படம் : Courtesy of British Antarctic Society |
தென் துருவப் பகுதியில் உள்ள அண்டார்டிகா என்னும் கண்டம் கிட்டத்தட்ட முற்றிலுமாகப் பனிக்கட்டியால் மூடப்பட்டதாகும். எங்கு நோக்கினாலும் உறைபனிதான் தென்படும். இது மனிதர் வாழ லாயக்கற்ற கண்டம். ஆனாலும் இந்தியா உட்பட பல நாடுகள் இங்கு ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளன. மேலே படத்தில் காண்பது பிரிட்டிஷ் ஆராய்ச்சிக் குழுவினரின் முகாம் ஆகும்.
அண்டார்டிகா உறைபனிக் கண்டம் என்றாலும் இங்கு மிக ஆழத்தில் பாதாள ஏரிகள் உள்ளன. மொத்தம் 387 பாதாள ஏரிகள். ரஷிய ஆராய்ச்சிக்கூடத்துக்கு கீழே உள்ள வோஸ்டாக் ஏரிதான் மிகப் பெரியது.இதன் நீளம் 250 கிலோ மீட்டர். அகலம் 50 கிலோ மீட்டர். இது உறைபனி மட்டத்திலிருந்து 4 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளது. அவ்வளவு ஆழத்துக்குத் துளை போட்டால் தான் ஏரி நீரை எட்ட முடியும்.
குழாய்களைப் பயன்படுத்தி தரையில் துளையிட்டு நீண்ட உருளைகள் வடிவில் பனிக்கட்டி சாம்பிள்களை எடுப்பதில் பல நாடுகளும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளன. ஆனால் ரஷிய நிபுணர்கள் வழக்கமான பாணியில் துளையிட்டு ஏரி நீர் சாம்பிளை எடுக்க முற்பட்டால் ஏரி நீர் பாதிக்கப்படலாம் என்று பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அண்டார்டிகாவின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படலாம் என்றும் ஆகவே இவ்வித முயற்சியில் ஈடுபடலாகாது என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பிரிட்டிஷ் ஆராய்ச்சிக் குழுவினர் அண்டார்டிகாவில் எல்ஸ்வர்த் பகுதியில் துளையிட்டு அங்குள்ள பாதாள ஏரி நீரின் சாம்பிளை எடுக்கப் போகிறார்கள். பாதாள ஏரியிலிருந்து வண்டலையும் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இவர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவர். இங்கு பனிக்கட்டிக்கு அடியில் அந்த ஏரி சுமார் மூன்று கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளது.
எல்ஸ்வர்த் பகுதியில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் |
சூடான் வெந்நீரைப் பயன்படுத்தி துளையிடப் போவதாகவும் இதனால் ஏரி நீருக்கு அல்லது சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் பிரிட்டிஷ் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாகப் பாடுபட்டு இத்தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதில் அவர்கள் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது.
முதலாவதாக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஹோஸ் பைப் தேவை. அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. துளையிட்டு முடிந்த பிறகு தான் கருவிகள் இறக்கப்படும். கடும் குளிர் பிரதேச்ம் என்பதால் வெந்நீரினால் ஏற்பட்ட ஆழமான துளையில் உள்ள நீர் விரைவில் குளிர்ந்து போக ஆரம்பிக்கும். இதனால் துளை குறுக ஆரம்பிக்கும். துளை முற்றிலுமாக மூடிப் போவதற்குள் எல்லா வேலைகளையும் முடித்தாக வேண்டும். பிரிட்டிஷ் குழுவினரின் கணக்குப்படி துளையிடுவது, சாம்பிள்களை எடுப்பது என எல்லா வேலைகளும் 24 மணி நேரத்துக்குள் முடிந்தாக வேண்டும்.
இருட்டிப் போகிற பிரச்சினை இல்லை. அண்டார்டிகாவில் கிட்டத்தட்ட செப்டம்பர் கடைசியிலிருந்து ஆறு மாத காலம் தொடர்ந்து பகலாக இருக்கும். சூரியன் அடிவானில் தென்படுமே தவிர, மற்றபடி கடும் குளிர் வீசும். துளையிடப் போகும் இடத்தில் குளிர் மைனஸ் 20 டிகிரி அளவில் இருக்கும். பல் வேறு உலோகப் பொருட்களும் கடும் குளிரில் விசித்திரமாகச் செயல்படும்.
கடும் குளிரைத் தாங்கும் வகையில் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றாலும் நடைமுறையில் அவை எப்படிச் செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தவிர, எல்லாப் பணிகளுக்கும் மின்சாரம் தேவை. அண்டார்டிகாவில் மின்சார இணைப்புக்கு எங்கே போவது ? ஆகவே பாட்டரிகளை எடுத்துச் செல்கின்றனர்.
பாதாள ஏரியில் அபூர்வ்மான நுண்ணுயிர்கள் இருக்கலாம். தவிர அந்த நீரை எடுத்துப் பரிசோதிப்பதன் மூலம் அண்டார்டிகாவின் வரலாறு பற்றி மேற்கொண்டு அறிய முடியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆயத்தக் குழுவினர் இந்த மாதம் 14 ந் தேதி அண்டார்டிகாவுக்குப் கிளம்பிவிட்டனர்.அவர்கள் சுமார் 70 டன் எடைக்குப் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். இபபோது போனால் ஆயத்தப் பணிகளை செய்வதற்கே நேரம் சரியாகி விடும். ஆகவே . 2012 ஆம் ஆண்டு அக்டோபர் வாக்கில் தான் பனிக்கட்டியில் துளையிடும் பணி தொடங்கும்.
5 comments:
கடைசி பாராவில் 70 எடைக்கு என உள்ளதே.. அதில் ஏதும் வார்த்தை விடுபட்டுள்ளதா.....
கே.எம் சந்திரசேகரன்
டன் என்ற சொல் இருந்திருக்க வேண்டும். தாங்கள் சுட்டிக்காட்டிய பின்னர் அச் சொல் சேர்க்கப்பட்டு விட்டது. நன்றி
lets we wish them for success...
sir enkku oru snthegam eari watterai eduthu enna seivadu ? enna use ?
தங்களுடைய வலைப்பூவை படித்த பிறகு எனக்கு அறிவியலில் ஆர்வம் மிகுந்தது.
மிக்க நன்றி.
Post a Comment