Oct 14, 2011

ராக்கெட் வெற்றி தான். ஆனால்...

Share Subscribe
இந்திய விண்வெளி அமைப்பின் (ISRO) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 12 ஆம் தேதி புதன்கிழமையன்று சென்னைக்கு வடக்கே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து ஒரே பாய்ச்சலில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது .  இந்த நான்கில் மேக(ம்)-டிராபிக்ஸ் செயற்கைக்கோள் மட்டும் ஒரு டன் எடை கொண்டது. மற்ற மூன்றும் எடை குறைந்தவை. பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் இப்போதைய வெற்றி மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே என்றாலும் ராக்கெட் விஷய்த்தில் நாம் இன்னும் தன்னிறைவு பெற்றுவிடவில்லை என்ற கசப்பான உண்மை நம் முன்னே நிற்கிறது.

1993 ஆம் ஆண்டில் தொடங்கி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் (PSLV) இதுவரை 20 தடவை செலுத்தப்பட்டுளளது. இதில் ஒன்றரை தடவை தான் தோல்வி. 1993 ல் முதல் முயற்சியில் முழுத் தோல்வி. 1997 ல் பாதி வெற்றி. 1999 லிருந்து தொடர்ந்து 16  தடவைகளிலும் வெற்றி. ஆக இந்த ராக்கெட் மிக நம்பகமானது என்பது நிரூபணமாகி விட்டது.

ஆனால் நாம் தயாரிக்கின்ற அனைத்து செயற்கைக்கோள்களையும் இந்திய மணனிலிருந்தே செலுத்தும் திறனை நாம் பெற்றுவிட்டோமா என்றால் இல்லை. நாம் தயாரிக்கின்ற செயற்கைக்கோளின் எடை சுமார் ஒன்றரை டன் எடைக்குள்ளாக இருக்குமானால் அதை பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்த முடியும். இந்த ராக்கெட்டின் திறன் அவ்வளவுதான்.

 PSLV ராக்கெட் உயரே பாய்கிறது
 நாமோ டிவி ஒளிபரப்பு உட்பட பல வகையான பணிகளுக்கென சுமார் 3 டன் எடை கொண்ட இன்சாட் வகை செயற்கைக்கோள்களையும் தயாரித்து வருகிறோம். இவற்றை உயரே செலுத்த இந்தியாவிடம் தகுந்த ராக்கெட் கிடையாது. ஆகவே இப்படியான எடை மிக்க செயற்கைக்கோளை நாம் பெரும் செலவில் தென் அமெரிக்காவில் கூரு என்னுமிடத்தில் உள்ள விண்வெளி நிலையத்துக்கு எடுத்துச் செல்கிறோம்.

 அங்கு ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஏரியான் என்னும் தனது சக்திமிக்க ராக்கெட் மூலம் இந்திய செயற்கைக்கோளை செலுத்தித் தருகிறது. இதற்கு நாம் பல கோடி ரூபாய் கட்டணம் செலுத்துகிறோம். இது பல ஆண்டுக்காலமாக நடைபெற்று வருகிறது.

எடை மிக்க செயற்கைக்கோளையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்தும் நோக்கில் நாம் தயாரிக்க முற்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் (GSLV) இன்னும் சிக்கல்களிலிருந்து விடுபடவில்லை. 2001 ல் தொடங்கி ஏழு தடவை செலுத்தியதில் இரண்டு தடவை தான் வெற்றி கண்டோம்.   இந்த ராக்கெட் 2 முதல் 2.5 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்தக்கூடியது.

.இதுவும் போதாது என்பதால் இஸ்ரோ அமைப்பானது ஜி.எஸ்.எல்.வி மார்க்- 3 என்னும் சக்திமிக்க ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இது அடுத்த ஆண்டில் வெள்ளோட்டம் விடப்படும்.இந்த ராக்கெட் மூலம் 4.5 முதல் 5 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்த முடியும்.  இது அடுத்தடுத்து வெற்றி கண்டு மிக நம்பகமானது என நிரூபணமானால் தான் எடை மிக்க செயற்கைக்கோள்களையும் நாமே செலுத்துவதில் தன்னிறைவு நிலையைப் பெறுவோம்.

3 comments:

Anonymous said...

really useful..

thanks
Suresh

சங்கர் நீதிமாணிக்கம் said...

TWITTER மூலமாக இந்த கட்டுரை படிதேன். நல்ல முயற்சி

சங்கர் நீதிமாணிக்கம் said...

TWITTER மூலமாக இந்த கட்டுரை படிதேன். நல்ல முயற்சி

Post a Comment