Pages

Oct 4, 2011

சாக்கடலில் உயிரினம்

     சாக்கடலில் (Dead Sea) ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடியாது. அக்கடலில் விழுபவர் மிதப்பார். நீங்கள் அக் கடலில் மிதந்தபடி பேப்பர் படிக்க முடியும். உணமையில் அது சாகமுடியாத கடல். சாக்கடல் நீரில் தாங்க முடியாத அளவுக்கு உப்புக்கள் உள்ளன. இதனால் நீரின் அடர்த்தி அதிகம். ஆகவே தான் ஒருவர் அக் கடலில் மிதக்க முடிகிறது.   உப்பு அளவு அதிகம் என்பதால் சாக்கடலில் மீன், நண்டு, ஆமை போன்று எவ்வித உயிரினமும் கிடையாது. எனவே தான் அக் கடலுக்கு அப் பெயர். ஆனால் சாக்கடலுக்கு அடியில் அடை அடையாக நுண்ணுயிர் உள்ளதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுளள்து.

சாக்கடலில் மிதக்கலாம்
     ஜெர்மனி, மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு நிபுணர்கள் சாக்கடலுக்குள் இறங்கி ஆராய்ந்த போது தான் கடலுக்கு அடியில் நுண்ணுயிர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  இது உப்பற்ற நல்ல நீராக உள்ளது. இதன் சாம்பிளை அவர்கள் பாட்டிலில் சேகரித்து எடுத்து வந்துள்ளனர்.

     கடல், ஏரி என எந்த நீர் நிலையிலும் ஒருவர் எளிதில் நீருக்குள் இறங்க முடியும். நீரில் விழுந்தால் மிதக்கத்தான் செய்வார் என்ற கடலுக்குள் எப்படி இறங்குவது? ஆகவே நிபுணர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலுடன் 40 கிலோ எடையைக் கட்டிக் கொண்டனர்.

      ஸ்குபா டைவிங் உடையை அணிந்து கொண்டு இறங்கினர் என்றாலும் விசேஷ ஏற்பாடாக அவர்கள் முகத்தை முற்றிலும் மறைக்கின்ற முக மூடியை அணிந்து கொள்ள வேண்டியிருந்தது. சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு.  இந்த நிபுணர்கள் மறுபடி இக் கடலுக்குள் இறங்கி ஆராயத் திட்டமிட்டுள்ளனர்.

     சாக்கடலின் நீரிலும் சேற்றிலும் விசேஷ மருத்துவ குணங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. இச் சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர். சாக்கடல் பொதுவில் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

      சாக்கடல் ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு நடுவே நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டதாக அமைந்துள்ளது.  ஜோர்டான் நதி இக் கடலில் வந்து கலக்கிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பாசனத்துக்காகவும் குடி நீர் தேவைக்காகவும் நதி மீது இஸ்ரேலும் ஜோர்டானும் பல அணைத் திட்டங்களை மேற்கொண்டன. ஆகவே ஜோர்டான் நதி மூலம் சாக்கடலுக்கு வருகின்ற நீரின் அளவு குறைந்து போய் விட்டது. ஆகவே சாக்கடல் சுருங்கி வருகிறது. சாக்கடலின் நீளம் 67 கிலோ மீட்டர். அகலம் 18 கிலோ மீட்டர். அதிக பட்ச ஆழம் 370 மீட்டர்.

No comments:

Post a Comment