நீங்கள் ஒரு கிலோ உருளைக் கிழங்கு வாங்கினால் எல்லாமே ஒரே அளவில் இருப்பது கிடையாது. ஏதோ இரு உருளைக் கிழங்குகள் பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் எடை வித்தியாசம் இருக்கும்.
அணுக்கள் விஷயத்தில் இப்படித்தான். சிறிய யுரேனியக் கட்டியாக இருந்தாலும் அதில அடங்கிய கோடானு கோடி அணுக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. சில யுரேனிய அணுக்கள் அதிக எடை கொண்டவை. அபூர்வமாக வேறு சில யுரேனிய அணுக்கள் சற்றே எடை குறைந்தவை. எடை வித்தியாசத்துக்குக் காரணம் உண்டு.
எல்லா யுரேனிய அணுக்களிலும் சொல்லி வைத்த மாதிரி 92 புரோட்டான்கள் இருக்கும். எலக்ட்ரான்களும் அதே எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் யுரேனிய அணுக்களின் மையத்தில் புரோட்டான்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்ற நியூட்ரான்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு
சிலவற்றில் 143 நியூட்ரான்கள் இருக்கும். இந்த எண்ணிக்கையுடன் புரோட்டான்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 235 வரும். ஆக இந்த வகை அணுக்களுக்கு யுரேனியம்-235 ( சுருக்கமாக U-235) என்று பெயர். ஆனால் யுரேனியக் கட்டியில் பெரும்பாலான அணுக்களில் 146 நியூட்ரான்கள் இருக்கும். இந்த வகை அணுக்களை U-238 என்று குறிப்பிடுவர்.
கூடங்குளம் அணு மின் நிலையம் |
ஒரு யுரேனியக் கட்டியில் U-235 அணுக்களின் சதவிகித அளவை அதிகப்படுத்துவது தான் செறிவேற்றுதல் ஆகும்.செறிவேற்றப்பட்ட யுரேனியத்தை ஆங்கிலத்தில் enriched uranium என்பார்கள்
உலகில் இந்த வித்தை தெரிந்த நாடுகள் இதை மிக ரகசியமாக வைத்துக் கொண்டுள்ளன. காரணம்? ஒரு பெரிய யுரேனிய உருண்டையில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக U-235 அணுக்கள் இருக்குமானால் அது தான் அணுகுண்டு.
அணுமின்சார நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியமானது 4 சதவிகித அளவுக்கு செறிவேற்றப்பட்டதாக இருக்கும்.அதாவது பய்ன்படுத்தப்படும் யுரேனியத்தில் U-235 அணுக்கள் நான்கு சதவிகித அளவுக்கு இருக்கும். உலகில் பெரும்பாலான அணுமின்சார நிலையங்கள் செறிவேற்றப்பட்ட யுரேனியத்தையே பயன்படுத்துகின்றன.
இந்தியாவில் மும்பை அருகே உள்ள தாராப்பூர் அணுமின்சார நிலையத்தின் முதல் இரண்டு யூனிட்டுகள் அமெரிக்க உதவியுடன் அமைக்கப்பட்டவை. இந்த இரண்டிலும் செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள மற்ற அணுமின் நிலையங்கள் அனைத்திலும் சாதாரண யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இப்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்பட இருக்கிறது.
8 comments:
Fist of God கதையில், செறிவேற்றுவது பற்றிய ஒரு நுட்பமான ட்விஸ்ட் இருக்கும். புது முறைகளை ஈராக் உபயோகப்படுத்தும் என அதற்கான தொழிற்சாலைகளை மட்டுமே குறிவைத்து அமெரிக்கா அழிக்க, ஈராக் மிகப்பழமையான சைக்ளோட்ரான் முறையில் செறிவேற்றி அணுகுண்டு தயாரித்ததாக விரியும் ஃபோர்சைத்தின் கற்பனை.
தெளிவான அழகான விளக்கம், நன்றி.
நம்மிடம் செரிவேற்றும் தொழில் நுட்பம் உள்ளதா ???இல்லை அமெரிக்க ரஷ்யா போன்றவை செரிவேற்று தருகிறதா ?? தோரியம் பயன்படதலாம் என்கின்றனரே அது எப்படி ??கல்பாக்கம் அரிசி நிலையத்தில் என்ன விதமான ஆராய்ச்சி நடக்கிறது ??
நவீன்: முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்: இந்த விவரத்தை இந்திய அரசாங்கம் பொதுவில் தெரிவிப்பதில்லை.
மற்ற கேள்விகளுக்கான பதில்கள் பின்னர் கட்டுரையாகவே வெளிவரலாம்.
அருமையான விளக்கம் ! தேவையான நேரத்தில் சிறப்பான பதிவு!
Excellant explanations, Thanks
Kasali
யுரேனியம் அடங்கிய தாதுவிலிருந்து யுரேனிய உலோகத்தைப் பிரித்து எடுக்கிறார்கள். எந்த யுரேனியக் கட்டியிலும் யுரேனியம் 238 அணுக்களும் யுரேனிய 215 அணுக்களும் அடங்கியிருக்கும்.ஆனால் யுரேனிய 235 அணுக்கள் மிக அற்ப அளவில் தான் இருக்கும். யுரேனியக் கட்டியிலிருந்து யுரேனியம் 235 அணுக்களை மட்டும் தனியே பிரித்து எடுப்பது மிகவும் கடினமான வேலையாகும். உலகில் ஆஸ்திரேலியா, கனடா, க்ஜாகஸ்தான் முதலிய நாடுகளில் யுரேனியம் நிறையக் கிடைக்கிறது.இந்தியாவில் யுரேனியம் அதிகம் கிடைப்பதில்லை.ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய இந்தியா முயன்று வருகிறது.
Kasali
இந்த மூன்றுமே உலோகங்கள் அத்துடன் அவை மூலகங்கள். தோரியத்தில் 90 புரோட்டான்கள் உள்ளன. யுரேனியத்தில் 92 புரோட்டான்கள் உள்ளன.புளூட்டோனியத்தில் 94 புரோட்டான்கள் உள்ளன. இவற்றுக்கு இடையில் இது தான் முக்கிய வித்தியாசம்.
யுரேனியம் 235 அணுக்கள் அடங்கிய ஒரு கட்டியை நோக்கி நியூட்ரானை செலுத்தினால் அந்த அணுக்கள் பிளவு பட்டு அவற்றிலிருந்து மேலும் நியூட்ரான்கள் வெளிப்படும். அவை இதர அணுக்களைத் தாக்கும் போது அவற்றிலிருந்து மேலும் நியூட்ரான்கள் வெளிப்படும். அவையும் இதே போல பிற அணுக்களைத் தாக்கும்.இப்படியான நிகழ்ச்சியின் போது ஆற்றல் வெளிப்படும். இதுவே அணுக்கரு தொடர் பிளவு (Chain reaction) எனப்படும்.
தோரியத்தை விட யுரேனியம் பத்து மடங்கு வீரியமானது.. தோரியம் குமரி யில் மணவாளகுறிச்சி பகுதியில் கடல் மணலிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள்..யுரேனியம் இந்தியா ஆஸ்திரேலியாவிலிருந்து கொள்முதல் செய்கிறது போக ரஷ்யா அமேரிக்கா சீனா சில கிழக்காசியா நாடுகளிலும் கிடைக்கிறது
Post a Comment