பூமிக்கு இப்படியான அனுபவம் கடந்த 8 ஆம் தேதி ஏற்பட்டது. வான் புழுதி வழியே பூமி சென்ற போது நுண் துகள்கள் காற்று ம்ண்டலத்தில் நுழைந்தன. அவை தீப்பிடித்து எரிய, வானிலிருந்து எண்ணற்ற ஒளிக் கீற்றுகள் கீழ் நோக்கி இறங்கின. உலகில் சில இடங்களில் இரவு வானில் இது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது.
இந்த ஒளி மழை (Meteor shower) இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த 8 ஆம் தேதி இரவு 9 மணி வாக்கில் நன்கு தெரிந்தது. மணிக்கு 660 வீதம் ஒளிக் கீற்றுகள் கீழே இறங்கின. ஒளி மழை தோன்றிய போது அமெரிக்காவில் பகல். ஆகவே அங்கு தெரியவில்லை. இந்தியாவிலும் தெரியவில்லை.
டிராகோனிட் ஒளிமழை |
இந்த ஒளி மழைக்கு டிராகோனிட் ஒளி மழை (Draconid Shower ) என்று பெயர். வடக்கு வானில் உள்ள சப்த ரிஷி மண்டலத்துக்கு சற்று மேலே டிராகோ எனப்படும் ராசி மண்டலம் உள்ளது. அந்த ராசி மண்டலம் அமைந்த வான் பகுதியிலிருந்து இந்த ஒளி மழை தோன்றியதால் அப் பெயர்.
இது போன்று பல ஒளி மழைகள் உண்டு. ஆண்டு தோறும் ஆக்ஸ்ட் 12 ஆம் தேதி வாக்கில் பெர்சைட் ஒளி மழை தென்படும். லினோனிட் ஒளி மழை நவம்பர் 17 ஆம் தேதி வாக்கில் தெரியும். நகர்புறங்களில் வானில் இவற்றைக் காண்பது கடினம். கிராமப்புறங்களிலும் சரி, ஊருக்கு வெளியே விளக்கு வெளிச்சம் எதுவும் இல்லாத இடங்க்ளில் இருந்து பார்த்தால் சிறப்பாகத் தெரியும்,
எந்த ஒளி மழை எப்போது எங்கெங்கு தெரியும் என்ற விவரத்தை நாஸா போன்ற அமைப்புகள் முன் கூட்டித் தெரிவிக்கின்றன். ஆகவே மேலை நாடுகளில் வான்வியல் ஆர்வலர்கள் இதைக் காண இரவில் வாய்ப்பான இடங்களில் கூடுகின்றனர்.
இரவு வானில் நீங்கள் அபூர்வமாக பிரகாசமான ஒளிக் கீற்று இறங்குவதைப் பார்த்திருக்கலாம். பல்ரும் இதை ‘ நட்சத்திரம் விழுகிறது ; என்று கூறி உடனே பச்சை மரத்தைப் பார்க்க முற்படுவர். தீப்பற்றி ஒளிக் கீற்றாக மாறுவது நுண்ணிய துகள்களே.
பூமியானது அவ்வப்போது அடர்ந்த வான் புழுதி வழியே செல்ல நேரிடுகிறது. இந்த வான் புழுதியை ஏற்படுத்திச் செல்பவை வால் நட்சத்திரங்களே. சூரியனை ஒரு ரவுண்டு சுற்றிச் செல்வதற்காக வால் நட்சத்திரம் ஒன்று வரும் போது அதன் தலைப்பகுதியிலிருந்து -- சாலையில் ஒரு மணல் லாரி மணலை சிந்திச் செல்வது போல -- நுண்ணிய ம்ணல் துணுக்குகள், சிறு கற்கள் ஆகியவை வெளிப்படுகின்றன.
இந்த துகள் தாரை அப்படியே விண்வெளியில் இருக்கும். சூரியனைச் சுற்றும் பூமியானது இத் துகள்கள் நிறைந்த விண் பகுதி வழியே செல்லும் போது அத் துகள்கள் காற்று மண்டலத்தில் நுழைந்து தீப்பற்றுகின்றன. இத் துகள்கள் பூமியில் வந்து விழுவதில்லை.
கடந்த 8 ஆம் தேதி தோன்றிய ஒளி மழைக்கு Comet 21 P / Giacobini-Zinner என்னும் பெயர் கொண்ட வால நட்சத்திரம் விட்டுச் சென்ற புழுதிப் படலமே காரணம். இது சுமார் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைகாட்டிச் செல்கிறது.
3 comments:
ஆகா... astronomy படிக்காமல் போனேனே!! Why cant you remove the word verification while posting comment...
Roaming Raman:
அதை நீக்க முடியவில்லை. Template தான் காரணமா அல்லது Blogspot-ன் புதிய வடிவமைப்பா என்று தெரியவில்லை.
Superb
Post a Comment