால் அக்டோபர் 16 ஆம் தேதி அதற்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மூன்றரைக் கோடி கிலோ மீட்டராக இருந்திருக்கும். அந்த வால் நட்சத்திரம் அழிந்து போயிருந்தாலும் எதிர்காலத்தில் அதன் நுண்ணிய துணுக்குகள் தேனீக் கூட்டம் போல அதே பாதையில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும்.
எலெனின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி |
வால் நட்சத்திரம் என்பது கல், மண் பாறை, பனிக்கட்டி உருண்டை போன்றவற்றால் ஆனது. பொதுவில் ஒரு வால் நட்சத்திரம் பனிக்கட்டி உருண்டையே. வால் நட்சத்திரம் ஒன்று சூரிய மண்டல எல்லைக்கு அப்பாலிருந்து சூரியனை நோக்கி வரும். அப்படி வரும் போது ‘சூரியக் காற்று’ என்று சொல்லப்படும் ஆற்றல் மிக்க துகள்கள் தாக்கி வால் நட்சத்திரத்திலிருந்து நுண்ணிய துகள்கள் பின்னோக்கி வெளியே தள்ளப்படும்.
எலெனின் செப்டம்பர் முதல் தேதி |
இந்த நுண்துகள்கள் மீது சூரிய ஒளி படும் போது அவை வால் போன்று காட்சி அளிக்கும். வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி முடித்த பின்னர் வந்த இடம் நோக்கி திரும்பிச் செல்லும். கடந்த காலத்தில் சூரியனை நெருங்குகையில் பல வால் நட்சத்திரங்கள் உடைந்துள்ளன; அல்லது ஏராளமான பொருளை இழந்து சிறுத்துப் போயுள்ளன.
அருகே வலது புறம் உள்ள படத்தை உற்று கவனித்தால் எலேனின் வால் நட்சத்திரம் மெல்லிய படலமாகத் தெரியும். எலெனின் சிதைந்து உருக்குலைந்து போனதை இது காட்டுவதாகச் சொல்லலாம்.
ஒரு வால் நட்சத்திரத்தை சிதைக்க சூரியன் கூடத் தேவையில்லை.சூரியனை நோக்கி வருகையில் வியாழன் கிரகத்தைத் தாண்டி வரும் போது அக்கிரகத்தின் ஈர்ப்பு சக்தி காரணமாக இரண்டாக உடைந்து போன வால் நட்சத்திரங்கள் உண்டு.
பூமியைத் ‘தாக்க வரும்’ எலெனின் வால் நட்சத்திரம் உண்மையில் வால் நட்சத்திரமே அல்ல என்றும் அது நிபுரு என்னும் பெயர் கொண்ட கிரகம் என்றும் மனித குலத்துக்கு மரணத் தேதி அறிவித்தவர்கள் கதை கூறி வந்தனர். கடைசியில் கட்டுகதை தகர்ந்து போய்விட்டது. 2012 ஆம் ஆண்டில் மனித குலம் அழிந்து விடும் என்று சொல்லப்படுவது இது முதல் தடவை அல்ல.
படத்தில் ஒளிப்புள்ளியாகத் தெரிவது ஒரு நட்சத்திரம் அதற்கு மேலே மங்கலாகத் தெரிவது தான் எலெனின் வால் நட்சத்திரம் இருந்த இடம் |
இந்தியப் புராணப்படியும் இப்போது நடக்கின்ற கலியுகம் முடிந்த பின்னர் உலகமே அழிந்து விடும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. ’பாம்பு’ பஞ்சாங்கப்படி கலியுகம் முடிய சரியாக இன்னும் 4 லட்சத்து 26 ஆயிரத்து 888 ஆண்டுகள் உள்ளன. ஆகவே கவலை வேண்டாம்.
2 comments:
ராமதுரை,
இந்தியாவில அதிகம் கண்டுக்கொள்ளப்படாத செய்தி, ஆனாலும் மிக விளக்கமாக செய்தியைதொகுத்துள்ளீர்கள்.நன்று!
நம்ம மக்கள் இன்னும் வேலாயுதம், 7 அம் அறிவு போதை தீரவில்லை, அதெல்லாம் பேசி முடிந்த பின்னர் இத பத்தி கவலைப்படுவாங்களாயிருக்கும்.
அப்புறம் யுகங்களுக்கு ஆண்டு கணக்கு சொல்றிங்க இல்லையா அதுல நிறைய மாறுப்பட்ட கருத்து இருக்கு. சிலர் ஆயிரக்கணக்கில் மட்டுமே சொல்றாங்க.மஹாபாரதத்தின் போதே கலியுகம் ஆரம்பித்துவிட்டதாம் இப்போ பாதி கலியுகம் தாண்டியாச்சாம்
Good ans
Post a Comment