Oct 16, 2011

வானில் தெரிந்த செயற்கைக்கோள்

Share Subscribe

படம் மார்கோ லாங்புரோக்
நன்றி:spaceweather.com
மேலே உள்ள படத்தில் மெல்லிய ஒளிக்கீறாகத் தெரிவது பூமியைச் சுற்றுகின்ற ஒரு செயற்கைக்கோளின் பாதையாகும். சூரிய ஒளி அந்த செயற்கைக்கோள் மீது விழ அது இவ்விதமாகக் காட்சியளித்தது. ரோசாட் (Rosat)  எனப்படும் இந்த செயற்கைக்கோளை   நெதர்லாந்தைச் சேர்ந்த மார்கோ லாங்புரோக் கடந்த 13 ஆம் தேதி இவ்விதம் படமாக்கினார். வெறும் கண்ணால் பார்த்தாலும் தெரிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.வெறும் கண்ணால் பார்த்தால் வேகமாக நகருகின்ற ஒளிப்புள்ளியாகவே தெரியும். காமிராவில் இது ஒளிக்கீற்றாகப் பதிவாகியுள்ளது.

பொதுவில் செயற்கைக்கோள்கள் பூமியை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகின்றன..மாலையில் இருட்டும் நேரத்தில் ரோசாட் செயற்கைக்கோள்  கிழக்குத் திசையில் கீழே இறங்கிக் கொண்டிருந்த போது இப்படத்தை எடுத்ததாக அவர் சொன்னார். அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்னர் மேற்கு வானை நோக்கினால் அடிவானிலிருந்து இது மேலே வருவதைக் காண இயலும்.

வருகிற நவம்பரில் பூமியில் வந்து விழலாம் என்று கருதப்பட்ட ரோசாட்  செயற்கைக்கோள் இந்த மாதமே வந்து விழலாம் என்று இப்போது சொல்லப்படுகிறது.

1990 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்ட போது 580 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வந்தது. கடந்த ஜூனில் 327 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது.  சூரியனின் சீற்றத்தால் அதன் சுற்றுப்பாதை பாதிக்கப்பட்டது. ஆகவே ரோசாட் இவ்விதம் மேலும் மேலும் பூமியை நோக்கி இறங்கி வருகிறது. இப்போது சுமார் 240 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றுகிறது.  

 பூமியிலிருந்து சுமார் 550 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற ஹப்புல் (Hubble) டெலஸ்கோப் பூமியிலிருந்து சுமார் 370 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றையும் சூரிய உதயத்துக்கு முன்னர் அல்லது சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் வெறும் கண்ணால் ஒளிப் புள்ளியாகக் காண முடியும். அந்த ஒளிப்புள்ளி தொடர்ந்து நகருவதாகக் காட்சி அளிக்கும்.  வானில் எங்கே எப்போது தென்படும் என்பது அவற்றின் சுற்றுப்பாதையைப் பொருத்து மாறுபடும்.

1 comment:

ANGOOR said...

தங்களின் வலைத்தளம் என் போன்ற அறிவியல் விரும்பிகளுக்கு நல்ல தீனி .......
தங்களின் பனி தொடர என் வாழ்த்துக்கள்
அன்புடன்
வேல்தர்மா
ஜேர்மனி
www.devarathirumurai.wordpress.com

Post a Comment