Pages

Oct 22, 2011

சூரியனின் முகத்தில் கரும்புள்ளிகள்

சூரியனின் முகத்தில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.  அவ்வப்போது அது தனது சீற்றத்தைக் காட்டுகிறது. சூரியனுக்கு இது கோபாவேச சீசன். காரணம் சூரியனில் தோன்றியுள்ள கரும்புள்ளிகள்.

விஞ்ஞானிகள் பயன்படுத்தும் விசேஷக் கருவிகள் மூலம் பார்த்தால் சூரியனில் நிறையக் கரும்புள்ளிகள் (Sun Spots) தெரிகின்றன (சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முயலக்கூடாது. கண் பார்வை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது).

 அக்டோபர் 4 ஆம் தேதி சூரியனில் 126 கரும்புள்ளிகள் காணப்பட்டன. இந்த மாதம் 21 ஆம் தேதி கரும்புள்ளிகளின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்தது. கரும்புள்ளிகள் அதிகரிக்கும் போது தான் சூரியனின் குணம் மாறுகிறது.

 கரும்புள்ளி என்றால் அது கருப்பான புள்ளி அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் நமக்குக் கரும் புள்ளியாகத் தெரிகிறது. கரும்புள்ளியைச் சுற்றி உள்ள இடத்தில் வெப்பம் 6000 டிகிரி செண்டிகிரேட் என்றால் கரும்புள்ளி உள்ள இடத்தில் வெப்பம் சுமார் 4200 டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு இருக்கலாம்.

சூரிய ஒளித் தட்டின் ஒரு பகுதியில்
கரும்புள்ளிகள்
 பூமியிலிருந்து பார்த்தால் சிறியதாகத் தெரிகிறதே தவிர, மற்றபடி ஒரு கரும் புள்ளிக்குள் பூமியைப் போட்டு நிரப்ப முடியும். சூரியனில் தென்படும் கரும் புள்ளிகள் நிரந்தரமானவை அல்ல. சில நாட்களில் மறைந்து விடலாம். சூரியனில் கரும்புள்ளிகளே இல்லாத கட்டம் ஏற்படுவது உண்டு. கரும் புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகிற கட்டமும் உண்டு. இதில் ஒரு வகையான கால ஒழுங்கு உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து ஆரம்பித்தது. சுமார் ஐந்து ஆண்டுக் காலம் இவ்விதம் அதிகரித்துக் கொண்டே போகும்.பின்னர் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே இராது. இப்படியாக ஒரு சுற்று முடிவடைவதற்கு சராசரியாக 11 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கரும்புள்ளிக் காலவட்டம் (SunSpot Cycle) என்று குறிப்பிடுகிறார்கள்.
கரும்புள்ளிகளின் எண்ணிக்கை
ஏறுவதையும் இறங்குவதையும் இந்த
வரிவடிவப் படம் காட்டுகிறது.

கரும்புள்ளிகள் அதிகரித்து வரும் காலத்தில் கூட கரும்புள்ளிகளின் எண்ணிக்கை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும். கரும் புள்ளிகள் தனித்தனியே இருக்கின்ற அதே நேரத்தில் ஒரே இடத்தில் பல கரும்புள்ளிகள் அடை அடையாக இருக்கும். இவ்விதம் பல இடங்களில் இருக்கும்.

 கரும்புள்ளிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் உலகில் இரு அமைப்புக்ள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தனி பார்முலா அடிப்படையில் கரும் புள்ளிகளைக் கணக்கிடுகின்றன. மேலே கரும்புள்ளிகள் பற்றி அளிக்கப்பட்ட தகவல் அமெரிக்க NOAA அமைப்பின் ஒரு பிரிவு தெரிவித்ததாகும்.

கரும்புள்ளிகள் அதிகரித்துக் காணப்படும் கால கட்டத்தில் சூரியனில் ஏற்படும் கிளர்வுகள் பூமியை-- மனிதனின் பல செயல்பாடுகளைப் பாதிக்கின்றன். ஆகவே தான் நிபுணர்கள் சூரியன் மீது ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.விசேஷ செயற்கைக்கோள்களும் சூரியனைத் தொடர்ந்து கவனித்து தகவல்களை அளிக்கின்றன.

2 comments:

  1. Nice information.Very interesting.Please keep writing.

    ReplyDelete
  2. மிக முக்கியமான பதிவு

    ReplyDelete