பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதால் உலகில் கடல் மட்டம் மெல்ல உயர ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக வருகிற சுமார் 100 ஆண்டுகளில் கடலில் மூழ்கிப் போகின்ற ஆபத்தை எதிர்ப்பட்டுள்ள தீவு நாடுகளில் துவாலு ஒன்றாகும். தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள துவாலு மொத்தம் 9 தீவுகளை உள்ளடக்கியது. நிலப் பரப்பு 26 சதுர கிலோ மீட்டர். இது கிட்டத்தட்ட கடலூர் டவுனின் பரப்பளவுக்குச் சமம். மக்கள் தொகை சுமார் 12 ஆயிரம். இத் தீவுகளில் மிக உயரமான இடம் என்பது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5 மீட்டர்.
எதிர்காலம் இருள் மயமானது என்பதால் மக்களில் பலர் இப்போதே எந்த நாட்டுக்கு குடி பெயருவது சிந்திக்கத் தொடங்கி விட்டனர். துவாலு அரசும் இந்த வழியில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
துவாலு தீவுக்கூட்டம் |
இப்போது துவாலு நாட்டுக்கு கடும் தண்ணீர் பிரச்சினை. கடந்த ஆறு மாத காலமாக மழை இல்லை.ஆகவே கடல் நீர் கசிந்து நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் நிலத்தடி நீரைக் குடிக்கலாகாது என அரசு எச்சரித்துள்ளது. அண்மையில் சில கால்நடைகள் மரித்ததற்கு நிலத்தடி நீரே காரணம் என்று சொல்லப்படுகிறது. குடி நீர் பற்றாக்குறையால் தலைநகர் ஃபுனாஃபுடியில் குடி நீர் ரேஷன் அமலபடுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலக் கவிஞர் ஒருவரின் நீண்டதொரு கவிதையில் ’எங்கு நோக்கினும் தண்ணீர் தண்ணீர். அருந்துவதற்கோர் சொட்டு இல்லை’ என்ற வரிகள் வரும். துவாலுவில் இப்போது அந்த நிலைமைதான்.
நிலைமையைச் சமாளிக்க துவாலு அரசு நெருக்கடி நிலையை அமல்படுத்தி அண்டை நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து கடல் நீரைக் குடி நீராக்குவதற்குப் பெரியதும் சிறியதுமான யந்திரங்கள் அவசர அடிப்படையில் விமான மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன்.
காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் உட்பட பசுமைக் குடில் வாயுக்களின் சேர்மானம் அதிகரித்து அதன் விளைவாக பூமியின் சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருவதற்குப் பணக்கார நாடுகளே காரணம். ஆனால் எளிமையாக வாழும் எங்கள் தலையில் தான் எல்லாம் வந்து விடிகிறது என்று துவாலு மக்கள் வருந்துகின்றனர்.
‘ எங்கள் நாட்டு மக்கள் வந்து குடியேற அனுமதிப்பீர்களா ‘ என்று கேட்காத வரை எல்லா உதவியையும் அளிக்க ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் த்யாராக உள்ளன. குடியேற்றம் என்பது பற்றிப் பேசவே ஆஸ்திரேலியா மறுக்கிறது. நியூசிலாந்தோ ஆண்டுக்கு 75 பேரை அனுமதிப்போம் என்று கூறி அதற்கு நடைமுறை சாத்தியமற்ற பல நிபந்தனைகளை விதிக்கிறது.
நச்சு புகையை கட்டுபடுத்தாவிடில் நாளை நமக்கும் இந்த நிலை தான்.
ReplyDeleteவிழிப்புணர்வூட்டும் பதிவு .
நன்றி
ReplyDelete